இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும், தம்முடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு -– செலவுத் திட்ட விவாதத்தின் நிறைவில் பதிலுரை ஆற்றியபோதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். கூடவே இன்னொரு விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளிடம் தீர்வைத் தேடித் திரிய வேண்டாம் என்றும், உள்நாட்டில் தீர்வைப் பெறுவதற்கு முன்வருமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதுபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அவரது அரசாங்கமும் அழைப்பு விடுப்பது ஒன்றும் இது தான் முதன்முறையல்ல.
ஆனால், இதற்கு முந்திய அழைப்புகள் விடுக்கப்பட்ட காலச் சூழலுக்கும் தற்போதைய சூழலுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.
2014ம் ஆண்டு இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ள பேச்சுக்கான அழைப்புக் குறித்து, பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன.
ஏனென்றால், இதுவரை அரசாங்கம் தமிழர் பிரச்சினையை நியாயமாகத் தீர்க்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் செயற்படவோ, அதற்கான முயற்சிகளில் ஈடுபடவோ இல்லை.
விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைத் தருவதாக கூறிவந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.
2011ம் ஆண்டு வரை இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு தம்மிடம் உள்ளதாகக் கூறிவந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பின்னர், தன்னிடம் தீர்வு ஏதுமில்லை என்று கையை விரித்தது மட்டுமன்றி, தெரிவுக்குழுவே தீர்வைத் தேட வேண்டும் என்றும் அறிவித்தார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணப்போவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும், அது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்பதைப் புரிந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் இணைந்து கொள்ளவில்லை. அதையே காரணமாக வைத்து ஐ.தே.கவும் ஜே.வி.பியும் புறக்கணித்தன.
இதனால், நாடாளுமன்றத் தெரிவுக்குழு பயனற்ற ஒன்றாக இன்றும் பெயரளவுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் மிரட்டிக் கூடப் பார்த்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வராமல் போனால், அரசதரப்பு பிரதிநிதிகளே கூடி ஆராய்ந்து ஒரு முடிவை எடுப்பார்கள் என்று அரசாங்கம் மிரட்டிய போதிலும் அதற்கு கூட்டமைப்பு மசியவில்லை.
அதேவேளை, அரசாங்கமும் தனியாக தெரிவுக்குழுவைக் கூட்டி ஒரு தீர்வை எட்டத் தயாராகவும் இருக்கவில்லை. ஏனென்றால், அவ்வாறு அரசாங்கம் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்தால், அதன் விளைவுகள் அரசாங்கத்தையே பாதிக்கும்.
எனவேதான், தெரிவுக்குழுவை கைவிடவும் முடியாமல், அதனைச் செயற்படுத்தவும் முடியாமல் இக்கட்டில் சிக்கியிருக்கிறது.
இந்தநிலையில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், அரசாங்கம் அடுத்த ஆண்டில் பலத்த சவால்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிரான அடுத்தகட்ட நகர்வுகளில் மேற்குலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
வரும் மார்ச் மாத அமர்வில் இலங்கையை எப்படியாவது ஒரு வழிக்குக் கொண்டு வந்து விடுவதில் மேற்கு நாடுகள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.
எனவே, மார்ச் மாதத்துக்கு முன்னதாக எதையாவது செய்து, ஜெனீவாவில் தம்மைக் காப்பாற்ற முனைகிறது அரசாங்கம். இது ஒரு காரணம்.
இரண்டாவது காரணம், அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தும் திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத் தேர்தலை இனிமேல் அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னிறுத்தி எதிர்கொள்ள முடியாது.
அந்த மாயை மெல்ல மெல்ல உடையத் தொடங்கி விட்ட நிலையில், அரசாங்கத்துக்கு புதிய உபாயம் ஒன்றைத் தேடவேண்டிய சிக்கல் உள் ளது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதானால், தமிழ்வாக்குகளை கவர எதையாவது செய்தாக வேண்டிய நெருக்கடி அரசாங்கத்துக்கு உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தமிழ் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் அதனை தெளிவாகவே எடுத்துக் காட்டியுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்மக்களுக்கு அள்ளி வீசிய வாக்குறுதிகள் பல இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
அல்லது மீள்குடியமர்வு போன்ற பல வாக்குறுதிகள், குறிக்கப்பட்ட கால எல்லைகளுக்கு அப்பால் நீண்ட இழுபறிகளின் பின்னரே நிறைவேற்றப்பட்டன.
இத்தகைய கட்டத்தில், அரசாங்கத்துக்கு எதிரான அலை தமிழ் மக்களிடம் தொடர்ந்து நீடித்து வருவதை, வடக்கு மாகாண சபைத் தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது.
எனவே, அடுத்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை அரசாங்கம் உறுதிப்படுத்தினால், தமிழர்களின் வாக்குகளை கவர வேண்டிய தேவை நிச்சயம் உள்ளது.
அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவை பெறுவது தான் ஒரே வழி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதன் மூலம் அதற்கான கதவுகளை மெல்லத் திறக்கலாம்.
இப்படிப் பல தேவைகள் அரசாங்கத்துக்கு உள்ள நிலையில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ளது அரசாங்கம்.
ஆனால், இந்த அழைப்பு தமிழ் மக்களுக்கு நம்பகத்துக்குரியதொன்றாக இருக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் தமிழர்களை அரசாங்கம் தமது தேவைகளுக்கே பயன்படுத்தி வந்துள்ளது. எனவே, இந்த அழைப்பில் தமிழர் தரப்பு சந்தேகம் கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
அதனால் தான், மிக அவதானமாக, ஆக்கபூர்வமாக அரசாங்கம் பேச முன்வந்தால் அதுபற்றிப் பரிசீலிக்கலாம் என்று சம்பந்தன் கூறியுள்ளார்.
அவர் அவ்வாறு கூறியிருந்தாலும், இலகுவாக அவரோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அரசாங்கத்தின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளமாட்டார்கள் என்றே நம்பலாம்.
ஏனென்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு தீர்வைப் பெறுவதற்கு விருப்பம் கொண்டிருப்பாரேயானால், அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன.
ஆனால், அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. குறிப்பாக, வடக்கு மாகாண சபையை அவரோ, அவரது கட்டுப்பாட்டில் உள்ள ஆளுநரோ சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கவில்லை.
இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு முன்னர், வடக்கு மாகாணசபை மீது செலுத்தும் ஆதிக்கத்தை குறைத்து, ஆளுநரை மாற்றி சுமுகமானதொரு சூழலை அவரால் உருவாக்க முடியும்.
அத்தகையதொரு நிலையை ஏற்படுத்தாமல், வெறும் பேச்சுப் பொறி ஒன்றை வைத்து அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விழுத்தலாம் என்று கனவு காண்கிறது அரசாங்கம்.
ஏற்கனவே இதுபோன்ற பொறியில் சிக்கியே வெளிவந்தது என்பதால் அவ்வளவு இலகுவாக இதில் கூட்டமைப்பு விழுந்து விடாது.
வவுனியாவில் நடந்த கூட்டமைப்புத் தலைவர்களின் கூட்டத்தில், எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடருக்கு முன்னதாக, அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதில்லை என்று எடுக்கப்பட்டுள்ள முடிவு இதனை நன்றாகவே உறுதிப்படுத்துகிறது.
சத்ரியன்
0 Responses to மீண்டும் பேச்சுப் பொறி! நழுவும் தமிழ் கூட்டமைப்பு - சத்ரியன்