Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்கள் மற்றும் மாகாண சபைக்கான தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு வந்த ஜனநாயக மக்கள் முன்னணி எதிர்வரும் வருடம் நடைபெறவுள்ள மேல் மாகாண சபைக்கான தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு முடிவெடுத்துள்ளது.

எனினும், எதிர்க்கட்சிகள் கூட்டணியாக போட்டியிடும் தீர்மானத்துக்கு வந்தால் தனித்து போட்டியிடுவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவை மீள்பரிசீலனை செய்யவும் தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் அரசியற்குழு அறிவித்துள்ளது.

 கொழும்பிலுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில் தனித்து போட்டியிடும். கட்சியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்ட தேர்தலில் களமிறங்கி மேல்மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிடும் எமது வேட்பாளர் அணியினருக்கு தலைமை தாங்குவார்  என்று அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

பலமான எதிரணி உருவாகுமானால் தற்போது ஆட்சியிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை ஆறு மாதத்தில் தோற்கடிக்க முடியும். பொது எதிரணி அமைக்க ஜனாதிபதி தேர்தல் அல்லது பொது தேர்தல் வரை காத்திருக்க தேவையில்லை. இந்த மாகாண சபை தேர்தல்கள் மூலமாகவே இந்த அரசை வீழ்த்தும் முயற்சியை ஆரம்பிக்கலாம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் ஜனநாயக மக்கள் முன்னணி அதில் பங்கெடுக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட்ட ஜ.ம.மு; மேல் மாகாண தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com