Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.மாவட்டத்தினில் பாதாள உலக கும்பல் ஒன்று இருப்பது போன்றும் அதுவே இதுவரை நடந்த கடத்தல்கள் கொள்ளைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டவர்களென கூறி அனைத்தினையும் மூடி மறைக்க இலங்கை அரசு புதிய நாடகமொன்றை அரங்கேற்ற தொடங்கியுள்ளது.இதனிடையே இத்தகைய கும்பல்களின் பின்னணியினில் இராணுவ புலனாய்வு பிரிவினர் இருப்பதாக தாம் சந்தேகம் கொண்டுள்ளதாக கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ள கும்பலிடம் புத்தம் புதிதான கைக்குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையினில் அத்தகைய புத்தம் புது கைக்குண்டுகள் எவரிடமிருக்குமெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.அதிலும் அவ்வாறான கும்பல்களிடம் கைக்குண்டுகள் இருப்பது போன்று கூறுவது எதிர்காலம் தொடர்பான அச்சமான சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே யாழ்.மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும்  'ஆவா' என்ற 9 பேர் அடங்கிய குழுவொன்றை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட குழுவிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், 12 வாள்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்றும் அவர்கள் குறிப்பிடடுள்ளனர். 

குடாநாட்டு ஊடகவியலாளர்களினில் ஓரு பகுதியினர் இன்று பொலிஸ் வாகனங்களினில் ஏற்றப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரிகையாளார் மாநாடொன்றும் நடத்தப்பட்டிருந்தது.அங்கு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறிக்கொண்ட ஆயுதங்கள் காண்பிக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களான இளைஞர்களை சிறைக்கூண்டுகளுள் பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

அங்கு மேலும் தெரிவிக்கப்படுகையினில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள்  புகுந்துள்ள மேற்படி 'ஆவா' குழு, அவ்வீட்டிலிருந்தவர்களை வாளால் வெட்டியும், வீட்டு ஜன்னல்களையும் உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சம்பவ தினமே சுன்னாகம் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ்வாறான கொலை, கொள்ளைச் சம்பவங்களை  'ஆவா' எனப்படும் ஒரு குழுவே மேற்கொண்டு வருவதாகவும் அக்குழுவுக்கு இணுவில் பகுதியினைச் சேர்ந்த குமரேசன் வினோதன் (21) (ஆவா வினோத்) என்ற இளைஞனே தலைமை தாங்குவதாகவும் தெரியவந்ததாக கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

இதனையடுத்து, அக்குழுவின் தலைவர் உட்பட 9பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஆயுத உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, யாழ். மாவட்டத்தில் பல கொள்ளை, கொலைகள், கப்பம் கோரல், வீடு புகுந்து ஆட்களை வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரியவந்ததாக பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இவர்கள் பெருமளவான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த போதிலும் பொதுமக்கள் அச்சம் காரணமாக எந்தவொரு பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்யவில்லை என்று கூறிய பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயக்கொடி, இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறையிடுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டாராம்;.

அத்துடன், இந்தக் குழுவில் இன்னும் 7 அல்லது 8பேர் கொண்ட சந்தேகநபர்கள் இருக்கலாம் என்றுத் அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

0 Responses to யாழினில் தமிழ் பாதாளக் கும்பலாம்! ரீல் விடுகின்றது இலங்கை அரசு!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com