Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகளிற்கு உதவியான பொய்க்குற்றச்சாட்டினில் சிறையினில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரான சுப்பிரமணியம் வீரலிங்கத்தினை மரணமமடைந்துள்ள மகனினது இறுதிக்கிரியைகளினிலேனும் கலந்து கொள்ள அனுமதி கோரியுள்ளார் அவரது மனைவி. கிளிநொச்சியில் திடீர் மரணமடைந்த தன்னுடைய 14 வயதான மகனின் இறுதிக்கிரியைகளில் பங்குகொள்ள, கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான தமது கணவரை அனுமதிக்குமாறு கிளிநொச்சியைச் சேர்ந்த சிவாஜினி வீரலிங்கம் மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் நீண்டகாலமாக தவித்துக்கொண்டிருந்த மகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தலைசுற்றி விழுந்து மரணமடைந்ததாகவும், இதனால் தமது குடும்பம் மிகவும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தாயாரான சிவாஜினி மஹிந்தவிற்கு அனுப்பிவைத்திருக்கும் அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த 48 வயதுடைய சுப்பிரமணியம் வீரலிங்கம் என்பவரின் மகனான நிதர்சனே நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் மரணத்தைச் சந்தித்திருக்கின்றார்.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தில் கைதான இவர் கடந்த ஐந்து வருட காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரது மூத்த மகனான நிதர்சனே ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்திருக்கின்றார். இவரது ஏனைய 3 பிள்ளைகளும் பெண்களாவர். வீரலிங்கம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்போது மூத்த மகனும் மரணமடைந்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்கள். 'என்னுடைய 14 வயதான மகனைப் பறிகொடுத்து தவித்துக்கொண்டு நிற்கின்றேன். தயவு செய்து என்னுடைய கணவரை இப்போதாவது விடுதலை செய்யுங்கள். அவர் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். என்னுடைய மூத்த மகன் தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் பல வருடகாலமாக தவித்துக்கொண்டு இருந்தவர். திடீரென தலைசுற்றி விழுந்து ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்திருக்கின்றார். இதனால் எமது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மகனின் இறுதிக் கிரியைகளில் பங்குகொள்வதற்காவது எனது கணரை விடுதலை செய்யுங்கள்' என மனைவி உருக்கமாகக்கோரியுள்ளார்.

இல.1108, திருநகர் தெற்கு, கிளிநொச்சியைச் சேர்ந்த திரு.வீரலிங்கம் மற்றும் திருமதி சிவாஜினி வீரலிங்கம் ஆகியோரின் மகன் வீ.நிதர்சன் கடந்த 05.01.2014 ஞாயிறன்று திடீரென மயங்கி விழுந்து மரணமுற்றுள்ளார். குடும்பத்தின் ஒரேயொரு ஆண்பிள்ளையும் குடும்பத்தின் மூத்தவருமான இவர் தனது பதினாறு(16) வயதிலியே குடும்பப்பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இவரது சகோதரிகளான நிதுர்சிகா (15வயது), யதுர்வினா (13வயது) மற்றும் கதுர்சிகா (6வயது) ஆகியோரின் படிப்புச் செலவு உட்பட தாயையும் குடும்பத்தையும் ஓரளவிற்குப் பட்டினியின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக இவர் தனது படிப்பைத் தியாகம் செய்து தினக்கூலி வேலைசெய்து வந்தார். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் இவரது தந்தை வீரலிங்கம் கைதுசெய்யப்பட்டு எதுவித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது தாய் கூறுகின்றார்.



0 Responses to மகனிற்கு அஞ்சலி செலுத்தவேனும் தந்தையினை விடுங்கள்! தமிழ் அரசியற்கைதியின் மனைவி வேண்டுகோள்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com