Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா அரசை இனப் படுகொலைக் குற்றச் சாட்டிலிருந்து பாதுகாக்கும் தனது திட்டத்தை கச்சிதமாக நகர்த்தும் கூட்டமைப்பு கடந்த டிசம்பர் 10ம் திகதி ஜேர்மனி நாட்டின் பிறேமன் நகரில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாய (Permanent Peoples’ Tribunal) அமர்வில்  சர்வதேச அளவில் இன அழிப்பு பற்றிய சட்ட விடயத்தில் புகழ்பெற்ற நிபுணர்கள்   இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்று தீர்ப்பு வழங்கியிருந்தனர்.

அத்தீர்ப்பு வெளியான சில நாட்களில்  அவசர அவசரமாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்று கட்சித் தலைமையினால்  வவுனியாவில் கூட்டப்பட்டிருந்தது.

அக்கூட்டத்தில் கருத்துக் கூறியிருந்த கூட்டமைப்பின் தலைமைகள் இன அழிப்பு என்ற வார்தையை பயன்படுத்தக் கூடாது என்றும் அது ஒரு சட்டச் சிக்கலான வார்த்தைப் பிரயோகம் என்று கட்சி உறுப்பினர்களுக்கு புத்திமதி கூறியுள்ளனார்.

அதன்போது குறுக்கிட்ட அனந்தி சசிதரன் அவர்கள் கடந்த வாரம் ஜேர்மனியில் இடம்பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்திற்கு சாட்சியமளிப்பதற்காக நானும் சென்றிருந்தேன் அங்கு இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பு என்று தீர்ப்பளித்துள்ளனர். இதன் பின்னர் நாம் ஏன் இனப்படுகொலை என்று கூறுவதற்கு தயங்க வேண்டும். நடந்தது இனப்படுகொலைதான் அதனை நான் எந்த இடத்திலும் துணிந்து கூறுவேன் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார். ஆனாலும் அவரது கருத்த கூட்டமைப்புத் தலைவார்களான குறிப்பாக சர்வதேச சமூகத்தினரை சந்திக்கும் முக்கிய தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்றோரது காதில் விழவில்லை.

இச் சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் நிறைவுறும் நிலையில் 27-1-2014 அன்று வடமாகாண சபையின் 5ஆவது அமர்வு  கைதடி முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன்போது தமிழ் மக்களுக்கு இடம்பெற்றது இன அழிப்பு என்றும், அதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் கோரும் தீர்மானம் ஒன்றினை சபையில் நிறைவேற்றுவதற்கு, மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரால் சபையில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அதில் ’’திட்டமிட்ட இன அழிப்பு’’  தொடர்பிரான சொற்பதங்கள்  பயன்படுத்தப்பட்டிருந்தன.

அவ்வாறான பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் மக்களது நலன்களுக்கு மாறாக தம்பாட்டில் முடிவெடுத்து தனித்து ஓடும்  கூட்டமைப்புத் தலைமையின் நிகழ்ச்சி நிரலுக்கு கட்டுப் போடலாம் என்றும் இவர்கள் கருதியிருக்கலாம்.

ஆனாலும்  அந்தப் பிரேரணை அங்கு வரும்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன், அந்த சொற்களுடன் தீர்மானம் நிறைவேறினால் இலங்கை அரசுக்கு(State) நெருக்கடி ஏற்படும் என்பதனாலோ என்னவோ உடனே நீதியரசராக மாறி வியாக்கியானம் அளித்துள்ளார். அதாவது இன அழிப்பு என்ற சொற்பதத்தை பயன்படுத்தினால் சட்டச்சிக்கல் உருவாகலாம் என்று கூறியுள்ளார். அதாவது இன அழிப்பு என்ற வார்தையை பயன்படுத்தக் கூடாது என்றும் அது ஒரு சட்டச் சிக்கலான வார்த்தைப் பிரயோகம். சர்வதேச விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இன அழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்த முடியும் என வியாக்கியானம் அளித்துள்ளார்.

அங்கிருந்த உறுப்பினர்களும் அவர் முன்னாள் நீதியரசர் என்பதால் சட்டம் தொடர்பில் அவர் சொல்வதெல்லாம் உண்மையாகவும் சரியாகவும் இருக்கும் என்று நம்பினார்களோ அல்லது சட்டப்பிரச்சினை வந்துவிடும் என்று அஞ்சினார்களோ தெரியாது அனைத்து உறுப்பினர்களும் அமைதியாகிவிட இன அழிப்பு என்ற சொல் நீக்கப்பட ”இன அழிப்புக்கு ஒப்பான” என்ற சொல்ல புகுத்தப்பட்டது. தீர்மானம் நிறைவேறியது.

இனஅழிப்பு என்ற சொல்லை நீக்கி புலம்பெயர் தமிழ் மக்களதும், தமிழக மக்களதும் இன அழிப்பு விசாரணைக் கோரிக்கையை முடக்கும் வகையிலும், இலங்கை அரசை பாதுகாக்கும் வகையிலும்  ”இன அழிப்புக்கு ஒப்பானது” என்ற சொற்பதத்துடன் உறுப்பினர்களை ஏமாற்றி தீர்மானம் நிறைவேறச் செய்துள்ளார் சட்டமேதை என்று விடயமறிந்தவர்கள் கொதிப்படைந்துள்ளனார்.

இதனால் புலம்பெயர் தமிழ் மக்களோ அல்லது தமிழக மக்களோ இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை கோரும்போது தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையே இன அழிப்பு என்று கூறவில்லை நீங்கள் எவ்வாறு இன அழிப்பு என்று கூற முடியும் என்று குதர்க்கம் பேசி அவர்களது போராட்டங்களையும் கோரிக்கைகளையும் முடக்குவதற்கான ஆபத்தும் உருவாக்கப்பட்டுவிட்டது.

ஏற்கனவே இங்குள்ள பிரச்சினை புருசன் பெண்டில் பிரச்சினை என்று கூறி தமிழக எழுச்சியை அடக்க துணை புரிந்த விக்னேஸ்வரன் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருந்தார்.

தற்போது சபை உறுப்பினர்களுடன் தானும் இருப்பது போன்று காட்டிக்கொண்டு அவர்களையே ஏமாற்றி இக்காரியத்தை அரங்கேற்றியுள்ளார். கடந்த டிசம்பர் 10ம் திகதி ஜேர்மனி நாட்டின் பிறேமன் நகரில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாய (Permanent Peoples’ Tribunal) அமர்வில்  சர்வதேச அளவில் இன அழிப்பு பற்றிய சட்ட விடயத்தில் புகழ்பெற்றவர்கள் நிபுணர்கள்  இலங்கையில் நடைபெற்றது இன அழிப்பு என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். அத்தீர்ப்பு வருவதற்கு ஏதுவாக இலங்கையிலிருந்து வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நேரில் சென்று சாட்சியம் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் கூறுவது போன்று சட்டப் பிரச்சினை ஏற்படுவதாக இருந்தால் தேர்தல் மேடைகளில் வார்த்தைக்கு வார்த்தை  இனஅழிப்பு என்றும் சர்வதேச விசாரணை என்றும் பேசியபோது ஏற்பட்டிருக்க வேண்டும். தேர்தல் காலங்களில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று சிலர் கருதுகின்றனர். தேர்தல் மேடைகளில் சில உறுப்பினர்கள்  தமிழீழம் என்று பேசும் போது அவர்  தனிநாடு என்று பேசுகின்றாரென மிகப் பெருமளவான அப்பாவிகள் தம்பாட்டில் கற்பனை செய்தவாறு தேர்தல் காலத்தில் எது வேண்டுமானாலும் பேசலாம் சட்டப்பிரச்சினை வராது என்று தவறாக விளங்கிக் கொள்கின்றனர். ஆனால் அப்படியல்ல தேர்தல் மேடையில் யாராவது ஒருவர் தனிநாடு உருவாக்குவேன் என்று கூறியிருந்தால் அந்த இடத்தில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டு 6ம் திருத்தத்தின் கீழ் அடைக்கப்பட்டிருப்பார்.

ஜோர்மனியில் இடம்பெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினால் இனஅழிப்பு என்ற தீர்ப்பு வழங்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை ஒன்றுக்கான அழுத்தங்களை ஐ.நா மீது சர்வதேச நிபுணர்களது உதவியுடன் புலம்பெயர் தமிழர்கள் ஏற்படுத்த தொடங்கியுள்ள நிலையில் தமிழ் மக்களால் 75வீத வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையானது இன அழிப்பு என்ற சொல்லை நீக்கி தீர்மானம் எடுத்துள்ளமையானது  அந்த நிரந்தர தீர்ப்பயாயம் தனது அடுத்த கட்டத்தை நோக்கி நகரவிடாது முடக்கப்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன அழிப்புத் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தியும் தீர்மானம் ஒன்றினை கொண்டுவர முயற்சி செய்த அனந்தி எழிலன் மற்றும் சிவாஜலிங்கம் ஆகியோரின் செயற்பாடு பாராட்டுக்குரியது. ஆனாலும் அவர்கள் விக்னேஸ்வரன் போன்றவர்கள் தொடர்பாக அதிகம் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது என்பதனையும் இப்பத்தியில் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

பரந்தனிலிருந்து நல்லவன்

0 Responses to தமது திட்டத்தை கச்சிதமாக நகர்த்தும் கூட்டமைப்புத் தலைமை! - பரந்தனிலிருந்து நல்லவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com