Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும், சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்க காரில் பயணித்துக் கொண்டிருந்த போது கல்சிசையில் (கொழும்பு) மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய கொலைக்கும்பலினால் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

இலங்கையில் ஆயுத மோதல்கள் உக்கிரம் பெற்றிருந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி முற்பகலில் அந்த கோரமான செய்தி சக ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஊடகப் பரப்பில் தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றும் பலருக்கு முன்னோடியாக விளங்கி சிரேஷ்ட ஊடகவியலாளன் ஒருவன் கொல்லப்பட்ட செய்தி மீண்டும் மீண்டும் ஊடக அடக்குமுறையுள்ள தேசமொன்றில் இயங்குகிறீர்கள் என்ற தோரணையில் ஊடக போராளிகளின் காதிலும் உரக்கச் சொல்லப்பட்டது.


இலங்கையின் ஊடக சுதந்திரம் ஆயுதம் தாங்கியவர்களினாலும், அதிகாரத்திலுள்ளவர்களினாலும் அடக்கம் செய்யப்பட்ட பின்னும் துணிந்து போராடிய ஊடகப் போராளிகள் அவ்வப்போது துப்பாக்கியின் கோரப்பசிக்கு இரையாக்கப்பட்டனர். அல்லது வெள்ளைவான் கும்பல்களினால் இருக்கின்ற இடம்தெரியாமல் அகற்றப்பட்டனர்.

தராகி சிவராம், நிமலராஜன் உள்ளிட்ட பல ஊடகப் போராளிகளின் இழப்புக்களை கடந்தே நாம் வந்திருக்கிறோம். அந்த இழப்பின் வலியும், அது எம்முள் கீறிவிட்ட வடுவும் இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. அந்த வடுக்களோடு லசந்தவின் இழப்பும் எமக்குள் பதிந்து போனது.

கொலைகாரர்களுக்கான காரணங்கள் பல நேரங்களில் யாருக்குமே தெரிவதில்லை. ஏனெனில், இங்கு பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள், காணாமற்போகச் செய்யப்பட்டுவிட்டார்கள். ஆனால், அவர்கள் தொடர்பிலான நீதி விசாரணைகள் பெரிதாக நீதியை வழங்கிய வரலாறுகள் கிடையாது.

லசந்தவின் கொலையும்  மற்றொரு ஊடகப் போராளியின் கொலையாகவே எம்மோடு தங்கிவிட்டது. அதற்கான நீதி விசாரணைகள் குறித்த கோரிக்கைகள் இங்கு நியாயமாக பரிசீலிக்கப்படவில்லை. வேணுமென்றால் ஆணைக்குழுக்களும், விசாரணைக்குழுக்களும் அமைக்கப்படும். அவ்வளவுதான். அத்தோடு, எல்லாமும் முடிந்து போனதாக கைவிடப்பட்டு விடும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட ஆதாரங்களோ, வரலாறுகளோ ஊடகவியலாளர்களுக்கு இன்னமும் கிடைக்கவேயில்லை. அப்படிக் கிடைக்கும் என்று நம்பிக்கையும் இல்லை!


‘லசந்த’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட எமது முன்னோடியின் தொழில் நேர்த்தியும், அதற்கான அர்ப்பணிப்பும் எம்மை இன்னமும் அவனோடு கட்டி வைத்திருக்கிறது. பாடங்களையும், அனுபவங்களையும் தந்துவிட்டு மறைந்துவிட்டவனுக்கு சல்யூட்!
4தமிழ்மீடியா

0 Responses to லசந்த விக்ரமதுங்க :புதைக்கப்பட்ட இலங்கை ஊடக சுதந்திர வரலாற்றின் சாட்சி..!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com