Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இங்கிலாந்தில் நுண்ணுயிரியல் துறையில் கல்வி கற்று வரும் ஈழத் தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் மேற்கொண்ட பரிசோதனை பூமிக்கு வெளியே சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் (ISS) நடத்தப்படுவதற்கு தெரிவாகியிருந்தது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிந்திருப்பீர்கள்.
அதாவது முதன்முறையாக இங்கிலாந்து பள்ளி மாணவர்களின் பரிசோதனைகள் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் பரிசோதித்து பார்க்கப்படவிருக்கும் சந்தர்ப்பம் இது. இதற்காக இங்கிலாந்து முழுவதும் நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் சியோபன் ஞானகுலேந்திரன் மற்றும் டியானா மிடில்டன் ஆகிய இரு மாணவிகள் தலைமை தாங்கிய இரு பரிசோதனைகளே வெற்றி பெற்றிருந்தன.
நாசா தனது விண்வெளி ஆய்வு மையத்திற்கான பயணத்தில் வெற்றிபெற்ற இப்பரிசோதனைகளை கொண்டு செல்கிறது. அதாவது இவற்றை விண்வெளி மையத்தில் நடத்த நாசா விருப்பம் கொண்டுள்ளதே என்பதே இதன் வெளிப்பாடு.
 இந்த ஆராய்ச்சியை ISS இன் இங்கிலாந்தின் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து வழிநடத்தப் போகின்றனர் சியோபன் ஞானகுலேந்திரனும் டியானா மிடில்டனும்.
நிச்சயம், இது உலகத் தமிழர்களையும் முக்கியமாக 3 தசாப்தங்களாக நிகழ்ந்த போரினால் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள விடயம் தான்.

இங்கிலாந்தில் வசித்து வரும் ஈழத் தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் அங்கு பெனார்த்திலுள்ள விண்வெளி அறிவியல் அறக்கட்டளை கல்வி நிலையத்தில் கற்று வருகின்றார்.

மிஷன் டிஸ்கவரி எனும் 2013 இல் நிகழ்த்தப் பட்ட போட்டியில் வெற்றி பெற்ற இரு மாணவியரில் ஒருவராகவே சியோபன் ஞானகுலேந்திரன் தற்போது பெருமை சேர்த்துள்ளார்.

பூமிக்கு அப்பால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் என்னென்ன ஆய்வுகளை நடத்திப் பார்க்கலாம். அவற்றின் பாரதூரமான அல்லது நன்மையான விளைவுகள் எவ்வாறிருக்கலாம் என ஓரளவு  கணிப்பிட்டு குறித்த பள்ளி மாணவர்கள் தமது பரிசோதனைகளை உருவாக்கிக் கொள்ள இங்கிலாந்து கல்லூரிகள் வழிவகை செய்து கொடுத்தன. இதன் மூலம் இங்கிலாந்தின் மாணவர்களிடம் இளவயதிலிருந்தே விண்வெளி தொடர்பிலான ஆர்வத்தினையும், அக்கறையினையும் அதிகப்படுத்தலாம் என்பது அவர்கள் கணிப்பு.

சியோபன் ஞானகுலேந்திரனும் அவருடன் இணைந்து 5 மாணவர்களும் வடிமைத்த பரிசோதனை இதுதான். அதாவது தாவரங்களில் ஒட்டுக்கள் அல்லது அச்சு முறை மூலம் ஒரே தாவரத்தில் வித்தியாசமான பூக்கள் மற்றும் காய் கனிகள் முளைக்கச் செய்வது பற்றி அறிந்திருப்பீர்கள். இதனை விண்ணில் ஈர்ப்பு விசை இல்லாததால் 3 பரிமாணங்களில் நிகழ்த்த முடியும் என்பதும் இதனால் விண்ணில் பயிர்ச்செய்கைக்கு அல்லது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பான சூழ்நிலையை உருவாக்கலாம் என்பதுமே இவரின் ஆய்வு.

அதே போன்று டியானா மிடில்டனும் அவருடன் இணைந்து 5 மாணவர்களும் மேற்கொண்ட பரிசோதனை, விண்வெளியில் நுண்ணுயிர் கொல்லிகள் அல்லது நுண்ணியிர் எதிரிகள் (Antibiotic) எவ்வாறு இயங்கும். அவற்றின் வீரியம் எவ்வாறு இருக்கலாம் என்பதே.

தமது பரிசோதனை முயற்சிகள் விண்வெளிக்கு செல்லப் போகின்றன எனும் பூரிப்பில் பிபிசிக்கு சியோபன் ஞானகுலேந்திரன் மற்றும் டியானா மிடில்டன் வழங்கிய  ஊடகப் பேட்டி இதோ...

0 Responses to விண்ணுக்கு செல்கிறது ஈழத் தமிழ்ப் பெண் சியோபன் ஞானகுலேந்திரனின் பரிசோதனை முயற்சி : ஒரு விரிவான பார்வை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com