Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மொழியுரிமையைக் காப்பாற்ற முடியவில்லை என்று கவலை கொள்ளும்  தேசிய நல்லிணக்க மற்றும் மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இனவாத அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு இடதுசாரி அடையாளத்தைக் கொடுக்கத் தேவையில்லை. மாறாக, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில் தமிழ் மொழி அமுலாக்கம், ஆனையிறவு ரயில் நிலையத்தின் பெயரை சிங்களத்தில் மாற்றும் முயற்சி மற்றும் கொழும்பு தமிழ்ச் சங்க ஒழுங்கை பெயர் விவகாரம் தொடர்பிலான விடயங்களைச் கூட்டிக்காட்டி இன்று வெள்ளிக்கிழமை வாசுதேவ நாணயக்காரவுக்கு மனோ கணேசன் அனுப்பியுள்ள மின்னஞ்சலிலேயே மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

 மின்னஞ்சலின் முழுமையான பகுதி:

 ஆனையிறவு ரயில் நிலையத்துக்கு சிங்கள பெயரை வைப்பது மொழியுரிமையை மீறும் செயல் என்றும், ஆகவே அதை எதிர்க்கிறேன் என்றும் சொல்கிறீர்கள். அதுபோல் தமிழ் மொழி அமுலாக்கல் என்ற பாரதூரமான விடயம் தொடர்பான முயற்சிகளும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்கிறீர்கள். இதைவிட எங்கள் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும், கொழும்பு மாநகரசபையின் சிரேஷ்ட உறுப்பினருமான வேலணை வேணியனால் முன்னெடுக்கப்பட்ட, கொழும்பு தமிழ் சங்கம் அமைந்துள்ள வீதிக்கு அந்த நிறுவனத்தின் பெயரை சூட்டும் செயற்பாட்டை கூட உங்களால் சாதகமாக முடித்து வைக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்த அரசாங்கத்தில் இனியும் இருந்து இந்த இனவாத அரசாங்கத்துக்கு, ஓர் இடதுசாரி நிறத்தை தருவதை தவிர உங்களால் என்ன செய்ய முடிந்துள்ளது என்ற கேள்வி இன்று எங்கள் மனங்களில் எழுந்துள்ளது.

2012ஆம் வருடம் கொழும்பு மாநகரசபையில் உங்கள் கட்சி உட்பட அனைத்து கட்சிகளினாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானிக்கப்பட்ட பிரேரணையின் மூலம் எங்கள் மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியன், கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க வீதியை பெயரிடும் முயற்சியை ஆரம்பித்தார். இதற்கு மாநகரசபை முதல்வர் முசம்மில், மேல்மாகாண முதல்வர் பிரசன்னா ரணதுங்க, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் ஒப்புதல் அளித்தனர்.

 விதிமுறைகளின்படி முன்னெடுக்கப்பட்ட இந்த தீர்மானம் அரச வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டது. இந்நிலையில் மாநகரசபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்த்தனவால், 2012ஆம் வருடம் நவம்பர் மாதம் நாள் குறிக்கப்பட்டு இந்த வீதியின் புதிய பெயர் பலகை திறந்து வைக்கப்பட இருந்தது. இந்நிலையில் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்நடவடிக்கை மேல்மாகாண முதல்வர் பிரசன்னா ரணதுங்கவினால் இடை நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக நான் உங்களை நேரில் சந்தித்துள்ளேன். பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளேன். இதைவிட மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியன் உங்களை பலமுறை சந்தித்து இது தொடர்பாக பெரும்பாடுபட்டுள்ளார் என்பதை நான் நேரடியாக அறிவேன்.

எனினும் இந்த சின்ன விடயம்கூட உங்களால் சுமூகமாக முடித்துகொடுக்க முடியாத நிலைமை உங்கள் அரசுக்குள் நிலவுகிறது. அந்த அளவுக்கு இனவாதம் உங்கள் அரசுக்குள் தலைவிரித்து ஆடுகிறது. வடக்கில் ஒரே இரவில் தமிழ் கிராமங்களின் பெயர்களை, வீதிகளின் பெயர்களை மாற்றுகிறீர்கள். இன்று வடக்கின் பிரபலமான ஒரு ரயில் நிலையத்தின் பெயரை சிங்கள பெயராக மாற்ற முயல்கிறீர்கள்.

தலைநகர் கொழும்பில் மிக பாரம்பரியம் மிக்க, நீங்களும் பலமுறை வந்து உரையாற்றி செல்லும் கொழும்பு தமிழ் சங்கத்தை கெளரவித்து, கொழும்பில் வாழும் தமிழர்களின் தலைமை கட்சியான எங்கள் கட்சி, சட்டப்படி எடுத்த ஒரு முயற்சிகூட இன்று உங்கள் அரசாங்கத்தின் இனவாத போக்கினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பை எங்கள் தலைநகர் என்று நாங்கள் கருதக்கூடதா? அப்படியானால் எங்கள் சொந்த நாட்டையும், தலைநகரையும் அமைத்துக்கொள்ளும்படி தமிழர்களுக்கு உங்கள் அரசாங்கம் சொல்கிறதா?

எனவே மரியாதைக்குரிய அமைச்சர் அவர்களே, இயலாமையை எண்ணி இந்த அரசுக்குள் இருந்தபடி ஒப்பாரி வைத்து வருத்தபடாமல், இந்த இனவாத அரசாங்கத்தில் இருந்து அதற்கு ஓர் இடதுசாரி நிறத்தை தராமல், உங்கள் அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடியுமா என நீங்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். அது என்ன அதிர்ச்சி வைத்தியம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

0 Responses to இனவாத அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்; வாசுதேவவுக்கு மனோ கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com