Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசிற்கெதிரான போராட்டத்தின் முடிவில் பெரும்பான்மைக் கறுப்பின மக்கள் நிறவெறி ஆதிக்கத்தினை முடிவுக்குக் கொண்டுவந்து தமது போராட்டத்தில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றனர். அதன் பின்னர் நிறவெறி அடக்குமுறை காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை கண்டறிய உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவினார்கள்.

இந்த ஆணைக்குழுவானது 1960ம் ஆண்டு தொடக்கம் 1994ம் ஆண்டுவரை நடைபெற்ற மனித குலத்திற்கெதிரான அநீதிகளை விசாரிப்பதற்கும் குற்றவாளிகளிற்கு மன்னிப்பு அளிப்பதற்குமென உருவாக்கப்பட்டது. தங்களால் இழைக்கப்பட்ட அநீதிகளை முழுமையாக வெளிப்படுத்தும் பட்சத்திலும் அவ் அநீதிகளிற்கு அரசியற் காரணங்களும் இருப்பின் மன்னிப்புக் கோருபவர் மன்னிப்பளிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும் மன்னிப்புக் கோரி விண்ணப்பித்தவர்களில் 5392 பேரிற்கு மன்னிப்பு மறுக்கப்பட்டது. வெறும் 849 பேருக்கு மட்டுமே மன்னிப்பு அளிக்கப்பட்டது.

இவ் ஆணைக்குழுவின் சிறப்பம்சம் என்னவெனில் எல்லா விசாரணைகளும் பகிரங்கமாக நடைபெற்றதுடன் பொதுமக்களுக்கு விசாரணை ஆவணங்களைப் பார்வையிடக்கூடிய வகையிலும் இருந்தது. தற்போது சிலர் இந்த ஆணைக்குழு போன்றதொரு ஆணைக்குழுவை இலங்கையிலும் நிறுவி உண்மையைக் கண்டறிந்து குற்றவாளிகளிற்கு மன்னிப் பளிக்க வேண்டும் அதன் மூலம் இன நல்லிணக்கத்தினை உருவாக்க வேண்டும் என்று கோருகின்றனர். இக்கோரிக்கை அண்மைக் காலத்தில் வலுவடைந்து வருகின்றது.

உண்மையில் இக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா என்பது விவாதத்திற்குரியது. இக் கோரிக்கை அடிப்படையில் வலுவற்ற ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றென்றே 'இது நம்தேசம்' கருதுகின்றது. இதற்கு பல்வேறு காரணிகளைக் குறிப்பிட முடியும்.
தென்னாபிரிக்காவில் விடுதலை அடைந்து வெற்றி பெற்றிருந்த ஒரு தரப்பால் இவ் ஆணைக்குழு நிறுவப்பட்டிருந்தது. அனைத்து விசாரணைகளும் அடக்கியாண்ட நிறவெறி வெள்ளையின ஆட்சியாளர்களிற்கெதிராக மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் இங்கு அடக்கியாண்ட தரப்பே போரில் வெற்றி பெற்றிருப்பதுடன் அத்தரப்பே போர்க்குற்றங்களையும், இனப்படுகொலையையும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களையும் புரிந்ததாகக் குற்றம் சாட்டபட்டிருக்கின்றது. அத்தரப்பினை உண்மையைக் கண்டறியக் கோருவதானது கொலைக் குற்றவாளியையே தனக்கெதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கக் கோருவதற்கு ஒப்பான செயலாகும்.

தென்னாபிரிக்காவில் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்பட்ட காலத்தில் முற்று முழுதாக அடக்குமுறைகளும் அநீதிகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் இலங்கைதீவில் அடக்குமுறையும் இனங்களுக் கெதிரான வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் இத்தகைய ஆணைக்குழு பற்றி சிந்திப்பது குற்றம் சாட்டப்பட்டவர்களின் செயற்பாடுகளை அங்கீகரிப்பது போன்றதாகும்.

தென்னாபிரிக்காவைப் பொறுத்தமட்டில் போரின் முடிவில் அடக்கப்பட்டவர்கள் விடுதலை பெற்றிருந்தார்கள். ஆனால் இங்கு அடக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் தமது விடுதலைக்கான போராட்டத்தினை வேறொரு விதத்தில் தொடர்ந்து நடாத்த வேண்டி இருப்பதாலும் தொடரும் அடக்குமுறையைத் தடுத்து நிறுத்துவதற்கும் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

மற்றைய முக்கியமான காரணி தென்னாபிரிக்க மக்கள் விடுதலை அடைந்ததும் தமக்கெதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளைப் பயமின்றி வெளிக் கொண்டுவரக்கூடிய சூழல் இருந்தது. ஆனால் இங்கோ நிலமை அவ்வாறு இல்லை. தமக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றி முறையிடுபவர் காணாமற்போகும் சூழல் தான் இங்கு உள்ளது.

முக்கியமாக உலகின் இனவழிப்பு நடைபெற்ற எந்தவொரு இடத்திலும் தென்னாபிரிக்கப் பாணி நல்லிணக்க முன்னெடுப்புகள் நடைமுறைப் படுத்தப்படவில்லை. மாறாக அங்கு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டமையே மரபு ஈழத்திலும் நடைபெற்றது தொடர்ந்து கொண்டிருப்பது இன அழிப்பாகும். இத்தகைய பின்னணியில் தென்னாபிரிக்கப் பாணி உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவானது ஈழ அரசியலைப் பொறுத்தமட்டில் முற்றிலும் பொருத் தப்பாடு அற்ற ஒன்றாகும்.

-இதுநம்தேசம் ஆசிரியர் தலைப்பு சனவரி 2014

0 Responses to தென்னாபிரிக்க உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவும், ஈழ அரசியலும் - இதுநம்தேசம் ஆசிரியர் தலைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com