Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அமெரிக்காவுக்கான இந்திய துணைத்தூதரக அதிகாரி தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே (62) கூறியுள்ளார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் போக்குவரத்து, வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அண்மையில் அமெரிக்காவில் வைத்து தேவயானி அதிரடியாக கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட விவகாரம் அமெரிக்கா - இந்தியா இடையிலான இராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தும் அளவு பரபரப்பானது.

தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெறமுடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில் தேவயானி கோப்ரகடே இந்தியாவுக்கே மீண்டும் திரும்பியிருந்தார்.  இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் தேவயானியின் குழந்தைகள் அடுத்த மாதம் இந்தியா திரும்புகின்றனர். அவர்களை டெல்லியில் உள்ள பள்ளியில் சேர்க்கவுள்ளதாக தேவயானியின் தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும் 'நான் ஓய்வு பெற்றது முதலே அரசியலில் ஈடுபடப்போகிறீர்களா என பலர் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். எந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுவேன் என உரிய நேரத்தில் தெரிவிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

தனது வீட்டு வேலைப் பணியாளராக கடமையாற்றிய இந்தியப் பெண்ணை தொடர்ந்து அமெரிக்காவில் தங்க வைப்பதற்கு விசா விண்ணப்பிக்க போலியான ஆவணங்களை தயார் படுத்தியிருந்ததாகவும், ரிச்சார்ட்டுக்கு கொடுக்கவேண்டிய முறையான சம்பளத்தை கொடுக்காது, அடிமை போன்று நடத்தியதாகவும் தேவயானி மீது இரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது அமெரிக்க வெளியுறவுத் துறை.

தேவயானி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப் படவேண்டிய  சூழ்நிலையை உருவாக்கியதால், இந்தியாவிலிருந்து இரு அமெரிக்க தூதரக தம்பதியினரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தியிருந்தது இந்தியா.

புதுடெல்லியில் அமெரிக்க தூதரக பாதுகாப்புக் குழுத் தலைவராக கடமையாற்றியிருந்த வேய்ன் மே மற்றும் அவரது மனைவி அலிசியா முல்லெர் ஆகியோரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

இத்தம்பதியினர் நீண்ட நாட்களாகவே இந்தியக் கலாச்சாரம், பண்பாடு தொடர்பில் கேலியாக பல்வேறு கருத்துக்களை தமது சமூக வலைத்தளங்களில் பதிந்து வந்ததாகவும், குறிப்பாக வெஜிடேரியன்ஸைப் பற்றியும் பசுக்களுக்கு மதரீதியில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் கேலி செய்திருந்ததாகவும் சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to லோக்சபா தேர்தல் களத்தில் குதிக்கிறார் தேவயானியின் தந்தை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com