Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அபிவிருத்தி தேவைகளுக்காக அரசாங்கத்தினால் காணிகள் சுவீகரிக்கப்படுவதை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) எதிர்க்கவில்லை. ஆனால், பொது மக்களின் காணிகள் இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதை நாம் தொடர்ந்தும் எதிர்க்கின்றோம் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை மக்களுக்குரிய நிலங்கள் மீளவும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறோம். மாற்றுக்காணிகள் வழங்கப்படுவதும், ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் வேறு ஒருவர் குடியமர்த்தப்படுகின்ற நிலையினையும் நாம் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  ஊடகங்களிடம் பேசும் போதே முருகேசு சந்திரகுமார் மேற்கண்டவாறு கூறியதாக ஈபிடிபியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வலிகாமம் வடக்கில் 6800 வரையான ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்க முனைவதையும் நாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்துவருகின்றோம். அதாவது மக்களின் காணிகளை இராணுவத்தினர் இராணுவத் தேவைகளுக்காகவும் சுவீகரிப்பதை நாங்கள் எதிர்க்கின்றோம் என்றார்.

குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தின்போதும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் அபிவிருத்தி தேவைகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. அவ்வாறான நடவடிக்கைகள் தென்பகுதியிலும் மற்றும் உலகின் எந்தப்பாகத்திலும்  இயல்பாக நடைபெறும் விடயம். ஆனால் அபிவிருத்தி என்பது வேறு  இராணுவத்தேவை என்பது வேறு. எனவே வலிகாமம் வடக்கிலே குறிப்பிடப்படும் 1800 ஏக்கர் நிலங்களும் இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம்களை அமைப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொதுமக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதை எதிர்க்கிறோம்: ஈ.பி.டி.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com