Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காலத்தையும், விடுதலை நோக்கி நடக்கும் கால்களையும் தடுத்திட எவராலும் முடிவதில்லை. உத்வேகம் கொடுக்கும் மனவெழுச்சியோடு, உன்னதத்தின் திசை நோக்கி நீங்கள் செய்யும் பயணத்தில்  , உலகத் தமிழர் இதயங்கள் உவகை கொள்ளுகின்றன...

நிற்க ......

மானுடத்தின் வாழ்வுச்சுழற்சி என்பது வெறுமனே பிறப்பும் இறப்பும் மட்டுமல்ல. ஒரு மனிதனின் சிந்திக்கும் திறன், வாழ்விற்கான தேடல், சுயபரிசோதனை முயற்சி, இலக்குக் கொண்ட செயற்பாடு என்பவையே மானுடத்தின் வாழ்வுச் சுழற்சியை அர்த்தம் உள்ளதாக்குகின்றன. இவற்றில் மனிதனின் தேடலும், செயற்பாடுகளுமே அவனைச் சிறிது சிறிதாக முழுமையடையச் செய்கின்றன. தேடலின் வழியிலேயே அவன் சிந்திக்க முயல்கிறான். சிந்தனையில் மூழ்குகையில் தன்னிலை அறிகிறான், தன்னிலை அறிதல் என்பது ஒரு தவம்.... அது எல்லோராலும் இயலாதது. தன்னிலை அறிந்தவன் மட்டுமே சுதந்திர வேட்கை கொள்கிறான். சுதந்திர வேட்கையின் எழுச்சியே  அவனைப் போராடத் தூண்டுகிறது. தன்னிலை மறந்த தவம் கொண்டு, சுதந்திர வேட்கைக்காய்ப் போராடத் துணிந்த உங்கள் உறுதி எம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது.....

 தேடல் என்பதில் தீராத உறுதி கொண்டவர்களாலேயே, அதன் அர்த்தப்பாட்டினையும் புரிந்திட இயலும். அறவழியின் நீட்சியில், நீங்கள் மேற்கொள்ளும் பயணமும் அவ்வகையானதே. விடுதலை என்ற தேடலில், அதன் உயர்வையும், சிறப்பையும் புரிந்துகொண்ட நீவீர், எதற்கும் கட்டுப்படாதவர். காலச் சுழற்சியை மீறிய உங்கள் பாதங்களில் விரைவுதனில், எங்களின் தேசத்தின் உருவகம் அடையாளப்படுத்தப் படுகிறது என்பதில் ஐயம் திரிபுறுகிறது.

மண்ணின் விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த வீரமறவர்களின் உயிர்மூச்சு, உங்கள் பாதங்களின் வலி நீக்கும். காற்றாய் எங்கும் கலந்திருக்கும் கல்லறை உயிரிகளின் வாழ்த்து , உங்களின் வீரப் பயணத்தில் துணையிருக்கும். என்றும் நெருப்பாய் நிற்கும் தலைவனின் சிந்தனைகள், உங்கள் மேனியை வாட்டும் குளிரை விரட்டும். உங்கள் பின்னே புலம் திரளும், செருக்களம் சிதறும். விழ விழ எழுந்தோம் என்பதை உங்கள் வீரப்பயணம் உலகிற்கு உணர்த்தும். ஒன்று பலவாகி நிற்கும் அபூர்வம் தமிழினத்திற்கு மட்டுமே உரியதென்பதை உலகம் பார்க்கட்டும். எமை எதிர்க்கும் அற்பர் எல்லாம் , உங்கள் நடையின் பலத்தில் வீழட்டும் .....

தமிழீழ உறவுகளின் துயர்துடைக்கவென ஐ.நா அலுவலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் எமது சகோதர்களுக்கு, ஐரோப்பிய வாழ்தமிழுறவுகள் யாவரும் உறுதுணையாக இணைந்து, அவர்களது நடைப்பயணத்திற்கு வலுச்சேர்க்க வேண்டுமென,  பெல்ஜியம், பிறேசெல்ஸ் நகரிலிருந்து யேர்மனியின் பெர்லின் நகரம் வரை ஈருருளிப்பயணம் மேற்கொண்டவர்களான சஞ்சீவன், துரை, தேவன் ஆகிய மூவரும் உரிமையுடன் வேண்டிக்கொள்கிறார்கள்.

அத்துடன்; இயற்கையின் சீற்றங்களையும் பொருட்படுத்தாது, தமிழீழ உறவுகளுக்கு ஓர் நிரந்தரமான விடிவை ஏற்படுத்தித்தர வேண்டுமென்ற அவாவுடன், நடைப்பயணம் மேற்கொள்ளும் சகோதர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, எதிர்வரும் மார்ச் பத்தாம்  நாள், ஜெனீவா முருகதாசன் திடலில் தமது கோரிக்கைளோடு அவர்கள் ஐ.நா வின் கதவைத்தட்டும் அவ்வேளையில்; ஐரோப்பிய வாழ் தமிழுறவுகள் யாவரும், அவர்களின் கரங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பேரெழுச்சியுடன் திரண்டு வந்து இணைந்துகொள்ளவேண்டுமெனவும் ஈருருளிப்பயணம் மேற்கொண்ட மூவரும் கேட்டுக்கொள்கிறார்கள்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

0 Responses to விடுதலையை நோக்கி நீண்ட பயணம் மேற்கொள்ளும் அறவழி வீரர்களே...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com