Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

23 வருடமாக தன்னை ஆக்கிரமித்திருந்த உயிர்வலியிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறார் அற்புதம்மாள். மூன்று உயிர்களை 13 வருட காலம் துரத்திக் கொண்டிருந்த தூக்கு கயிற்றை தலைமை நீதியரசர் சதாசிவத்தின் பேனா அண்மையில் அறுத்தெறிந்த போது அற்புதம்மாளை ஆக்கிரமித்திருந்த உயிர்வலியும் விலகத் தொடங்கியது.

யார் இந்த அற்புதம்மாள்? முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாய். அந்த கொலைவழக்கில் 19 வயதான பேரறிவாளனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் பிறகு கைது செய்தார்கள். அதனை அறிந்து அதிர்ந்துபோனது பேரறிவாளனின் குடும்பம்.

இந்த கொலை வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்க, அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மற்றவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். பிறகு கருணை மனுவின் மூலம் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட, மூன்று பேரை மட்டும் 13 வருடங்களாகத் துரத்தியது தூக்கு கயிறு.

என் மகன் குற்றமற்றவன். அவன் நிரபராதி. அவனை விடுதலை செய்யுங்கள்'' என நீதிகேட்டு நெடும் பயணம் மேற்கொண்டார் அற்புதம்மாள். ""தூக்கு கயிற்றிலிருந்து மகனை மீட்பதற்காக அவர் நடக்கத் துவங்கி 23 வருடங்கள் ஆகிறது. இப்போதுதான் அந்தப் பயணம் நிற்கும் நிலைக்கு வந்திருக்கிறது. அந்தத் தாய், தனது மகனை மீட்பதற்காக நடத் திய போராட்டங்கள் மனதை கலங்க வைப்பவை''’ என்கிறார்கள் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர்.

ஜோலார்பேட்டையிலிருந்து தோளில் ஒரு கைப்பை, காலில் பழைய செருப்பு, கண்களில் ஏக்கம், மனதில் நம்பிக்கையை சுமந்துகொண்டு 23 வருடங் களாக பஸ்சிலும் ரயிலிலும் கால்கடுக்க நடந்தும் தனது மகனை மீட்கப் பயணித்த அற்புதம்மாளின் மொத்த வாழ்க்கையும் மகனின் விடுதலைக்காகவே கழிந்தது. மனு போட்டு காத்திருந்து மகனை சிறையில் சந்திப்பது, நீதிமன்றத்தில் அவனை சந்திப்பது, மகனின் விடுதலைக்காக மனித உரிமை போராளிகளை சந்திப்பது, அரசியல் மற்றும் சமூக தளத்தில் இயங்குபவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்பது, சட்டரீதியாக நீதிமன்றங்களை அணுகுவது, மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது, அத்தகைய போராட்டங்கள் எங்கு நடந்தாலும் அதில் முதல் நபராக கலந்துகொள்வது, இதற்கிடையே மகனை சிறையில் சந்திக்கும் போதெல்லாம் அவனுக்கு நம்பிக்கையை தருவது... என்பதைத் தவிர அந்தத் தாய் தனக்காக எதையுமே செய்து கொள்ளவில்லை.

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட 10-வது நாள் எங்களிடம் வந்த சி.பி.ஐ. பேரறிவாளனைப் பற்றி விசாரித்தார்கள். படிப்பதற்காக சென்னை பெரியார் திடலில் தங்கியிருப்பதாகச் சொன்னோம். வந்தவர்கள் சில கேள்விகளை கேட்டுவிட்டு சென்றுவிட்டனர். எங்களுக்கு மனம் தவித்தது. வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. திடலுக்குச் சென்று மகனை பார்த்தோம். சிரித்த முகத்தோடு எங்களை கட்டிப்பிடித்துக் கொண்டான். இவனையா சி.பி.ஐ. விசாரிக்கிறது? என மனம் அவஸ்தைப்பட்டது. நெஞ்சுக்குள் ஏதோ அடைத்துக்கொண்டது போல ஒரு உணர்வு. வார்த்தைகள் வரவில்லை. அன்று மாலையே திடலுக்கு வந்தனர் சி.பி.ஐ. அதிகாரிகள். அதுதான் எங்கள் மகனை நாங்கள் கொஞ்சிய கடைசி நாள்''’என்று மூவரின் உயிர் காக்க கோயம்பேட் டில் ஒருமுறை நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அற்புதம்மாள் நம்மிடம் சொல்லி கலங்கினார்.

ராஜீவ்கொலை வழக்கில் கைது செய்யப் பட்டவர்களை மல்லிகை பங்களாவில் வைத்துதான் விசாரித்தது சி.பி.ஐ! மகனை சந்திக்க மல்லிகைக்கு தினந்தோறும் போய் காத்திருப்பார் அற்புதம் மாள். பங்களாவிலிருந்து வெளியேவரும் ஒவ்வொரு அதிகாரியிடமும், ""அய்யா, என் மகன் எந்த தப்பும் செய்திருக்கமாட்டான்யா. சின்னப் பையன் அவன். அவன் முகத்தை ஒரு தரம் பார்க்கணும். காட்டுங்கய்யா. விசாரிச்சிட்டு விட்டுடுறோம்னு சொல்லித்தானேய்யா அவனை அழைச்சிட்டு வந்தீங்க. இப்போ இப்படி அடைச்சி வெச்சி காட்டவே மாட்டேங்கிறீங் களேய்யா '' என்று அவர்களது கால்களில் விழுந்து கதறித்துடித்தார் அற்புதம்மாள். அந்தத் தாயின் தவிப்பையும் அதிலிருந்த உணர்ச்சியையும் புரிந்துகொள்ள எந்த அதிகாரிகளும் அங்கு இல்லை. மாறாக கேவலமாகவும் ஆபாசமாகவும் திட்டித் தீர்த்தார்கள். மல்லிகை மென்மையான பூ. அந்த பெயரை எப்படி இந்த பங்களாவுக்கு வைத்தார்கள்? என்கிற கேள்விக்குறியுடனேயே ஒவ்வொரு நாளையும் கழித்தார் அற்புதம்மாள்.

முதலில் செங்கல்பட்டு சிறையில்தான் அடைக்கப்பட்டார் பேரறிவாளன். அவரைப் பார்ப்பதற்காக ஒற்றை மனுஷியாக சிறைக்குச் செல்வார் அற்புதம்மாள். மகனைச் சந்திக்க மனு போட்டு முறைப்படி அனுமதி பெற்றிருந்தாலும் அனுமதிக்கமாட்டார்கள் சிறை அதிகாரிகள். கால் கடுக்க காத்திருப்பார். உட்கார்வதற்குக்கூட ஒரு நாற்காலி அங்கு இருக்காது. மாலை 4 மணிக்குத்தான் அனுமதி கிடைக்கும். அதுவும் ஒரு 5 நிமிடம்தான். பலமுறை மாலை 6 மணி வரை காக்க வைத்து பிறகு மகனைப் பார்க்க அனுமதிக்காமலே திரும்பி போகச்சொல்லி விடுவார்கள். மகனைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் அன்று இரவு முழுவதும் அழுதுகொண்டே இருப்பார் அற்புதம்மாள்.

முதன்முதலில் சிறையில் என் மகனைப் பார்த்தபோது வெள்ளை சட்டையும் அரைக்கால் டவுசரும் போட்டிருந்தான். அதைக்கண்டு பதறிப் போய்ட்டேன். "இது தண்டனை கைதிகளுக்கான உடையாச்சே. விசாரணைக் கைதியான என் மகனுக்கு எப்படி கொடுக்கலாம்' என்று சிறை அதிகாரிகளிடம் கேள்வி கேட்டபோது என்னை அடிக்காத குறையாக வெளியே தள்ளினார்கள். அதன்பிறகு சட்டரீதியாக போராடித்தான் இயல்பான ஆடையை வாங்க முடிந்தது. சிறையில் அவனைப் பார்க்கப்போனால் தூரத்தில் நிற்க வைத்துவிடுவார்கள். தலை யைத் தூக்கித்தான் பேசவேண்டியிருக்கும். ஒருநாள் அவனைப் பார்த்தபோது, நெற்றிப் பகுதியில் தழும்பு இருந்தது. என்னன்னு கேட்டேன். ‘"கம்பியில் நெற்றியை சாய்த்துக் கொண்டே பேசுவதால் தழும்பாகிவிட்டது' என்றான். எனக்கு அழுகையே வந்துவிட்டது. அதேபோல பலமுறை கண்ணாடிக் கூண்டில் அவனை நிற்க வைத்துவிடுவார்கள். நாங்கள் இருவரும் சைகையில்தான் பேசிக்கொள் வோம். வழக்கறிஞர்களிடமும் அப்படித்தான் பேச அனுமதிப்பார்கள். ஒன்றரை வருடத்துக்கு பிறகுதான் அவனது கட்டை விரலை தொட்டுப் பார்க்கும் பாக்கியமே கிடைத்தது. விசாரணை என்கிற பேரில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அவன் விவரித்த போது துடித்துப் போனேன்'' என்கிறார் கண்கலங்கியபடி அற்புதம்மாள்.

செங்கல்பட்டு சிறையில் இருந்து பூந்தமல்லி தடா கோர்ட் வளாகத்திலே உள்ள சிறைக்கு அறிவை மாற்றினார்கள். அங்கு எட்டு வருடங்கள் இருந்தார். அதன்பிறகு வேலூருக்கு மாற்றினார்கள். மகனை நிரபராதி என நிரூபிக்க பல்வேறு சட்ட போராட்டங்களை மனித உரிமை அமைப்புகளோடும் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் அமைப்பினரோடும் இணைந்து நடத்தினார் அற்புதம்மாள்.

நீதியைத் தேடி அப்படி அவர் அலைந்தபோதுதான் சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம் அற்புதம்மாளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையைத் தந்தது. அதுதான் "உயிர் வலி' என்கிற ஆவணப்படமாக வெளிவந்தது. அதுதான் இந்த வழக்கின் முதல் திருப்புமுனை. அடுத்து, கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதை ஏற்காத உச்சநீதிமன்றம், வீரப்பன் கூட்டாளிகளின் தண்டனையை குறைத்தது இரண்டாவது திருப்பு முனை. இதன் மூலம் அற்புதம்மாள், "விரைவில் என் பையன் விடுதலையாவான். மீண்டும் அவன் சிரிப்பொலி எங்கள் வீட்டில் கேட்கும்' என்று சொல்லத் தொடங்கினார்.

இதற்கிடையே தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வைத்த படியே இருந்தார் அற்புதம்மாள். "மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்துங்கள்' என கெஞ்சும் கடிதங்கள் மாநில அரசிடம் நிறைய இருக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பும் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானமும் அற்புதம்மாளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அற்புதம்மாளிடம் நாம் பேசியபோது,

இனி எனக்கு கெட்ட கனவுகள் வராது. தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்து அலறமாட்டேன். ஒவ்வொரு இரவும் இனி தூங்கா இரவாக இருக்காது. இனி என் தொண்டையை துக்கம் அடைக்காது. என் மகன் வெளியே வரும் திசை நோக்கிக் காத்திருக்கிறேன் என்கிறார் அற்புதம்மாள்.

0 Responses to கெட்ட கனவு கலைந்தது!- இனி தூக்கத்தில் எழுந்து அலற மாட்டேன்!- போராளி அற்புதம்மாள் பேட்டி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com