Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை குறைக்கப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்ட காங்கிரசார் ‘சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்’ என்ற தலைப்பில் 4 பக்க துண்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மறக்க முடியுமா? மன்னிக்க முடியுமா? தமிழர்களே சிந்திப்பீர் என்ற கேள்வியுடன் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கும் காட்சி, குண்டு வெடிப்பில் பலியான தியாகி லீக் முனுசாமி, சந்தாணிபேகம், போலீஸ் சூப்பிரண்டு டி.கே.எஸ். முகமது இக்பால், இன்ஸ் பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப் ஆகியோரது படங்களையும் பிரசுரித்துள்ளனர்.

அந்த துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:–

ராஜீவ் கொல்லப்பட்ட போது பலியானவர்களுக்கு குழந்தை குட்டிகள் இல்லையா? மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் தமிழர்கள் என ஒரு பிரிவினர் கோஷம் போடுகிறார்கள். அப்படியானால் ராஜீவோடு இறந்தவர்கள் சிங்களவர்களா?

குற்றவாளிகளை குற்றவாளியாக பார்க்காமல் இன அடையாளங்களை கொடுத்துக் கொண்டிருந்தால் யாரையும் தண்டிக்க முடியாது. ஆட்டோ சங்கரும், சந்தன வீரப்பனும் தமிழர்கள் தானே!

பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரையும் விடுவித்தால் தர்மபுரி பஸ் எரிப்பில் தண்டனை பெற்றுள்ள நெடுஞ்செழியன் உள்ளிட்ட மூவரும் தமிழர்கள் தானே! அவர்களையும் விடுவித்து விடலாமா?

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி வக்கீல்கள் போராட்டம் நடத்தினார்கள். இதே வக்கீல்கள் ராஜீவ் கொலை நடந்த போது கொலையாளிகளுக்காக ஆஜராக மறுத்தார்கள். அவர்களுக்காக ஆஜரான வக்கீல் துரைசாமி வீட்டருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கொலையாளிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் ‘‘மரண தண்டனை காட்டு மிராண்டித்தனம்’’ என்கிறார்கள். இவர்களது நோக்கம் மரண தண்டனையை ரத்து செய்வதல்ல. அதுதான் நோக்கம் என்றால் பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல்குருவுக்கும், மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி கசாப்புக்கும் தூக்கு தண்டனை விதித்த போது மவுனமாக இருந்தது ஏன்?

இப்படி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனையை ரத்து செய்து கொண்டிருந்தால் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்காது. சட்டாம்பிள்ளைகளின் ஆட்சிதான் நடக்கும்.

இலங்கை அதிபர் ராஜபக்சே மீது தமிழர்களை கொன்று குவித்த குற்றம் ஒரு வேளை நிரூபிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்றம் அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனையும் ரூ.600 அபராதமும் விதித்தால் இவர்கள் ஏற்று கொள்வார்களா?

மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற நிலை இருக்கும் போதே படுபாதக செயலை செய்ய தயங்காதவர்கள் அதை ரத்து செய்துவிட்டால் எந்த அட்டூழியத்தையும் செய்ய துணிய மாட்டார்களா?

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

நடிகை ரம்யாவுக்கு கண்டனம்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்ததற்கு நடிகை குத்து ரம்யா டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மண்டல செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகைகள் பலர் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை கொண்டுள்ளனர். அசின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சென்று வந்தார். பாவனா தமிழ் படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று கன்னட நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தற்போது குத்து ரம்யா ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கிறார்.

ஆயுள் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது அரசின் வழக்கமான நடைமுறை. பிரதமராக இருந்தவருக்கும் சாதாரண மனிதருக்கும் சட்டம் என்பது சமமானதுதான். கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று அரசின் முடிவை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல. குத்து ரம்யாவை தமிழ் திரையுலகம் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to ராஜீவ் கொலை கைதிகளுக்கு தண்டனை ரத்து: காங்கிரஸ் பரபரப்பு துண்டு பிரசுரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com