Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசமரச் சூழலும் குன்றுப் பகுதிகளும் எங்கெங்கு காணப்படுகிறதோ அங்கெல்லாம் பௌத்த மத அடையாளங்கள் நிறுவப்பட்டு அவை தமிழ்ச் சமுகத்தினுள் திணிக்கப்பட்டு வரும் நிலையானது முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மக்களின் கவனத்தை இலகுவாக ஈர்க்கவல்ல பகுதிகளில் தமிழர்களின் உணர்வுகளை சிதைத்து அவர்களின் நிலத்தை அபகரித்து அங்கே பௌத்த மத அடையாளங்களை நிறுவுதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரங்கேறியவண்ணம் உள்ளது.

கோட்டக்கேணி பிள்ளையார் கோயில் இற்றைக்கு 200 ஆண்டிலும் முன்னைய வரலாற்றினை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ் மக்களின் புனித வழிபாட்டு அடையாளமாகும். மணலாற்றுப் பகுதியிலுள்ள வயல் நிலங்களுக்கு செல்லும் போது மேற்படி கோயிலில் வழிபாடுகளை நடாத்திவிட்டு செல்வதே கிராம வாசிகளின் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இது தவிர நாளாந்த பூசைகள் விசேட பூசைகள் என ஊர் மக்களின் கலாசார வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்ததாகவே மேற்படி பிள்ளையார் கோயில் இருந்து வந்துள்ளது.

1983ம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தற்பொழுது இங்கு வந்து குடியேறிய போது பிள்ளையார் கோயில் முன்பாக புத்தர் சிலை ஒன்றும் அதனை அண்டியதாக கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது.

இதே போல் கொக்கிளாய் பிரதேசத்தில் சமீப காலத்தில் எழுப்பப்பட்ட புத்தர் சிலையும் அதனை அண்மித்ததான கட்டிடமும் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் அவர்கள் அனுமதியின்றி கட்டப்பட்டு இருக்கிறது. இதுவும் அரசமரம் ஒன்றின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் காணியின் சொந்தக்காரர்களில் ஒருவரான மணிவண்ணதாசன் என்பவரால் தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டும் இன்னும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஒதியமலை மக்களின் புனித வழிபாட்டு தலமாக இருந்து வந்துள்ள மலையடி வைரவர் கோயில் பகுதி இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு இருப்பதும் சமீபத்தில் பௌத்த மதத்தலைவர் ஒருவர் அங்கு வந்து சென்றதும் மேற்படி ஒதியமலையிலும் புத்தர் சிலை அமைய பெற்று விடுமோ என்ற எண்ணம் ஒதியமலை மக்களை ஆட்கொண்டுள்ளது.

இவை தவிர ஒட்டுசுட்டான் பகுதியில் இராணுவ முகாம் அமைத்து அதனுள் பெரிய அளவில் விகாரை கட்டப்பட்டு இருப்பதும் தமிழர்களின் பாரம்பரிய மத அடையாளமாக விளங்கும் வட்டுவாa;கல் கன்னிமார் கோயிலுக்கு அண்மையில் மற்றும் நாயாறு நீராவியடி ஏற்றத்தில் முன்பு இருந்த பிள்ளையார் சிலை காணாமல் போய் அதற்கு பதிலாக பௌத்த விகாரை அமைந்திருப்பது உள்ளடங்கலாக பல பிரதேசங்களிலும் தமிழர்களின் மத அடையாளங்கள் அழிக்கப்படுவதும் பௌத்த மத அடையாளங்கள் நிறுவப்படுவதும் நடைபெற்ற வண்ணமே உள்ளது.

இவ்வாறு ஆங்காங்கே நிறுவப்படும் பௌத்த மத அடையாளங்கள் காலப்போக்கில் தமிழர் தேசங்களில் பௌத்த மதம் இருந்தமைக்கான ஆதாரங்களாக கொள்ளப்பட்டு பௌத்த மத சிங்கள குடியேற்றங்களின் திட்ட மிட்ட நில ஆக்கிரமிப்புகளுக்கு ஏதுவாக அமைந்துவிடும் என்ற நிலையும் இங்கு கவனிக்கபடவேண்டியதாகிறது என்று தெரிவித்தார்.

0 Responses to பௌத்த மத அடையாளங்கள் தமிழ்ச் சமூகத்தினுள் திணிக்கப்படுகின்றது - ரவிகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com