Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆகாய டைட்டானிக் என்பதுதான் மலேசிய விமானம் எம்.ஹெச்-370யின் கதியா என அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் பரிதவிப்போடு இருக்கிறார்கள். ஆனாலும் அந்த விமானம் விபத்துக்குள்ளானதா, கடத்தப்பட்டதா என்பது பற்றி தகவல் எதுவுமில்லை.

சென்னை வேளச்சேரியில் வசிக்கும் சந்திரிகா சர்மா உள் பட 5 இந்தியர்களையும் சேர்த்து மொத்தம் 239 பயணிகளுடன் மார்ச் 8-ந் தேதியன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்குக் கிளம்பிய அந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கி 2 மணி நேரமான நிலையில், திடீ ரென்று ரேடார் கண்காணிப்புகளிலிருந்து மறைந்தது. வியட்நாம் நாட்டருகே தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்த நிலையில்தான் அதனிடமிருந்து சிக்னல்கள் துண்டிக்கப்பட்டன. அதன்பிறகு விமானம் என்னவானது என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

மாயமான விமானத்தில் இருந்த பயணிகளில் சீனா, மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா, இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரியா எனப் பலநாட்டவர்களும் இருந்தனர். இப்போது 26 நாடுகள் அந்த விமானத்தைத் தேடிக்கொண்டிருக்கின்றன. விமானம் கடத்தப்பட்டதா, விபத்துக்குள்ளானதா என்பது பற்றி பல  கோணங்களும் பல குழப்பங்களும் வெளிப்படுகின்றன.

முறையாக டிக்கெட் எடுத்த பயணிகளில் இருவருக்குப் பதில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் பயணித்துள்ளனர். நூர் முகமதி, ரீசா என்ற அவ்விருவரும் போலி பாஸ்போர்ட்டில் பயணித்ததாகவும் அவர்கள் திட்டமிட்டே இந்தப் பயணத்தை மேற்கொண்டு கடத்தினார்களா என்ற கோணத்திலும் முதல் சந்தேகம் கிளம்பியது.

மார்ச் 8ந் தேதி இந்திய நேரப்படி இரவு 1 மணி 19 நிமிடத்திற்கு விமானத்தின் துணை பைலட், "ஆல் ரைட்... குட் நைட்” என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகு எந்த சிக்னலும் வரவில்லை என்கிறார்கள் மலேசிய விமானக் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள். அதன்பிறகே விமானம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது அவர்களின் சந்தேகம்.

விமானத்தைக் கடத்தியிருந்தால், இத்தனை நாட்களாக எவ்வித தகவலோ நிபந்தனையோ தெரிவிக்காமல் கடத்தல்காரர்கள் இருப்பார் களா என்றும், விமானத்தில் உள்ள பயணிகளுக்குத் தேவையான உணவு, தண்ணீருக்கு கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் என்றும் கடத்தலுக்கான சாத்தியங்களை மறுக்கிறார்கள் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை அறிந்துள்ள சர்வதேச உளவுத்துறை வல்லுநர்கள்.

கடத்தப் பட்டிருந்தால், இந்நேரம் கடத்தல்காரர்களுக்கும் அவர்களை இயக்குபவர்களுக்குமான தகவல் தொடர்பு லீக் ஆகியிருக்கும் என்றும் அந்த வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

விமானத்தில் இருந்த பயணிகளிடம் செல் போன்கள் இருந்துள்ளன. அவற்றைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சில செல்போன்களுக்கு ரிங் போவதாக உறவினர்கள் சொல்கிறார்கள். ஆனால், பதில் எதுவும் வரவில்லை. எனவே பயணிகளும் விமான சிப்பந்திகளும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் குறைவாகவே இருக்கிறது என்கிறார்கள் விமானத் துறையைச் சார்ந்தவர்கள்.

“45 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் விமானம் பறக்கும்போது விபத்துக்குள்ளானால் பயணிகளுக்கு சில நொடிகளில் மரணம் நேரிட்டுவிடும்” என்கிறார் ஹாங்காங் மருத்துவப் பேராசிரியரான டாக்டர் ஜேம்ஸ் ஹோ. ""விமானமும் பல துண்டுகளாகி, பஞ்சுபோல காற்றில் பறக்க ஆரம்பித்துவிடும்.

அதன் துகள்கள் கடலில் விழுந்திருந்தாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. மாதக் கணக்கிலோ, ஆண்டுக்கணக்கிலோ தேடினால்தான் அது பற்றிய தடயங்கள் கிடைக்கும் என்கிறார்கள் விமான சேவையில் நீண்டகால அனுபவம் பெற்றவர்கள்.

ஒருவேளை, கடத்தல்காரர்களே தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் விமானத்தை சிதறடித்து, மொத்த பயணிகளின் உயிர்களையும் பலி வாங்கிவிட்டார்களா என்ற கோணத்திலும் புலனாய்வு செல்கிறது. இந்த கோணத்தில்தான் அதிரடி திருப்பமாக, கடத்தல்காரர்களுக்கு விமானத்தின் பைலட்டே துணை போயிருக்கக்கூடும் என்றும், அதனால்தான் ரேடாருக்கு எந்த சிக்னலும் கிடைக்காதபடி செய்துவிட்டு ஆபரேஷனை நடத்தியிருக்கிறார்கள் என்றும் புதிய சந்தேகங்கள் கிளம்பின.

என்னவானது என்று தெரியாமல் இருக்கும் மலேசிய விமானத்தின் பைலட் கேப்டன் ஜஹாரி அகமது ஷா, 23 வருட அனுபவமுள்ள சீனியர் பைலட். அவர் மலேசிய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிறைப்பட்டிருப்பவருமான அன்வர் இப்ராஹிமின் உற வினர். மார்ச் 7-ந் தேதி சிறையில் அன்வரை பைலட் ஜஹாரி சந்தித்தார் என்றும் மறுநாள்தான் விமானம் மாயமானது என்றும் மலேசிய விமானத்துறை சொல்கிறது.

“மலேசிய ஆட்சியாளர் களுக்கு எதிரான செயலாக பைலட்டே இந்தக் கடத்தலுக்குத் துணை போயிருக்கிறார். அதனால்தான் பைலட் உள்ளிட்ட சிப்பந்திகள் இருக்கும் காக்பிட்டிலிருந்த சிக்னல்கள் அனைத்தும் அணைக்கப்பட்டு, ரேடாருக்கு எந்த சமிக்ஞையும் கிடைக்காமல் போயிருக்கிறது. விமானத்தை ஆஃப்கானிஸ்தான், மங்கோலியா, சோமாலியா இப்படி எங்கேனும் மறைவாக நிறுத்தியிருக்கலாம். இந்த நாடுகளில் மறைவான ஓடுபாதைகள் இருப்பதாகவும் இவற்றை யார் வேண்டுமானாலும் வெளியுலகத்திற்குத் தெரியாத வகையில் கட்டணம் செலுத்திப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றும் சொல்லப்படுகிறது.

பைலட் அகமதுஷாவின் வீட்டில் பொலிசார் சோதனையிட்டதுடன் அவரது குடும்பத்தாரிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானம் தொடர்பாக “கம்ப்யூட்டரில் இருந்த கோப்புகளை பைலட் அழித்திருப்பது தெரியவருகிறது” என்றும், “இடமின்மை காரணமாக அழித்தாரா வேறு திட்டம் இருக்கிறதா என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும்” என மலேசியா நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பிலிருக்கும் ஹிஷாமுதீன் உசேன் கூறுகிறார்.

நம்பிக்கையும் அனுமானங்களும் மாயமான விமானம் குறித்த புதுப்புதுத் தகவல்களைக் கொட்டிக் கொண்டிருக்கின்றன. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோந்தி ரோஸ் என்ற இளம் பெண், “கடந்த 2011-ம் ஆண்டு நானும் என் தோழி ஜான் மாரியும் பூகெட்டில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்திற்கு காத்திருந்தோம். அப்போது பைலட் ஜஹாரி அகமது ஷா, எங்களை "பைலட் அறையில் இருந்து பயணிக்க விருப்பமா' என்று கேட்டார்.

நாங்களும் சென்றோம். அங்கிருந்தவர்கள் எங்களுடன் மிகவும் ஜாலியாக பேசினர். புகைப்படம் எடுத்தனர். புகைப்பிடித்தனர் என்று சொல்லியிருக்கிறார். பைலட், துணை பைலட் ஆகியோரின் இந்த ஜாலியான மனநிலையை கடத்தல்காரர்கள் சாதகமாக்கிக் கொண்டார்களா என்ற கோணத்திலும் ஆராய்கிறார்கள்.


புரபஷனல் பைலட்டான தன் தந்தையின் மூலம் விமானத்துறையில் ஈடுபாடு கொண்ட, ஆண்ட்ரூ என்கிற அமெரிக்க மாணவர் சமீபத்தில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், மாயமான மலேசிய விமானம் போன்ற போயிங் 777 ரக விமானங்களைப் பொறுத்தவரை அதன் முதுகுப்பகுதி எளிதாகத் துருப்பிடிக்கக் கூடியது. விமானங்களின் முதுகுப்பகுதியில் சாட்டிலைட்டை தொடர்பு கொள்ள உதவும் சாட்காம் அடாப்டர்கள் உள்ளன.

அவை பொருத்தப்பட்டுள்ள இடங்கள் அடிக்கடி துருவேறி பிளந்து கொள்ள வாய்ப்பு உண்டாம். இதனால் சிக்னல் துண்டிக்கப்படுவதுடன், அந்த பிளவின் காரணமாக விமானத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவு குறைந்துகொண்டே போய், பயணிகளுக்கு மயக்கம் ஏற்பட்டு, இறுதியில் சுவாசமே நின்று போகும். கிட்டத்தட்ட 120 விமானங்களில் இந்தக் கோளாறுகள் இருப்பதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுவதை சுட்டிக்காட்டி அவர் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

மலேசிய விமானமான எம்.ஹெச் 370-ம் போயிங் 777 ரக விமானம்தான். அதுவும் இது போன்ற விபத்துக்குள்ளாகியிருந்தால் பைலட் உள்பட விமானத்திலிருந்த அத்தனைபேரும் சில நிமிடங்களில் உயிரிழந்திருப்பார்கள் என்பதுதான் ஆண்ட்ரூ தெரிவிக்கும் செய்தி.

தாய்லாந்து இராணுவமோ "மாயமான விமானத்தின் சிக்னல் தங்களுக்கும் கிடைத்ததாகவும் ஆனால் ராணுவப் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக அதை சொல்ல வில்லை' என்று இப்போது திடீரெனக் கூறுகிறது.

மாலைதீவு பகுதியில் மாயமான விமானத்தின் பகுதிகள் இருப்பதாக குபீர் செய்திகள் வந்து மறைந்தன. வெற்றிலையில் மை போட்டு பார்ப்பது என்பதைத் தவிர மற்ற அனைத்து முயற்சிகளும் மலேசிய விமானத்தின் கதியைக் கண்டுபிடிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன.

தகவல் தொடர்பு சானங்களை எளிய மக்களும் பயன்படுத்தும் இந்த கணினியுகத்தில், ஒரு விமானம் என்ன ஆனது என்பதை இத்தனை நாட்களாக கண்டறிய முடியாமல் இருப்பது, அறிவியலுக்கு விடப் பட்டிருக்கும் சவால்.

இந்நிலையில், மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கைத் தொடர்பு கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், “எங்கள் நாட்டு செயற்கைக்கோள் அனுப்பிய படங்கள் மூலம் பெர்த் நகரத்தின் தென்மேற்கே 2500 கிலோமீட்டரில் கடலுக்கடியில் சில பொருட்கள் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாயமான விமானத்தின் பாகங்களாக இவை இருப்பதற்கு வாய்ப்பு கள் உள்ளன. உறுதிப்படுத்திச் சொல்கிறோம்” என்பதுதான் கடைசி கட்டத் தகவல். சவாலை அறிவியல் சாதனையாக்குமா?

0 Responses to மாயமான விமானம்! அறிவியலுக்கு சவால்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com