Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தன்னுடைய தனிப்பட்ட விடயங்கள் தற்போதைய அரசாங்கத்தினால் அதீத கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்களை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

அத்தோடு, ‘உங்களை அரசாங்கம் கண்காணிப்பதாக’ நீங்கள் (சந்திரிக்கா குமாரதுங்க) குற்றஞ்சாட்டி எழுதியுள்ள கடிதம் ஆதாரங்கள் இன்றி கற்பனைகளுடன் கூடியதாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, தான் அதீத கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அண்மையில் கடிதமொன்றை எழுதியிருந்தார். அந்தக் கடிதம் ஊடகங்களிடமும் பகிரப்பட்டிருந்தது.

குறித்த கடிதத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் நேற்று வெள்ளிக்கிழமை பதிலளிக்கப்பட்டுள்ளது. அதிலேயே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் முழுமையான பகுதி,

மேன்மை தங்கிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
27 சுதந்திர சதுக்கம்,
கொழும்பு - 07

சட்டவிரோத கண்காணிப்பினூடாக முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுக்கு இடையூறு விளைவித்தல்.

மேற்படி விடயம் தொடர்பாக 2014 மார்ச் 05 ஆம் திகதி அனுப்பப்பட்ட உங்களின் கடிதத்திற்கு பதில் அளிக்குமாறு மேன்மை தங்கிய சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நான் பணிக்கப்பட்டுள்ளேன்.

இக்கடிதத்தில் அரசாங்கத்திற்கெதிராகவும் இந்த நாட்டின் பொலிஸ் மற்றும் புலனாய்வு சேவைக்கு எதிராகவும் நீங்கள் தெரிவித்துள்ள பல குற்றச்சாட்டுக்கள் அவற்றை நியாயப்படுத்துவதற்கான எத்தகைய சிறியதொரு சான்றையேனும் கொண்டிருக்கவில்லை என மேன்மைதங்கிய சனாதிபதி குறிப்பிடுகிறார்.

இக்குற்றச்சாட்டுக்களின் தன்மையைக் கருத்திற்கொண்டு தேவையான சான்றுப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லாத நிலையில், நீங்கள் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்துகொள்வதற்கு விசாரணைகளைச் செய்ய வேண்டியிருந்தமையினாலேயே உங்களது கடிதத்திற்கு பதிலளிக்கத் தாமதமானது.

உங்களது அந்தரங்கத்தன்மை மீறப்பட்டிருப்பதாகவும், உங்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாகவும், உங்களது தனிப்பட்ட பாதுகாப்பு கரிசனைகள் குறித்தும் உங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், உங்களது நடமாடும் சுதந்திரம் தடுக்கப்பட்டது தொடர்பாகவும், நீங்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தபோதும் அத்தகைய குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என மேன்மைதங்கிய சனாதிபதி குறிப்பிடுகிறார்.

உண்மையில் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பவை எத்தகைய அடிப்படைகளுமற்ற உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களாகும்.

உங்களது தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்பாடல்களோ கொழும்பு, ஹொரகொல்லையிலுள்ள உங்களது இல்லங்களிலோ எவ்வித கண்காணிப்பும் கிடையாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேன்மை தங்கிய சனாதிபதி விரும்புகிறார்.

நீங்கள் தேசிய புலனாய்வு சேவை பிரிவின் அதிகாரிகள் என அடையாளம் கண்ட ஒரு பிரிவினர் உங்களது நண்பர்கள் பலரின் வீடுகளுக்குச் சென்று விசாரணை செய்திருப்பதாக நீங்கள் 2009 ஓக்டோபர் 10ம் திகதி, அப்போதைய பொலிஸ் மா அதிபராக இருந்த ஜயந்த விக்ரமரடன் அவர்களுக்கு அனுப்பியதாக குறிப்பிட்டுள்ள எழுத்துமூல முறைப்பாடு மட்டுமே உங்களது குற்றச்சாட்டுக்களில் காலப் பகுதி குறிப்பிடப்பட்டிக்கும் குற்றச்சாட்டாகும்.

இவர்கள் உண்மையிலேயே அதிகாரிகளா? அல்லது புலனாய்வு துறையைச் சார்ந்தவர்களா என்பது தொடர்பில் நியாயமான சந்தேகம் எழுகின்றது. இம்முறைப்பாடு செய்து பல வருடங்கள் சென்றுள்ளதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். எனவே, பொலிஸ் திணைக்களத்திற்குப் பொறுப்பான ஒரு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய ஒரு முறைப்பாடு விசாரணை செய்யப்படாதது குறித்தோ அல்லது அதற்கு முறையான பதில் கிடைக்காமை குறித்தோ அப்போது சனாதிபதிக்கு ஏன் நீங்கள் அறிவிக்கவில்லை என்றும் சனாதிபதி ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு சேவை அதிகாரிகள் நீங்கள் செல்லும் ஹோட்டல்களில் முகாமையாளர்களிடம் விசாரணை செய்வதாகவும் நீங்கள் சந்திக்கும் நபர்கள் குறித்து அறிக்கையிடுவதாகவும், இதனால் ஹோட்டல்களில் தனிப்பட்ட சந்திப்போ அல்லது கூட்டமோ நடத்துவதற்கு முடியாதிருப்பதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அது தொடர்பான இடங்கள், ஆட்கள் நேரம், திகதி குறித்த எத்தகைய சான்றுகளும் முன் வைக்கப்படவில்லை என்பதையும் சனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள உங்களது நீண்டகால நண்பர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக செய்யப்பட்ட குற்றச்சாட்டும் அநுராதபுரத்தில் நீங்கள் வெளிநாட்டு நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றில் இருக்கும் போது நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ள நிகழ்வு குறித்தும் அதனையே சொல்ல வேண்டியுள்ளது.

இந்த எந்த குற்றச்சாட்டுத் தொடர்பிலும் இடம், ஆட்கள் காலப்பகுதி உட்பட எத்தகைய சாட்சியோ சான்றுகளோ இல்லாத காரணத்தினால் அவற்றின் உண்மைத் தன்மை தொடர்பில் விசாரணை ஒன்றை செய்ய முடியாது என்பதையும் சனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உங்களது நண்பர்களுக்கும் உதவியாளர்களுக்கும் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும் அதன் மூலம் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டும் சனாதிபதி பதவிக்கு வந்து எட்டு வருட காலப்பகுதியில் ‘எமது கட்சியில்’ மற்றும் ‘எமது அரசாங்கத்தின்’ சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு உங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதிலிருந்து தவிர்ந்து இருக்குமாறு சனாதிபதியால் குறிப்பிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டானது, சனாதிபதி அவர்கள் அப்படி யாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள் என்று எவருடைய பெயரையும் நீங்கள் முன் வைத்திருந்தால் அதன் உண்மைத் தன்மையை கண்டறிய உதவியாய் இருக்கும் என்பது சனாதிபதியின் கருத்தாகும்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ‘ஒரு வெள்ளை வேன் கலாசார சூழல்’ குறித்து சனாதிபதி ஆச்சரியமடைந்துள்ளார். அத்தகையதொரு ‘கலாசாரம்’ உங்களது சனாதிபதி பதவி காலத்திற்கு முன்னரே தோன்றி உங்களது சனாதிபதி காலப்பகுதி முழுவதும் தொடர்ந்திருந்தது.

மிகுந்த வன்முறைகளுக்கும் இரத்த ஓட்டத்திற்கும் காரணமான பயங்கரவாதத்தை இந்த அரசாங்கம் தோற்கடித்தது என்ற வகையில் வெள்ளை வேன் கலாசாரம் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தில் கிடையாது.

இது இந்த நாட்டுக்கு எதிராக அணிவகுத்திருக்கும் வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு பொருந்துகின்ற வகையில் இந்த நாட்டின் பிரதிமையை வெளிநாடுகளில் களங்கப்படுத்துவதில் குறியாய் உள்ளவர்களின் மனங்களிலேயே உள்ளது.

“உங்களது அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் எவரையும் கொலை, காணாமல் போதல், தாக்குதல்கள் மூலம் அழித்துவிடும் நடவடிக்கை நிலவுவது” உங்களது பாதுகாப்பு குறித்த கரிசணைக்கு வினைமையான காரணமாக இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பதை மேன்மை தங்கிய சனாதிபதி முழுமையாகவும் உறுதியாகவும் நிராகரிக்கின்றார்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கூற்றாகும். பெரும்பாலான முக்கியமான நபர்கள் இந்த அரசாங்கத்திற்கும் அதில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களுக்கும் எதிராக வெளிப்படையாக விமர்சனங்களை தெரிவித்தும் கடுமையாக எதிர்த்தும் வருவது நிருபனம். சமாதானமும் சுதந்திரமும் கிடைக்கப்பெற்றுள்ள சூழலில் இந்த அரசாங்கத்தின் கொள்கைளை எதிர்க்கும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் மிகத் தெளிவாக காணக்கூடியதாக இருப்பதை சனாதிபதி சுட்டிக் காட்டுகிறார்.

இது தொடர்பாக நீங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் நாட்டில் சமாதானத்தை பலப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கும் விரும்பாதவர்களினால் வெளிநாடுகளிலும் இங்கும் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஒத்தவையாகவே உள்ளன.

நீங்கள் விரும்பிய எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்குத் தேவையான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக சனாதிபதி தெரிவித்துள்ளார்.

உங்களது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் உங்களது அந்தரங்கத்தன்மை மீறப்பட்டிருப்பதாகவும் உங்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் இக்கடிதத்தில் நீங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கும் சனாதிபதி, உங்களது தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் சந்தேகப்படுவதற்கு எவ்வித காரணமும் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி என்ற வகையில் நாட்டின் எல்லா பிரஜைகளினதும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதோடு, அந்த வகையில் முன்னாள் சனாதிபதியின் அடிப்படை சுதந்திரத்தை உறுதி செய்வதிலிருந்து எந்த வகையிலும் விலகியிருக்கவில்லை.

முன்னர் குறிப்பிட்டதுபோன்று தேசிய புலனாய்வு சேவையின் நடவடிக்கைகள் குறித்து நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றதென நிராகரித்துள்ள சனாதிபதி, உங்களது காலப்பகுதியில் உங்களது சனாதிபதி பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் எத்தகைய பாரதூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்பதையும் நினைவுபடுத்துகிறார்.

இன்று அத்தகைய நிலைமைகள் இல்லாதிருப்பதையிட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கண்காணிக்கப்படுவதாக நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் சனாதிபதி என்ற வகையில் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் நீங்கள் செல்லும் இடங்களில் தேவையான பாதுகாப்பை வழங்குவது பொலிசாரின் கடமையாகும் என்பதையும் சனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஒரு பாதுகாப்பு முறைமையாகும். நீங்களும் உங்களது உதவியாளர்கள் தொடர்பிலும் இந்த நடைமுறைகள் தொடர்பில் வித்தியாசமான மனோ நிலையில் தேவையற்ற விதத்தில் உணர்ச்சிவசப்பட்டு வேண்டுமென்றே கண்காணிக்கப்படுவதாக நீங்கள் குறிப்பிடுவது அறிவார்ந்த ஒரு விடயமல்ல என்றும் சனாதிபதி கருதுகிறார். அதேபோன்று யதார்த்தம் பற்றிய தெளிவின்றி நீங்கள் தேவையற்ற வகையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருப்பதாக தெரிகிறது.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றங்களை தடுப்பது தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் நன்கு அறியும் என்பதோடு, அந்த சட்டங்களை மீறுகின்ற எந்த ஒருவருக்கெதிராகவும் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் சனாதிபதி உறுதிப்படுத்துகின்றார்.

கடைசியாக நீங்கள் முன் வைத்திருக்கும் கற்பனைகளுடன் கூடிய இக்கடிதத்தை நீங்கள் அனுப்பி இருப்பது ஜெனிவாவிலும் ஏனைய மேற்கு நாடுகளிலும் உள்ள சர்வதேச சக்திகள் இலங்கைக்கு எதிராக முழுமையாக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்ற சந்தர்ப்பத்திலாகும் என்றும் சனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படிக்கு
உண்மையுள்ள
லலித் வீரதுங்க
சனாதிபதியின் செயலாளர்

0 Responses to நீங்கள் அனுப்பி வைத்திருப்பது கற்பனைகளுடன் கூடிய கடிதம்; சந்திரிக்காவிற்கு, மஹிந்த பதில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com