ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நாம் பொருட்படுத்தப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எமது செயற்பாடுகளை மற்றொரு நாட்டுக்கு ஒப்படைக்க நாம் தயாரில்லை. ஜெனீவா தீர்மானம் எதுவாக இருப்பினும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஜெனீவா மனித உரிமைப் பேரவை நிலவரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக அரசாங்க தகவல் மையம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் எமக்கு பலமான சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. மனித உரிமைகளை இன்று அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அரசியல் நோக்கங்களுக்காக மிகவும் சூட்சுமமான முறையில் மனித உரிமைகள் என்ற போர்வையின் கீழ் கொண்டு வருகிறார்கள். மார்ச் 29 ஆம் திகதியுடன் இலங்கைக்கு எதிராக மூன்றாவது தடவையாக தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. நவநீதம்பிள்ளை ஏற்கனவே இலங்கைக்கு எதிரான மனப்பான்மையை கொண்டவர் என்பது நாம் அறிந்த விடயமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற தீர்மானத்தின் 8வது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை நவநீதம்பிள்ளையிடம் கையளிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது திருடனின் தாயிடமே திருடனை பற்றி கேட்பது போன்றது. ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், இலங்கை அதனை பொருட்படுத்தாது. அவ்வாறான நிலைமையில் எமது செயற்பாடுகளை மற்றுமொரு நாட்டுக்கு ஒப்படைக்க வேண்டிய நிலை உருவாகும். அதனை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. இது எமது அரசியலமைப்புக்கு முரணானது மட்டுமல்ல, இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், இலங்கை அதனைப் பொருட்படுத்தாது: ஜீ.எல்.பீரிஸ்