Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்து 5 வருடங்களைக் கடந்து விட்ட போதிலும் மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும், துஷ்பிரயோகங்களும், பாலியற்தாக்குதல்களும் தொடர்ந்து நடப்பதாக பிரித்தானியாவிலிருந்து இயங்கும் சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரித்தானியாவால் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தவர்கள் சிலர், ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு திரும்பி வந்த பின் அளித்திருந்த வாக்குமூலங்களின் அடிப்படையில், சர்வதேச மனித உரிமை அமைப்பு (International Foundation for Human Rights) இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளது.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணிகள் அமைப்பின் அணுசரணையில் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக இந்த அறிக்கையை உருவாக்கிய விசாரணைக் குழுவின் தலைவரும், இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினராக இருந்தவருமான, மனித உரிமைகள் ஆர்வலர் யாஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் 40 பேரிடம் இருந்து 9 சட்டத்தரணிகள் இணைந்து வாக்குமூலங்களைப் பெற்று அறிக்கையை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுதல், தடுத்துவைக்கப்படுதல், கொடூரமான சித்ரவதைகள் மற்றும் பாலியல் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்படுதல் போன்றவற்றுக்கு தாம் ஆளான நேர்ந்ததாக இந்த விசாரணை குழுவிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் இருந்து வெளியேறி ஐக்கிய இராஜ்ஜியத்துக்குள் மீண்டும் திரும்பிவந்தவர்களையே தாங்கள் விசாரித்திருந்ததாக யாஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

வாக்குமூலங்களில் தெரிவிக்கப்பட்ட விசயங்களை நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் என்றே தாங்கள் குறிப்பிடுவதாகவும், ஏனென்றால் இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றும், இலங்கை அரசாங்கமும் இது தொடர்பான விசாரணைகளை இதுவரை நடத்தியிருக்கவில்லை என்றும் யாஸ்மின் சூக்கா குறிப்பிட்டார்.

பிரித்தானிய மனித உரிமை ஆணையத்தின் ஊடாக தமது அறிக்கையினை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், இலங்கை அரசாங்கத்தின் பதில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இலங்கையில் இப்படியான கொடுமைகள் எல்லாம் முடிவுக்கு வந்தால்தான், அந்நாட்டில் சமாதானம் மலருமென்று தாம் நம்புவதாக யாஸ்மின் சூக்கா மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, மனித உரிமைகள் ஆர்வலர் யாஸ்மின் சூக்கா முன்வைத்த குறித்த குற்றச்சாட்டுக்கள் எல்லாமே அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் என்று இலங்கை இராணுவப் பேச்சாளரான ருவான் வணிகசூரிய பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான யாஸ்மின் சூக்காவின் அறிக்கைகள் எல்லாமே இலங்கை அரசுக்கு எதிரானவை, பக்கச்சார்பானவை. நாட்டுக்கு வெளியே செயற்படும் பிரிவினைவாதிகள் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் நிதி திரட்டி அதன் துணையோடு, அவர்கள் கூறும் தனி ஈழம் என்கிற இலக்கை அடைவதற்கு பக்கசார்பான யாஸ்மின் சூக்கா போன்ற நபர்கள் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் எதற்குமே உரிய நியாயமான ஏற்கத்தக்க ஆதாரங்கள் எவையுமே இல்லை என்று இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையில் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன: சர்வதேச மனித உரிமை அமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com