Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலக சரித்திரத்தை ஆராயுமிடத்து, அங்கு பலவிதப்பட்ட அரசியல் விடுதலைப் போராட்டங்கள் வெற்றியடைந்ததையும், தொடர்ந்து போராடுவதையும், அறவே அழிந்து போயுள்ளதையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது.

தமிழ் ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரையில், இது அறவே ஒழிந்து விட்டதாக இவ்வேளையில் எவரும் கூறமுடியாது. இவ்விடயத்தில் இன்றுவரை பல கேள்விகளுக்கும் விடை காணாது உள்ளோம்.

ஆனால், ஆபிரிக்க நைஜீரிய நாட்டின் தென்கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற 'வாபெறா' மக்களது போராட்டம்நல்ல வெற்றியடைந்தது மட்டுமல்லாது, இப்பிரதேசத்தின் சுதந்திரத்திற்கான சுய பிரகடனத்தை மேற்கு நாடுகள் உட்பட சில நாடுகள் அங்கீகரித்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களது போராட்டம் அடியோடு அழிந்து முடிந்தது!

1967 முதல் 1970 வரை நடைபெற்ற இவர்களது யுத்தம்,நைஜீரியாவின் ஜனாதிபதியான தளபதி யாகுபுகோவேன் என்பவரால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சர்வதேச மகாநாட்டில், தளபதி யாகுபுகோவேனைச் சந்தித்து சிநேகபூர்வமாக ஒரு சம்பாஷணையை நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்வேளையில் நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி தளபதி யாகுபு கோவேன் பின்வருமாறு கூறினார்:

''வாபெறாவின் விடுதலை இயக்கம் யுத்தத்தை நிபந்தனையின்றி போர் நிறுத்தத்துக்கு முன்வந்ததும் உடனடியாகவே நான் 'இங்கு வெற்றியோ, தோல்வியோ இல்லை' என அறிவித்து பின்னர் புனர்வாழ்வு, மீள்கட்டுமானம் ஆகியவற்றுடன் ஓர் அரசியல் தீர்வையும் முன்வைத்தேன்.'' இவ்வாறு என்னிடம் தெரிவித்த, தளபதி யாகுபுகோவேன், தொடர்ந்து, இதன் அடிப்படையில் நைஜீரியாவின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறு மேம்பட்டதாகவும் கூறினார்.

இன்று 'வாபெறா' மக்கள் பற்றி யார்- எங்கு கதைக்கிறார்கள்? அதேவேளை, 'வாபெறா' போராட்டத்தை அடக்கி ஒடுக்கியதற்காக நைஜீரியாவுக்கு எந்தவித சர்வதேச அழுத்தங்களும் இல்லை என்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

உலக சர்வாதிகாரிகள், விடுதலைப் போராட்டங்களை நசுக்க முனையும் அரசியல் தலைவர்கள், தளபதி யாகுபுகோவேனிடம் கற்பதற்கு நிறைய உண்டு.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் 'வாபெறா'  மக்களது போராட்டத்திற்கும் இடையில் ஒருசில ஒற்றுமைகள் உண்டு.

இன்று சர்வதேசம்,சிறிலங்கா மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் வேளைகளில், இலங்கையின் தெற்கில் வாழும் மக்கள், இதை செய்வது சிறிலங்கா அரசு அல்ல, ராஜபக்ச அரசே இவற்றைச் செய்வதாக வாதம் புரிகின்றனர். அவ்வளவு தூரம் மிக மோசமான நாகரீகம் அற்ற முறையில் ராஜபக்ச அரசாங்கம் ஆட்சி செய்கிறது என்பதே இதன் பொருளாகும்.

ராஜபக்ச அரசின் யுத்தத்தின் வெற்றி என்பது சர்வதேச நாடுகளின் வெற்றியே! இவ்வெற்றியை மிக விமரிசையாகக் கொண்டாடியதன் மூலம் ராஜபக்ச அரசு தமிழ் இளைஞர்களை எதிர்காலத்தில், தம்மீது பழிவாங்கும் மனப்பான்மைக்கு வித்திட்டுள்ளது.

யதார்த்தம்

இன்று சிறிலங்காவின் அரச மட்டத்தில் மோசடிகள் மிக உச்ச நிலையை அடைந்துள்ளது. பத்திரிகைச் சுதந்திரம் தொடர்ந்து மீறப்பட்டு வருகிறது. வெள்ளை வான் கடத்தல்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் மோசமடைகின்றன. சிறிலங்கா போதை வஸ்துக்களின் மோட்சமாக விளங்குகிறது. அதேவேளை, வடக்கு � கிழக்கு மக்கள் கேட்பார் கைப்பிள்ளைகளாக வாழ்கின்றார்கள். சர்வதேசம் இவர்களது நிலையை நன்கு அறிந்துள்ள காரணத்தினால் இவற்றை இங்கு பட்டியலிடவில்லை.

வடக்கு-கிழக்கு பிரச்சனையை உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறும் ராஜபக்ச அரசாங்கத்தினர், சர்வதேசத்தில் தங்களை நியாயப்படுத்த பெருந்தொகையான பணத்தை செலவிடுகின்றனர். வழமைபோல் இம்முறையும் சிறிலங்கா மீது ஒருகண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, நிறுவப்பட்ட காலம் முதல்,தனது அங்கத்துவ நாடுகளின் மனித உரிமை நிலைமைகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறது. இதன் அடிப்படையில் மிகவும் மோசமாக மனித உரிமைகளை மீறும் நாடுகளில் சிறிலங்காவும் ஒன்றாகும்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால், அங்கு மனித உரிமை மீறல்களை நியாயமான முறையில் பரிசீலிப்பதில் பல தடைகள் உள்ளன. இந்தச் சபையில் எந்தக் கண்டனப் பிரேரணையானாலும் அதற்கு ஆசிய-ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் ஆதரவு இல்லாமல் நிச்சயம் நிறைவேற்ற முடியாது.

இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 25-வது கூட்டத்தொடரில் தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய நாடுகளின் அறிக்கை மிகவும் கவலைக்குரியது. காரணம், உலக நாடுகளில் உள்ள சர்ச்சைகள், பிரச்சினைகளை அந்தந்த நாட்டு மக்களே தீர்க்க வேண்டும் என்று இந்த நாடுகள், கூறுகின்றன.

உண்மைகை; கூறுவதானால், உலக நாடுகள் முன்னர் இதே கருத்தைக் கொண்டிருந்தால், முன்பு ரொடீஷியா எனும் சிம்பாப்வேயிலும் தென் ஆபிரிக்காவிலும் இன்றும் வெள்ளையர்களின் ஆட்சியே தொடர்ந்து நீடித்திருக்கும்.

நல்லவை

எது எவ்வாறிருப்பினும், மனித உரிமைச் சபையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறிலங்கா மீது கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்படுவது மட்டுமல்லாது, இந்தப் பிரேரணைகள் படிப்படியாக முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பது மிக நன்மையான விடயமாகும். இம்முறை நிறைவேற்றப்படுவதற்கு முயற்சிக்கப்படும் கண்டனப் பிரேரணையில் சர்வதேச விசாரணை என்ற பதம் இல்லை என்பது உண்மை.

ஆனால் இந்தக் கண்டனப் பிரேiணையில், சிறிலங்கா மீது பெருமளவு சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இந்தக் கண்டனப் பிரேரணை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின்னர், ராஜபக்ச அரசாங்கத்தினால் சர்வதேச கண்காணிப்பின்றி எந்தவித விசாரணைகளையும் மேற்கொள்ள முடியாது. அதாவது விசாரணைகள் யாவும் சிறிலங்கா அரசின் கையில் இருந்து சர்வதேசத்தின் கைகளுக்கு மாற்றப்படுகிறது.

அடுத்து இந்தக் கண்டனப் பிரேரணை, ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் காரியாலயத்திற்கு சிறிலங்கா விடயத்தில் பெரும் அதிகாரங்களைக் கொடுக்கிறது.

கெட்டவை

ராஜபக்ச அரசின் இன்றைய நடைமுறைகள் யாவும் ஒருவல்லரசு போன்றும், அன்று ஈராக்கின் சதாம் ஹூசெய்ன்,  லிபியாவின் கேணல் கடாபி ஆகியோரின் கொடுங்கோல் ஆட்சி வடிவிலும் செல்கின்றன.

சிறிலங்கா, தன் மீது நிறைவேற்றப்பட்ட முதலாவது கண்டனத் தீர்மானத்தையே ஏற்றுக் கொள்ளாத நிலையில் அதன் மீது மேலும்மேலும் (10)  பிரேரணைகளை நிறைவேற்றுவதால் என்ன பயன் என்பதை இக்கண்டனத் தீர்மானங்களைக் கொண்டு வரும் நாடுகள் ஒருகணம் சிந்திக்க வேண்டும்.

மிகவும் வேடிக்கையும், ஒற்றுமையுமான விடயம் என்னவெனில், சிறிலங்கா தன் மீது கொண்டு வரப்படவுள்ள பிரேரணையை எதிர்க்கிறது. அதேபோல் சில புலம்பெயர் தேசத்துக் குழுக்களும் எதிர்த்து அறிக்கை வெளியிடுகின்றன.

சர்வதேச விசாரணை என்று கூறுவதை இவர்கள் எவ்வாறு கற்பனை செய்தார்களோ தெரியவில்லை! இவர்களுக்கு மனித உரிமை சபையின் நடைமுறைகள், வாக்களிப்பு ஆகிய விடயங்களில் போதியளவும் அனுபவமின்மையும் காரணமாக இருக்கலாம். இவர்கள் அரசியல்வாதிகளின் கதைகளைப் 'பொன்வாக்காக' எண்ணி விட்டார்கள் போலும்.

உலகில் கொண்டு       வரப்படும் எந்தப் பிரேரணையாக இருந்தாலும் சொற்பதம், பொருள்பதம் ஆகியவை கூடுதலானவாக்குகளுக்காக மாற்றப்படுவது சர்வசாதாரண விடயம்.

இன்றுள்ள கண்டனப் பிரேரணை மீதுதான் வாக்கெடுப்பு நடைபெறும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. இவை தாமதப்படுவதனால் மேலும் சிங்களமயம், பௌத்தமயம், இராணுவமயம், நிலப்பரப்பு ஏற்படும் என்பது உண்மை. ஆனால் இன்றைய நிலையில் சர்வதேச சமுதாயமும் தமிழ் மக்களுக்குப் பதில் கூற வேண்டியவர்களாக உள்ளனர்.

நாம் ஒன்றை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்று வரை இவ்வளவும் நடந்தேறியும், எமது விடயம் ஐ.நா.வின் பொதுச் சபையையோ அல்லது பாதுகாப்புச் சபை வரையோ செல்லவில்லை. ஆகையால் நாம் மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யாது நாட்டில் உள்ள மக்களை மனதில் கொண்டு மிகவும் இராஜதந்திரத்துடன் பயணிக்க வேண்டும்.

மோசமானவை

மிகவும் கொடூரமான விடயம் என்னவென்றால், ஓர் இனஅழிப்பை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசிற்கு, புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சீனா, ரஷ்யா, கியூபா போன்ற நாடுகளுடன் இணைந்து வெனிசுவேலா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வக்காளத்து வாங்குவதுதான்.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பமான நாளில் இருந்து ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள், தமிழர்களின் அரசியல் போராட்டங்களை பயங்கரவாதம் எனக் கூறி பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாது, அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றைத் தீர்க்காமல், காலம் கடத்துவதற்காகச் சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றன.

1972-ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பலம் இருந்தால் தமிழர்களது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என அடுத்தடுத்து பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் கூறி வந்தன. இந்நிலையில், இன்றைய ராஜபக்ச அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பலத்துக்கு மேல் இருந்தும் தொடர்ந்து காலம் கடத்தி வருகிறார்கள். கற்பனைக் கதைகளைக் கொண்ட 'மகாவம்சம்' இலங்கைத்தீவு சிங்களவருக்கு மட்டுமே உரியதாகக் கூறப்பட்டிருப்பதே இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணியாக அமைகிறது.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவை ஏற்றுக் கொண்டு அதன் அமர்வுகளில் தமிழர் கூட்டமைப்பு பங்குபற்றினால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என ராஜபக்ச அரசு தரப்பினர் உலகளவில் முழுப்பொய்யைச் சொல்கிறார்கள். எந்தச் சிங்கள அரசும் தமிழர்களுக்கு எதையும் தரப் போவதுமில்லை, தமிழர்கள் சிங்கள அரசுகளுடன் பேச்சுவார்த்தைக்குப் போவதனாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை.

இப்போதைய சிறிலங்கா அரசினுடைய சிந்தனைத் திட்டம் மிகவும் அற்பத்தனமானது. தற்போதைய மனிதஉரிமை ஆணையாளராக உள்ள திருமதி நவநீதம்பிள்ளையின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதனால், இவரது பதவிக்கு வரும் புதிய ஆணையாளருடன் சகலதையும் மிக இலகுவாகச் சமாளிக்க முடியுமாம்!  சிறிலங்கா அரசாங்கத்தின் அற்பத்தனமான இந்தச் சிந்தனையை சர்வதேச சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனது முன்னைய கட்டுரையில் குறிப்பிட்ட கூற்றை இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். ''கல்வித் தரப்படுத்தலுடன் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. சர்வதேச விசாரணையை ஏற்படுத்தாது காலம் கடத்துவதனால் மீண்டும் ஆயுதப் போராட்டம் உருவாவதற்கான நிலைமைகள் உருவாகும்;.''

குறிப்பு

இப்போது வரையப்பட்டுள்ள கண்டனப் பிரேரணையில் திருப்தி இல்லாதோர், முன்னாள் ஐ.நா.மனித உரிமை ஆணையாளாரான திருமதி லூயிஸ் ஆபரின் கருத்தை கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டுள்ளார்கள்.

திருமதி லூயிஸ் ஆபர் கூறியதாவது: 'தமிழ் அமைப்புகளினால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மீறல்களை ஒருபொழுதும் மறுக்க முடியாது. புலம்பெயர் தேசத்து தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் நடவடிக்கைகள், இன்று ராஜபக்ச அரசு தன்னை நியாயப்படுத்தவும், இன்னுமொரு ஆயுதப் போராட்டம் பிறக்கலாம் என சாக்கு போக்கு கூறவும் வழிவகுத்துள்ளன.

கண்டனப் பிரேரணை இறுக்கமானதாகக் காணப்படவில்லை என்று கூறுபவர்கள், இறுக்கமான கண்டனப் பிரேரணை ஒன்று முன்வைக்குமிடத்தில் வாக்களிப்பில் தோல்வியடைந்தால் என்ன செய்வார்கள்? என்ன கூறுவார்கள்?

முதலாளித்துவத்துக்கு எதிரானவர்கள் அமெரிக்காவைக் குறை கூறுவார்கள், காலனித்துவதற்கு (குடியேற்றவாதத்துக்கு) எதிரானவர்கள் பிரித்தானியாவைக் குறை கூறுவார்கள். வழமையாகவே இந்தியாவைக் குறை கூறுபவர்கள், இந்தியா எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டதாகக் கூறிக்கொண்டே இருப்பார்கள்.

சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை வேண்டும் என எண்ணும் புலம்பெயர் தேசத்து தமிழர்கள், முதலில் தாம் சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் உணவு, தின்பண்டங்கள், மரக்கறி, குடிவகைகள் வாங்குவதை நிறுத்த வேண்டும்.

0 Responses to ஐ.நா முதல் வரைவு தீர்மானமும் நல்லவை, கெட்டவை, மோசமானவை! ச.வி. கிருபாகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com