Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சியில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவர் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை விசாரணை நடத்தி உரிய முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம், இலங்கையின் இவ்வாறான செயற்பாடுகளே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வழி வகுத்தது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரும் கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை தருமபுரம் பகுதியில் ஜெயகுமாரி பாலேந்திரன் என்ற தாயாரும், அவருடைய 13 வயதுடைய மகளும் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாகவே மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாகிய ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற மனித உரிமைகள் ஆவண மையத்தின் ஆலோசகராகிய ருக்கி பெர்னாண்டோ, யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் பணிப்பாளராகிய அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகிய இருவருமே பயங்கரவாதப் தடுப்புப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் ஆவர். ஜெயகுமாரி கைதுசெய்யப்பட்டபோது தர்மபுரம் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இவர்கள் தகவல்களைத் திரட்டச் சென்றிருந்த வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: த.தே.கூ

கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரப்பட்டள்ளது.

காணாமல் போயுள்ளவர்களுக்காக அவர்களது உறவுகள் போராடினால் கடத்தப்படலாம் அல்லது கைதுசெய்யப்படலாம். அதேபோன்று, பாதிக்கப்பட்டவர்களுக்காக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் செயற்பட்டாலும், அவர்களும் கைதுசெய்யப்படலாம் அல்லது காணாமல் போகச் செய்யப்படலாம் என்பதை வெளிப்படுத்துவதாகவே கிளிநொச்சியில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கிளிநொச்சியில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது; அமெரிக்கா கவலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com