Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாண சபை தமிழ் மக்களையும், தமிழர் பிரதேசங்களையும் திட்டமிட்டு புறக்கணித்து, இனரீதியாகச் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையினால் இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு போல இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளிலும் தமிழ் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் 4, அம்பாறையில் 4, மற்றும் திருகோணமலையில் 2 என்ற எண்ணிக்கையில் கிழக்கு மாகாணத்தில் 10 கிராமங்கள் இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 18 சதவீதமான தமிழர்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு தமிழ் கிராமங்களும் உள்ளடக்கப்படவில்லை. 3 முஸ்லிம் கிராமங்களும், ஒரு சிங்கள கிராமமும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இரா.துரைரெத்தினம் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டிலும் அம்பாறை மாவட்ட தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன விகிதாசாரத்தின்படி, 3 தமிழ் கிராமங்களும், ஒரு முஸ்லிம் கிராமமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால், இரண்டு முஸ்லிம் கிராமங்களும், இரண்டு தமிழ் கிராமங்களும் அங்கு அபிவிருத்திக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் சுட்டிக்காட்டியபோது, இந்த ஆண்டு அப்படி நடைபெற மாட்டாது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவாதம் வழங்கியிருந்த போதிலும் அது மீறப்பட்டுள்ளதாகவும் இரா.துரைரெத்தினம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 Responses to கிழக்கு மாகாண சபை தமிழ் மக்களையும், தமிழர் பிரதேசங்களையும் புறக்கணிக்கின்றது: இரா.துரைரெத்தினம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com