Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த கல்வியாளர்களின் பங்களிப்பும் சிறந்த நிந்தனையாளர்களின் பங்களிப்பும் மிகமிக அவசியமான ஒன்று. அப்படிப்பட்ட கல்வியாளர்களும் பகுத்தறிவாளர்களும் மண்ணில் பிறக்கும்போது சாதாரண பிறப்பாகத்தான் பிறக்கின்றார்கள்.

அவர்களை கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நல்ல அறிவாளிகளாகவும் புத்தியீவிகளாகவும் நல்ல மனிதர்களாகவும் மாற்றிக்கொண்டிருக்கின்றது.

பல்கலைக்கழகம் என்பது ஒரு பழத்தேட்டத்தை போல அறிவுப் பசி தேடிவரும் வேடந்தாங்கிப் பறவைகளின் பசியினை போக்கி, ஆக்கத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. எத்தனையோ பறவைகள் வந்தாலும் அத்தனை பறவைகளும் அங்கே தமக்குத் தேவையான கல்விக்கனிகளை உண்டு, மகிழ்ந்து பறந்து சொல்கின்றன. ஆனால் பல லட்சம் பறவைகள் வந்தாலும் பல்கலைக்கழகங்கள் மட்டும் ஒரே இடத்தில் இருந்து தனது பணியினை செய்து கொண்டிருக்கும்.

ஒரு கல்விக்கூடம் மூடப்பட்டால் அது நூறு சிறைச்சாலைகள் திறக்கப்படுவதற்கு சமன் என்று உலகில் பல அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆனால் சிங்கள தேசமோ எத்தனை சிறைச்சாலைகள் திறக்கப்பட்டாலும் பல்கலைக்கழகங்களை மூடுவதும் திறப்பதுமாக மாணவர்களின் கல்வியினை சீரழித்துக் கொண்டிருக்கின்றதே...!

இதன் நோக்கம் என்ன. ?

அரசியல் என்பது பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டாலும் அரசியலுக்கும் பாடசாலைகளுக்கும் சம்பமந்தம் ஏதும் இல்லை. ஆட்சி மாற்றம், அரசியல் போராட்டம் என்று எது நடந்தாலும் கல்விக்கூடங்களை மூடுவதாலோ அல்லது அழிப்பதினாலோ எந்த நன்மைகளும் கிட்டப்போவதில்லை. மாறாக தீமைகளே வந்தடையும்.

உலகத்தின் எத்தனையோ பலம்மிக்க இராணுவங்கள் வந்தாலும் எத்தனையோ அணுகுண்டுகள் போட்டாலும் மாணவ சக்திக்கு முன்னே அவை அத்தனையும் செயலிழந்து போகும். அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் தலைவிரித்து கொடும் தாண்டவம் போடும் இலங்கைத் தீவுக்குள்ளே! தமிழ் மாணவ மாணவிகள் வஞ்சிக்கப்படுவதை உலகம் இன்றுவரை கண்டுகொள்ளாது இருப்பது வேதனையான ஒன்றே.

போர் வெறியர்களாகவும் இனவெறியர்களாகவும் மாறிப்போன சிங்கள ஆட்சியாளர்களின் முட்டாள்தனமான செயற்பாடுகளால் தமிழ் மாணவர்கள் தண்டிக்கப்படுவதும் வஞ்சிக்கப்படுவதும் பல தசாப்தங்களாக நடைபெற்றுக் கொண்டிருப்பதினை கடந்த வரலாறுகள் சொல்லும்.

ஆனால் அதன் விளைவுகளை சிங்கள மேலாதிக்கமும் சிங்களப் பேரினவாதிகளும் எவ்வாறு எதிர்கொண்டார்கள் எப்படிப்பட்ட விளைவுகளை சந்தித்தார்கள் என்பதை மறந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அதை எழுச்சிமிகு போராட்டமாக மாற்றிய பெருமை மாணவ சமுதாயத்தையே சாரும். அன்று பல்கலைக்கழக தரப்படுத்துதல்களில் தமிழ் மாணவர்கள் ஓரம்கட்டப்பட்டதே இதற்கான காரணமாக அமைந்தது.

அரச அலுவலகங்களிலும் உயர்ந்த பதவிகளிலும் சிங்கள மாணவர்களை அமர்த்திவிடவேண்டும் என்பதற்காக அன்றய ஆட்சியாளர்களினால் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டாலும் அதையும் தாண்டி சாதித்து காட்டியது தமிழ் மாணவ சமூகம்.

ஒருவிடயம் இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். மாணவர்கள் என்றால் ஒரு நாட்டில் கல்விபயிலும் அனைவரும் உள்ளடக்கப்படுவார்கள். சாதியாலோ மதத்தினாலோ இனத்தினாலோ வேறுபடுத்தாது, அனைவருமே மாணவர்கள் என்ற நேக்கப்படுவார்கள்.

ஆனால் இலங்கையில் மட்டும் சிங்கள ஆட்சியாளர்களினால் மாணவர்கள் மதத்தினாலும் இனத்தினாலும் தரம்பிரிக்கப்பட்டு ஒருதலைப்பட்சமாக நடாத்தப்பட்டார்கள் இது வரலாறு அன்றுமுதல் இன்று வரைக்கும் வரைந்துகொண்டே வருகின்றது.

மாணவ சமூகமே! விழித்தெழு

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே இனம் நாமெல்லாம் இலங்கையர்கள் என்று இலங்கையில் இருந்து இங்கிலாந்து வரைக்கும் கேட்கும்படி கூச்சலிடும் மகிந்த அரசு ஆட்சிபீடம் ஏறியநாள் தொடக்கம் இன்று வரைக்கும் என்றாவது தமிழர்களை இலங்கையின் குடிமக்களாக நினைத்தது உண்டா? இல்லை.

இதற்கு ஒரே ஒரு உதாரணமே போதும் 2007ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள்மீது சிங்கள பேரினவாததின் இறுதிப்போர் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலே, கொழும்பில் தங்கி இருந்த வடக்கு, கிழக்கு, மலையகம் என்று அத்தனை தமிழர்களும் இரவோடு இரவாக பஸ்வண்டிகளின் ஏற்றப்பட்டு பூசாவிலும் வெலிக்கடையிலும் அடைத்து வைக்கபட்டும், அங்கே இடம் இல்லாத காரணத்தினால் எஞ்சிய தமிழர்களை அரசசெலவில் பஸ்களில் ஏற்றி உடுத்த உடுப்புடனே வவுனியாவிற்கும் மன்னாருக்கும் கொண்டு சென்று தவிக்க விட்டார்களே.

காரணம் என்ன நீ தமிழன் சிங்களநாட்டிலே உனக்கு இடம் இல்லை என்று தானே! எத்தனை மாணவர்கள் அன்று சிறையிலே அடைக்கப்படார்கள் எத்தனை ஆசிரியர்கள் சிறையிலே அடைக்கப்பட்டார்கள் இதுதான் ஜனநாயகமா?

எந்த ஒரு நாட்டின் பிரஜையும் தன் நாட்டில் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக கடவுச்சீட்டுகள் ஏதும் இன்றி செல்லமுடியும் வங்கிக்கணக்குகள் உட்பட எப்படிபட்ட ஒரு தேவையுனையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

ஆனால் 2007ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த எவருக்குமே கொழும்பில் எந்த ஒரு வங்கிகளும் வங்கிக்கணக்குகளை ஆரம்பித்துக் கொடுக்கவில்லை தொலைபேசிக்கான சிம் அட்டைகளை எந்த ஒரு தொலைபேசி நிறுவனகளும் தமிழ் அடையாள அட்டைகளுக்கு கொடுக்கவில்லை.

கல்விக்காகவும் வெளிநாட்டு தேவைகளுக்காகவும் தலைநகரிலே ஓரத்தில் வாழும் நாய்களாக ஒடுங்கி வாழ்ந்தோமே இதுதான் தாய்நாடா? இதுதான் சமத்துவமா?

சிங்கள மொழிபேசும் மாணவர்களுக்கு எத்தனை சலுகைகள், மாலைகள் மரியாதைகள், தமிழன் பிள்ளைகள் என்ற காரணத்தினால் தகுதிகள் இருந்தும் தரம் குறைந்தவர்களாக்கப்பட்டு ஓரம்கட்டப்பட்டார்கள்.

தமிழ் மாணவர்கள் விடுதலைகேட்ட காரணத்தினால் மருத்துவ பீடமாணவன் திலீபன் பயங்கரவாதப் பட்டியலில் இன்னமும் இருக்கின்றான். சமத்துவம் கேட்ட காரணத்தினால் தங்கத்துரை 1983ஆம் ஆண்டு சிங்கள தேசத்தின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான்.

இதையெல்லாம் மறந்துபோகுமா வரலாறு. மாணவ சமுதாயமே போர் முடிந்து இன்று ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. எம் இனத்துக்கு இந்த உலகுடன் கைகோர்த்து சிங்களப் பேரினவாதம் கொலைவாள் வீசி நச்சுக்குண்டுகள் போட்டு விமானங்களால் தாக்கி பட்டினிப்போரினை ஏவிவிட்டு மனிதகுலமே வெட்கப்படும் அளவு ஒரு கோரத்தாண்டவம் ஆடி ஐந்து ஆண்டுகள் நெருங்கிவிட்டது.

ஆனால் இன்னமும் இந்தப்பேரினவாதிகளின் ரத்த தாகம் அடங்கவில்லை மரணித்த மனிதனுக்காக அழக்கூடாது என்று உலகத்தில் எந்த நாடும் தடைகள் சொல்வதில்லை தியாகங்கள் செய்தவரை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்தக்கூடாது என்று எந்த ஒரு சட்டமும் இதுவரை வரையப்படவில்லை. ஆனால் சிங்களதேசத்தில் மட்டும் ஏன் எமக்கு மட்டும் இந்தக்கொடுமைகள்.

ஒவ்வொரு மே18 தமிழின அழிப்புநாள் நெருங்கும்போதும் கார்த்திகை மாதம் மாவீரர்நாள் நெருங்கும்போதும் பல்கலைக்கழகங்களை மூடிவிடுமாறு உத்தரவிடுகின்றது.

இன்றைய ஆட்சிபீடம் ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் நெஞ்சினை நிமிர்த்தி எழுந்து ஏன் என்று கேட்க்ககூடாதா?

பல்கலைக்களகங்களை மூடிவிட்டால் எங்கள் கல்வி பாதிக்கப்படுமே என்று எதிர்வுகூறக்கூடாதா?

உலகத்தில் மாணவ சக்திக்குமுனே எந்த சக்திகளுமே செயலற்றுப் போகாதா? மே 18 உனது நாட்டிலே வெற்றிக் கொண்டாட்டங்கள் போடுவதற்கு ஏன் எனது நாட்டு பல்கலைக்கழகங்களை மூடுகின்றாய் என்று வீதிக்கு வரக்கூடாதா?

நீ வீதியில் இறங்கினால் கண்டங்களைத் தாண்டிச் செல்லும் உனது போராட்டம் எனது அண்ணா தம்பிகளுக்காக நான் அழுது துடிப்பதை ஏன் நீ தடுக்கின்றாய்.

ஒரேநாடு ஒரே நாடு என்று ஊளையிடும் நரியே, புலிகளாக எங்களை மாற்றவா பார்க்கின்றாய் என்று எச்சரிக்கை செய், ஆயுதங்கள் இனி எதற்கு எழுதுகோல் துக்கு, உலகத்தில் சிறந்தவீரர்களே இந்த வீனர்கள் தடைகளை தகர்த்து எழுங்கள் தமிழன் வீட்டுப்பிள்ளைகளே தடைகள் கண்டு அச்சம் எதற்கு.

எவனோ ஒரு சுப்பனும் கந்தனும் எழுந்தால் புலிகள் என்று பூட்டிவைத்து கொலை செய்யும் பேரினவாதம் ஒட்டுமொத்த மாணவசமூகமும் எழுந்து நின்றால் என்ன செய்யும் சிங்கள தேசத்தின் சட்டப் புத்தகத்தின் குற்றங்களாக கூறப்படும் எதையுமே நீ செய்யவில்லை. நீ நாடு கேட்கவில்லை, நீ பிரிவினைவாதம் பேசவில்லை, நீ சகோதர யுத்தம் செய்யவில்லை.

ஆனால் உனது உறவுகளுக்கு தீபமேற்றி கண்ணீர் விட்டு கதறியழுது விட்டக்கூடாதென்று பல்கலைக்கழகத்தையே மூடிவிடும் முட்டாள்களை கேள் எங்கள் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படாதா ஆயுததாரிகளுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் என்ன சம்பந்தம்.

நீ புத்தகத்திலே படித்தது மறந்து போனதா? நாட்டின் தூண்களாக நிமிரப்போகும் உங்கள் முள்ளந்தண்டுகளை நீங்கள் இழக்கலாமா?

ஆதித்தன்
sankilijan@gmail.com

0 Responses to பல்கலைக்கழகங்களை பூட்டிவைத்து பூக்களை புயல்களாக மாற்றிவிடாதே! - ஆதித்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com