Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கும். நரேந்திர மோடியின் பின்னாலும் இதுபோன்ற ஒரு மிகப்பெரிய சரித்திரம் அடங்கி உள்ளது.

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில், 1950 செப்டம்பர் 17ல், உயர்தட்டு வகுப்பைச் சேர்ந்த வைசியா பிரிவின் உட்பிரிவான ‘மோத் கான்சி’ என்ற குஜராத்தில் மட்டுமே காணப்படும் மிகச்சிறிய பிரிவைச் சேர்ந்த தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடி - ஹீராபென் தம்பதியின் 6 குழந்தைகளில் 3வது குழந்தையாக பிறந்தவர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. இந்தியில் ‘மோடி’ என்றால் ‘முத்து’ என்று அர்த்தம்.டம்ளர்

கழுவினார்மோடியின் ஆரம்ப வாழ்க்கை என்பது மிக, மிக கஷ்ட ஜீவனம் என்றால், அது மிகையாகாது. வத்நகர் ரயில்வே ஸ்டேஷனில் தந்தை மூல்சந்த் நடத்தி வந்த டீக்கடையில் நரேந்திர மோடி வேலை பார்த்தார். அந்த ஒரு கடையில் இருந்து வரும் வருமானம் போதாத நிலையில், மோடியும் அவருடைய சகோதரர்கள் சற்று வளர்ந்துவிட்ட நிலையில், வத்நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே மற்றொரு டீக்கடையை திறந்தனர். இந்த கடையின் பொறுப்பு மோடியின் மூத்த சகோதரருடையது. கடைகளுக்கு டீ சப்ளை செய்வது, டம்ளர்களை கழுவி வைப்பது மோடியின் வேலை. வத்நகரில் உள்ள பள்ளியிலேயே அவர் படித்தார்.

18 வயதில் திருமணம்

கான்சி பிரிவில் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இதன்பேரில், மோடிக்கும் 13 வயதிலேயே, ஜசோதா பென்னுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. 18 வயதில் அவருக்கு ஜசோதா பென்னுடன் திருமணம் நடந்தது. இளம் வயது திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தார் மோடி.

தனிக்கட்டை

அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசாரகராக வேண்டும் என்று ஆசை. அதனால், மனைவியை விட்டு பிரிந்து, ஆர்எஸ்எஸ்.சில் இணைந்தார். அன்றிலிருந்து தனிக்கட்டைதான். 2 ஆண்டுகள் இமயமலைப் பகுதிக்கு சென்று கழித்தார். பின்னர் மீண்டும் வத்நகருக்கு திரும்பி, அண்ணனின் டீக்கடையில் பணியாற்றினார்.  குஜராத் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் உணவகத்தில் அவருக்கு வேலை கிடைத்த நிலையில், அங்கு சில காலம் வேலை செய்தார்.

திறமை தந்த வாய்ப்பு

கடந்த 1970ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழு நேர பிரசாரகராக இணைந்தார். ஜனசங்கத்தின் மூத்த தலைவர்களான வசந்த் கஜேந்திரகட்கர், நாதாலால் ஜக்தா ஆகியோருடன் இணைந்து பணியாற்றி அரசியலை கற்க ஆரம்பித்தார். இவர்கள்தான் பின்னாளில், குஜராத் மாநில பாஜவை ஆரம்பித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மோடியின் சிறந்த பேச்சாற்றல், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை பார்த்து, நாக்பூரில் அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் சங்பரிவாரில் அதிகாரப்பூர்வ பதவி பெறுவதற்கு உதவியாக இருந்தது. அதாவது மாணவர் அமைப்பின் (ஏபிவிபி) தலைவராக அவர் உயர்ந்தார். நாட்டின் அவசர நிலைக்காலத்தில், துணிச்சலாக போராட்டங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வளவு வேலைகளுக்கு இடையிலும், அவர் டெல்லி பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி மூலம், அரசியல் அறிவியலில் இளங்கலை படிப்பை முடித்தார். இதே படிப்பில், குஜராத் பல்கலைக்கழகத்தில் அவர் முதுகலை படிப்பையும் முடித்தார்.

அழகு பார்த்த தலைமை

எவ்வளவோ தலைவர்கள் இருக்கையில், மோடியின் வேகம், விவேகம் ஆகியவற்றின் காரணமாக, 1995 நவம்பரில், பாஜவின் தேசிய செயலாளர் பதவியை கொடுத்து அழகு பார்த்தது கட்சித் தலைமை. அரியானா, இமாச்சல பிரதேசம் ஆகியவற்றில் கட்சி விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு மோடிக்கு அளிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லிக்கே குடிபெயர்ந்தார்.

முதல்வரானது எப்படி?

2001ல் கேசுபாய் படேலின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, நடந்த இடைத்தேர்தல்களில் பாஜ.வுக்கு தோல்வி ஏற்பட்டது. புஜ்ஜில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, நிவாரணப் பணிகளில் கேசுபாய் படேல் தலைமையிலான நிர்வாகம் சிறப்பாக செயல்படாதது, அதிகார துஷ்பிரயோகம், ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவை ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக இருந்தன. இதனால் முதல்வர் பதவிக்கு வேறொருவரை நியமிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை விரும்பியது.இதனால் 2001 அக்டோபர் 7ல் குஜராத் மாநில முதல்வராக மோடி நியமிக்கப்பட்டார். அடுத்த ஒரு ஆண்டிலேயே 2002 டிசம்பரில் தேர்தல் வர இருந்ததால், அதை நோக்கி கட்சியை தயார்படுத்த வேண்டிய பொறுப்பும் அவரிடம் அளிக்கப்பட்டது.

இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், 2002 பிப்ரவரி 27ல், கோத்ராவில் இந்து கரசேவர்கள் வந்த ரயில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதன் விளைவாக நடந்த கோத்ரா கலவரத்தில் இந்து - முஸ்லிம்கள் இடையே பெரும் வன்முறையாக வெடித்தது. 900 முதல் 2,000 பேர் வரை இறந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் பாஜ கூட்டணியில் இடம்பெற்றிருந்த பல்வேறு கட்சிகள் மோடி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஒரு கட்டத்தில் மோடி கட்சித் தலைமையிடம் தன்னுடைய ராஜினாமாவை அளித்தார். ஆனால், அதை ஏற்க பாஜ தலைமை மறுத்துவிட்டது.

ராஜதந்திரம்

இந்நிலையில், 2002 ஜூலை 19ல் குஜராத் மாநில அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து, கவர்னர் எஸ்.எஸ்.பண்டாரியைச் சந்தித்த மோடி, தன்னுடைய அமைச்சரவை பதவி விலகுவதாக கூறி, அதற்கான கடிதத்தை அளித்தார். இதனால் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. முடிவுகள் வேறு மாதிரியாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் மோடியின் ராஜதந்திர பிரசாரமே வென்றது. குஜராத்தில் மொத்தம் உள்ள 182 பேரவை தொகுதிகளில் 127ல் பாஜ அமோக வெற்றி பெற்றது.

தொழில் வளர்ச்சி

மோடியின் இந்த 2வது ஆட்சிக்காலத்தில், அவரது தொழில் வளர்ச்சி கொள்கையால், ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் குவிந்தன. இதேபோல், ஊழலுக்கு எதிரான அவரது நடவடிக்கையால், அரசு நிர்வாகத்துக்கு நல்ல பெயரும் கிடைத்தது. நிதித்துறை மற்றும் தொழில்நுட்ப மையங்களை மாநிலத்தில் பல இடங்களில் திறந்தார். 2007ல் குஜராத்தில் நடந்த தொழில்துறையினர் மாநாட்டில், 6600 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

கலக்கிய மோடி

முதல் 2 தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு ஆதரவான அறிவிப்புகள், தொழில் கொள்கைகள் என்று கலக்கிய மோடி, 2007 தேர்தலில் தீவிரவாதத்துக்கு எதிரான பிரசாரத்தை கையில் எடுத்து வென்றார். 2012ல் தன்னுடைய 3 அரசு காலத்தின் சாதனைகளை கூறியே வெற்றி பெற்றார். குஜராத்தில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக, மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள், தொழில்துறை முன்னேற்ற நடவடிக்கைகள் ஆகியவை இன்னமும் அவருக்கு நல்ல பெயரை தக்க வைத்துள்ளது.

தேசியளவில் புகழ்

இவையெல்லாம் மோடியின் பெயரை படிப்படியாக தேசிய அளவில் பேச வைத்தன. 2012ல் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றபோதே, பாஜவின் அடுத்த பிரதமர் பதவி வேட்பாளர் மோடிதான் என்று பரவலாக பேச்சுகள் வெளியாக ஆரம்பித்தன.இது பல்வேறு எதிர்ப்புகள், கண்டனங்களுக்கு இடையே கடந்த ஆண்டு செப்டம்பரில் உறுதியும் ஆனது. பாஜ உயர்நிலைக் குழு கூட்டத்தில் இது முறைப்படி அறிவிக்கப்பட்டபோது, கூட்டணி கட்சிகள் கூட வாயடைத்து போயின. சில கட்சிகள் பொறுக்க முடியாமல் கூட்டணியில் இருந்து வெளியேறின.

கூட்டணி சாதுர்யம்

கூட்டணி அமைக்கும் விஷயத்திலும் மோடி மிக, மிக சாதுர்யமாக செயல்பட்டார் என்றே கூறலாம். அதாவது தன்னுடன் கூட்டணி சேர்கிறார்களோ இல்லையோ, காங்கிரஸ் கட்சியுடன், எந்த கட்சியும் கூட்டணி சேர்ந்து விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு மிக சாமர்த்தியமாக காயை நகர்த்தினார். அதேசமயம், ஊடகங்களில் ஏகோபித்த ஆதரவை பெற்று, மோடி என்ற அரசியல் சுனாமி அலையையே ஏற்படுத்தினார். அதன் தாக்கம்தான் மக்களவைத் தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளது.நரசிம்மராவ் கூட ஆட்சிக்கு வந்த பின்னர்தான், தன்னுடைய அரசை பெரும்பான்மையானதாக மாற்றினார். ஆனால், முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரப்போகும் பிரதமர் என்ற பெருமையை 30 ஆண்டுக்கு பின்னர் பெறுகிறார் மோடி என்கிற இந்த நல்முத்து.

ஏற்றி விட்ட ஏணி

1971ல் இந்தியா - பாகிஸ்தான் போருக்கு பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடி முறைப்படி இணைந்தார். 1975ல் இந்திரா காந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தபோது, தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் குஜராத்தில் மோடி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். ஆனாலும், திரைமறைவில் இருந்தபடி, மத்திய அரசுக்கு எதிரான பிரசுரங்களை அச்சடித்து டெல்லிக்கு அனுப்பும் பணியையும் மேற்கொண்டார். அவசர நிலைக்கு எதிராக ஜெய்பிரகாஷ் நாராயணன் நடத்திய இயக்கத்திலும் மோடி பங்கேற்றார்.

1985ம் ஆண்டில் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து பாஜ.வில் களம் இறக்கப்பட்டார். அப்போது, சங்கர்சிங் வகேலா, கேசுபாய் படேல் ஆகியோர் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம். இளம் தலைவராக உருவெடுத்த மோடிக்கு 1988ல் குஜராத் மாநில பாஜ செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. 1991ல் முரளி மனோகர் ஜோஷி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் ஒற்றுமை யாத்திரை நடத்தினார். இதை மிகச்சிறப்பாக மோடிதான் ஒருங்கிணைத்தார். இதன் மூலம் மோடியின் பெயர், கட்சியில் முன்னிலை பெற ஆரம்பித்தது.

பிடிவாதம் வென்றது

கேசுபாய் உடல்நிலை சரியில்லாதபோது, நிர்வாகம் சரியில்லாததால் பாஜ ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்திருந்தனர். இதனால் முதல்வரை மாற்ற கட்சி நினைத்தது. அடுத்தது யார் என்று பார்த்தபோது, தானாகவே மோடிதான் முதலில் இருந்தார். ஆனால், மோடிக்கு போதுமான அளவு ஆட்சி அனுபவம் இல்லை என்பதாலும், மூத்த தலைவராக கேசுபாயை அவமதிக்கக் கூடாது என்றும் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் விரும்பினர். இதனால், மோடியை முதல்வர் பதவியில் நியமிப்பதற்கு பதில், துணை முதல்வர் பதவியில் நியமிக்கலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.ஆனால், குஜராத்தை முழுமையாக நிர்வகிக்கும் வகையில் முதல்வர் பதவியை கொடுத்தால் அதை சிறப்பாக செய்கிறேன், துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று அத்வானியிடமும், வாஜ்பாயிடமும் திட்டவட்டமாக கூறினார் மோடி.

லட்சம் தடுப்பணைகள்

குஜராத்தில் 5 லட்சம் கட்டுமானப் பணிகளை மோடியின் அரசு மேற்கொண்டது. இதில், 1,13,738 சிறிய, நடுத்தர, பெரிய தடுப்பணைகள் என்பதன் மூலம், விவசாயத்துக்கு ஆதரவான மோடியின் நடவடிக்கையை புரிந்து கொள்ள முடியும். பெரிய தொழில் நிறுவனங்களை எல்லாம் அவர் குஜராத்துக்கு அழைத்து வந்தார். இதில் மேற்கு வங்கத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட, டாடாவின் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலையும் ஒன்று.

கைகொடுத்த நாடகம்

பள்ளிக்காலத்தில் அவர் சாதாரணமாக மார்க் எடுத்துள்ளார். ஆனால், நாடகங்களில், இவர் எழுதிய வசனங்கள் பெரும் பாராட்டுதலை பெற்றன. இவரே வீராவேசமாக பேசி, நடிக்கவும் செய்தார். அந்த பேச்சுத்திறன், இப்போதைய அரசியலில் மோடி வெற்றி பெறுவதற்கு அடித்தளமாக இருந்துள்ளது.

dinakaran.com

0 Responses to டீ கடையில் இருந்து பிரதமர் வரை நாட்டை ஆளப்போகும் நரேந்திர மோடியின் சரித்திரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com