தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள்பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மேதினப்பேரணி ஆனது, ஏனை வெளிநாட்டவர்களுடன் இணைந்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பேரணி (Place de La Bastille) பாரிஸ் பஸ்ரில் சுற்றுவட்டப் பகுதியில் இருந்து ஆரம்பமாகியது.
பேரணி சென்ற சாலையின் ஒருபகுதியில் தமிழின உணர்வாளரால் , சிறிலங்காவின் தமிழன அழிப்புப் புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. பல வெளிநாட்டவர்களும் இதனைப் பார்வையிட்டுச்சென்றதைக் காணமுடிந்தது.
கொட்டும் மழைக்குமத்தியில் பேரணி பாரிஸின் பிரதான சாலை வழியாகத் தொடர்ந்து Nation சுற்றுவட்டம் பகுதியைச் மாலை 7 மணியளவில் சென்றடைந்தது. மழை தொடர்ச்சியாக விடாது பொழிந்தபோதும் மக்கள் தமது பயணத்தை நிறுத்தாமல் இறுதிவரை சென்றடைந்தனர்.
பிரான்சு இளையோர் அமைப்பினர், பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பினர், தமிழீழமக்கள் பேரவையினர் துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன் எமது தமிழ்மக்களின் நிலையை வெளிநாட்டவர்களுக்கு பிரெஞ்சு மொழியில் தெரியப்படுத்தியமையைக் காணமுடிந்தது.
பேரணியின் நிறைவில், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளரின் உரை இடம்பெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், வரும் மே 18 முள்ளிவாய்க்கால் 5 ஆம் ஆண்டு நினைவுப் பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தாரகமந்திரத்துடன் பேரணி நிறைவுபெற்றது.




0 Responses to பிரான்சில் நடைபெற்ற மே தினப் பேரணி