Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிரதமர் பதவி முடிவுக்கு வந்துவிட்டது! பத்து ஆண்டுகள் பத்திரமான பொம்மையாக பிரதமர் ஆசனத்தில் அமர்ந்த பெருமையைத் தவிர, மன்மோகன் சிங்கை விசேடமாக விழித்துக் கூறுவதற்கு எதுவும் இல்லை எனலாம்.

ஒரு காலத்தில் சரிந்துபோன இந்திய பொருளாதாரத்தை நிமிர்த்திய பெருமை நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங்கை சாரும் என்று கூறுவர். எனினும் அந்தக்கூற்று மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்பது நம் தாழ்மையான கருத்து.

எது எப்படி இருந்த போதிலும் ஒரு நாட்டின் உன்னதமான பதவியில் வெறும் தலையாட்டி பொம்மையாக மன்மோகன் சிங் இருந்தார் என்பதற்குள் அவரின் குணாதிசயம் உணரப்படக்கூடியதாகும்.

பத்து ஆண்டுகள் என்பது சாதாரணமான காலம் அல்ல. அந்த பத்து ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் பட்ட துன்ப துயரங்களும் கொஞ்சநஞ்சமல்ல.

வன்னியில் நடந்த பெருயுத்தம், அதனால் தமிழ் மக்கள் பட்ட அவலங்கள், இதன் தொடராக 2009 மே மாதப் பகுதியில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள், தொடர்ந்து முட்கம்பி வேலிக்குள் முடக்கப்பட்ட துன்ப வாழ்வியல் என அனைத்தும் நடந்து முடிந்து போயின.

இருந்தும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஈழத்தமிழர்கள் மீது இம்மியும் இரக்கம் கொண்டார் அல்ல.

ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவத்துடன் ஈழத்தமிழ் மக்கள் மீது வெறுப்புக்குட்பட்ட சோனியா காந்தியும் அவரது பிள்ளைகள் பிரியங்காவும் ராகுல் காந்தியும் ஈழத்தமிழர்களின் துன்பியலில் தங்களின் பழி வாங்கும் எண்ணத்தில் திருப்தி கண்டனர்.

இதற்கெல்லாம் உதவிய கரம் பிரதமர் மன்மோகன் சிங் என்றால் அதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.

ஈழத்தமிழர்களை நான் கைவிட மாட்டேன் என்று கூறிக்கூறியே எங்களின் கருவறுத்த பெருமை மன்மோகனையே சாரும்.

ராஜீவ் காந்தியின் கொலைக்கு ஈழத்தமிழர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற மன்மோகன் சிங்கின் நினைப்பு நியாயமானதாக இருந்தால், அன்னை இந்திரா காந்தியின் கொலைக்காக மன்மோகன் சிங் உட்பட சீக்கிய இனமே பழிவாங்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா?

ஓர் இடத்தில் ஒரு நியாயம்; இன்னொரு இடத்தில் வேறு ஒரு நியாயம் என்ற தீர்மானங்கள் ஜனநாயக பண்பிற்கு விரோதமானவை. இந்த விரோதத்தை பிரதமர் மன்மோகன் சிங் செய்து முடித்தார்.

ஆம், பிரதமர் மன்மோகன் சிங்கின் காலத்தில் ஈழத்தமிழர்கள் தாம், விட்ட கண்ணீரை ஒரு போதும் மறக்கமாட்டார்கள் என்பது உறுதி.

இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நடந்த பிரிவு உபசாரத்தின் போது அங்கு பணியாற்றிய உத்தியோகத்தர்கள் கண்ணீர் விட்டு அழுததான தகவல்கள் வெளியாகி இருந்தன.

அன்புக்குரிய இந்திய பிரதமர் அலுவலக உத்தியோகத்தர்களே! மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் நாங்கள் அழுதோம் - அவர் பதவியிழந்து வீடேகும் போது நீங்கள் அழுகிறீர்கள். சுருங்கக் கூறினால், மன்மோகன் பிரதமராக இருந்த போதும் கண்ணீர்; பதவியிழக்கும் போதும் கண்ணீர்.

ஆம், நஞ்சகர்கள் பதவிகளில் வந்தமர்ந்தால் கண்ணீர் தான் வாழ்க்கையாகி விடுமென்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் நல்ல உதாரணம்.

0 Responses to இருந்த காலத்தில் நாங்கள் அழுதோம்! செல்லும் காலத்தில் நீங்கள் அழுகிறீர்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com