Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணை நடத்துவதற்காக தயாராகி வரும் ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழு, நாட்டுக்குள் வருவதைத் தடுப்பதே அரசாங்கத்தின் இப்போதைய முக்கிய இலக்கு என்று சபை முதல்வரும், அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழு இலங்கைக்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. அது தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றுவதிலேயே நாம் இப்போதைக்கு முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் (சர்வதேச) விசாரணைக் குழு இலங்கை வருவது தொடர்பிலான பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில், அந்தக் குழு பற்றியோ அவர்கள் முன்னெடுக்கவுள்ள விசாரணைகள் குறித்தோ ஆராய்வது தற்போதைக்கு அவசியமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்டுள்ள குழு இலங்கைக்குள் விசாரணைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், அதற்கு முகம்கொடுக்க அரசாங்கம் எவ்வாறு தயாராகியுள்ளது என்று அரச ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ‘சர்வதேச விசாரணைக் குழு இலங்கைக்குள் வருவார்கள் எனும் பேச்சுக்கே இடமில்லாத நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு தயாராவது அநாவசியமானதும், அர்த்தமற்றதுமான செயலாகும்’என்றார்.

ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவின் வருகையை பாராளுமன்ற தீர்மானத்திற்கூடாக தடுப்பதுவே அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாக இருப்பதனால், அதற்குரிய செயற்பாடுகளிலேயே எமது முழுக் கவனமும் ஒரு முகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழு இங்கு வந்து விசாரணை நடத்த அனுமதிக்க கூடாது என்று கோரி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கடந்த 11 ஆம் திகதி பிரேரணை முன்னறிவித்தல் கையளிக்கப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஐ.நா. விசாரணைக்குழு இலங்கைக்குள் வருவதைத் தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம்: நிமல் சிறிபால டி சில்வா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com