இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு தான் பதிலளிப்பதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அந்தக்குழு நாட்டுக்குள் வந்ததும் முதலில் என்னிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் கூறியுள்ளார்.
அன்று யுத்த காலத்தில் எனது தலைமையிலேயே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர் எந்தவொரு போர்க்குற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். இது தொடர்பில் எந்தவொரு நீதிமன்றத்துக்கும் சென்று பதிலளிக்க நான் தயார். இராணுவத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அதனால், எந்தவொரு குழு இலங்கைக்கு வந்தாலும் பயப்படத் தேவையில்லை. அந்த குழுவுக்கு பதிலளிக்க நான் தயார். யுத்தம் தொடர்பான எந்தவொரு பொறுப்பையும் ஏற்க நான் தயார் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை மேற்கொண்டார்கள் என்றே அர்த்தப்படுத்தப்பட்டு விடும். அது யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினரின் பெயருக்கு ஏற்படுத்தப்பட்ட களங்கமாகும். அதனால், விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க தயங்கத் தேவையில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்கத் தயார்: முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா