Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’இலங்கைக்கு ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வந்தாகக் கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பொய்யான குற்றச்சாற்றின் பேரில் அப்பாவி மீனவர்களை கைது செய்து, அதற்குத் தேவையான சாட்சியங்களை ஜோடித்து அதனடிப்படையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் எமர்சன், அகஸ்டின், வில்சன், பிரசாத் , லாங்லெட் ஆகிய 5 பேரும் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது கடந்த 29.11.2011 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எந்தத் தவறும் செய்யாத நிலையில், போதைப் பொருள் கடத்தியதாக அவர்கள் மீது பொய் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்போதே நான் கண்டனம் தெரிவித்ததுடன், அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இந்திய அரசின் சார்பில் பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மீனவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் வழக்கமான சட்ட உதவிகள் கூட வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்களை கைது செய்து அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் அளவுக்கு இலங்கை சென்றிருப்பது இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் ஆகும். இந்தியாவுக்கு இணையான வலிமை கொண்ட வேறு ஏதேனும் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அந்த நாடுகள் இலங்கை மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால், இந்தியக் குடிமகன்கள் 5 பேருக்கு இத்தகைய அந ீதி இழைக்கப்படுவதைத் தடுப்பதற்குக் கூட இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது.

இந்தியப் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இராஜபக்சே அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படுவர் என இராஜபக்சே அறிவித்திருந்தார். அப்போது போதைப்பொருட்களை கடத்தி யதாக கைது செய்யப்பட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் இலங்கை அரசின் சதி காரணமாக அவர்கள் விடுவிக்கப்படுவது தடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட இலங்கையை இந்தியாவின் நட்பு நாடு என்று கூறிக் கொண்டு தொடர்ந்து பாதுகாத்து வந்ததால் ஏற்பட்ட துணிச்சலின் காரணமாகத் தான் 5 தமிழரை பலியிட இராஜபக்சே துணிந்திருக்கிறார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து நவம்பர் 19 ஆம் தேதி வரை மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர்களைக் காப்பாற்ற முடியும். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சரப்ஜித் சிங்குக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த போது, மத்திய அரசு தலையிட்டு அவருக்கு சட்ட உதவிகளை வழங்கியதுடன், அவரை விடுவித்து மீட்டு வருவதற்காக நடவடிக்கை எடுத்தது. அதேபோல், 5 தமிழர்களின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது அவர்கள் சார்பில் வாதாட இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களை நியமிப்பது உள்ளிட்ட அனைத்து வகை சட்ட உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, 5 மீனவர்களையும் காப்பாற்ற தூதரக ரீதியிலான உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தங்கள் நாட்டு குடிமகன்களுக்கு மற்ற நாடுகள் சாவுத் தண்டனை விதிக்கக் கூடாது என்பதில் பல நாடுகள் உறுதியாக உள்ளன. கேரளக் கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற இத்தாலிக் கடற்படையினரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி மத்திய அரசு வலியுறுத்திய போது அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோன்று, தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து உடனடியாக இந்தியா அனுப்பி வைக்கும்படி இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரிக்க வேண்டும்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்த ஐவர் தவிர தமிழகத்தைச் சேர்ந்த சந்திரன், பாலமுருகன், மாரி, ஜீவா, தணிகாச்சலம், ராமேஸ்வரம், மனோகர், சரவணன், செந்தில் ஆகிய மேலும் 9 மீனவர்கள் இதே குற்றச்சாற்றின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’’

0 Responses to 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு: மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com