Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் அநாதரவாக்கப்பட்ட 75 சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மண்சரிவு தொடர்பிலான விசேட அறிக்கையை முன்வைத்து உரையாற்றுப் போதே ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை காலை விஜயம் செய்து மக்களை நேரடியாகச் சந்தித்து பேசினார். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியதுடன் உடனடியாக தேவையான சகல நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுமாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் மீரியபெத்த மண்சரிவு விடயம் ஆராயப்பட்டதாகவும், உடனடியாக எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் அவர்களுக்கு மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் விரிவாக சம்பந்தப் பட்ட அமைச்சர்களுடன் கலந்துரை யாடியதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மீரியபெத்த பகுதியில் 6 வரிசைகளைக் கொண்ட 63 லயன் வீடுகள் முற்றாக மண்ணில் புதையுண்டன. இதில் சுமார் 330 பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. பால் சேகரிப்பு நிலையம் ஒன்றும், கோவில், மூன்று சனசமூக நிலையங்கள், தொலைத்தொடர்பு நிலையம், இரண்டு கடைகள் என்பன முற்றாக மண்ணில் புதைந்துள்ளன. பாடசாலைகளுக்குச் சென்ற 75 பிள்ளைகளும், தொழிலுக்காகச் சென்ற சுமார் 100 பேர் மட்டுமே உயிர்தப்பியுள்ளனர். மண்சரிவு அபாயம் காணப்படும் இடங்களில் இருந்து 525 பேர் ஹல்துமுள்ள பாடசாலையிலும், மேலும் 317 பேர் பூனாகலை பாடசாலையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு இடம்பெற்ற பகுதியில் தொடர்ந்தும் மழைபெய்து வந்ததால் நேற்றுமுன்தினம் இரவு 8 மணிவரை மூன்று பேருடைய சடலங்களை மாத்திரமே மீட்க முடிந்தது. மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. மரணித்தவர்களின் இறுதிக் கிரியைகள் அனைத்தையும் அரச செலவில் நடத்துவதற்கும் அரசாங்கம் முடிவுசெய்துள் ளது. அதேநேரம், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலை களில் தேவையான சிகிச்சைகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மண்சரிவினால் 75 சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்துக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. பெண்கள் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட ஏனைய நலன்விரும்பிகள், தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

2005ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் 75 குடும்பங்கள் இருந்தன. இந்தப் பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதாக ஏற்கனவே கட்டட நில ஆய்வு நிறுவகம் எச்சரித்திருந்தது. 2011ஆம் ஆண்டும் இது தொடர்பில் அறிக்கையொன்றையும் சமர்ப்பித்திருந்ததுடன், இந்த மக்களை வேறு பகுதியில் குடியமர்த்துவதற்கான மாற்றுக்காணிகளும் வழங்கப்பட்டிருப்பதாக பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இதேபோன்று 2014ஆம் ஆண்டும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கியுள்ள அறிக்கையும் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறது” என்றுள்ளார்.

0 Responses to மீரியபெத்த மண்சரிவினால் அநாதரவான 75 சிறுவர்களை அரசாங்கம் பொறுப்பேற்றது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com