Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்தில் எல்லாவற்றையும் படையினர் உளவு பார்ப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் கொழும்புக்கான செய்தியாளரிடம் ஒப்புக்கொண்டிருக்கிறார் கிளிநொச்சி படைத் தலைமையகத் தளபதியான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க.

போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் வடக்கு மாகாணம் இன்னமும் ஒரு போர் வலயம் போன்றே காட்சியளிப்பதாக தொடர்ச்சியான விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

அளவுக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ள படையினரும், இராணுவத் தளங்களும் எந்நேரமும் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கும் புலனாய்வாளர்களும், வடக்கின் இயல்பு வாழ்வுக்கு இடையூறாக இருந்து வருகின்றனர்.

போர் நடந்து கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய இராணுவ நெருக்குவாரங்கள் இருப்பது வழமை.

போருக்குப் பின்னர் அதுவும் அரை தசாப்தகாலம் கடந்து விட்ட பின்னரும் அதே இராணுவ நெருக்குவாரங்களின் கீழ் வாழ்வதற்கு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதை இயல்பானதாகக் கொள்ள முடியாது.

வடக்கில் மாத்திரம் 67 ஆயிரம் காணிகள் இராணுவத் தேவைக்காகவும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையில் கடந்த வாரம் புள்ளிவிபரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது எந்தளவுக்கு வடக்கின் இயல்புச் சூழலை மாற்றியமைத்திருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளப் போதுமான தரவாகும். காணி அபகரிப்பின் ஊடாக அந்தக் காணிகளில் படைத்தளங்களையும், சிங்களக் குடியேற்றங்களையும் நிறுவுவதன் ஊடாக ஒரு பெரும் பாதுகாப்புத் தந்திரோபாயத்தை அரசாங்கம் கையாண்டு வருகிறது.

சிங்களக் குடியேற்றத்தின் மூலம் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கும் கிழக்கும் நில ரீதியாக கொண்டிருந்த தொடர்பைத் துண்டிக்க ஜே.ஆர.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்திலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பாலஸ்தீன நிலப்பரப்பை தனது இராணுவக் குடியிருப்புக்களின் மூலம் எவ்வாறு இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டதோ அதுபோன்ற தந்திரத்தைப் பயன்படுத்தி திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களின் நிலவழித் தொடர்பைத் துண்டிப்பதற்காக வெலிஓயா என்ற சிங்களக் குடியேற்றப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.

பின்னர், இந்தப் பிரதேசம் அநுராதபுர மாவட்டச் செயலகத்துடன் இணைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.

இப்போது இந்தப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இராணுவத்தினரின் ஆதரவுடன் வேகமாக மேற்கொள்ளப்படுகின்றன. புதிது புதிதாக வீடுகள், விகாரைகள், பாடசாலைகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

சிங்களக் குடியேற்றவாசிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பணமாகவும் பொருளாகவும் இராணுவத்தினர் மற்றும் பிற அமைப்புகளின் மூலம் உதவிகள் வழங்கப்படுகின்றன.

வடக்கு மாகாணத்துக்கு உருவெடுத்துள்ள பெரும் அச்சுறுத்தலாக இந்த வெலிஓயா சிங்களக் குடியேற்றங்கள் மாறியுள்ளன.

போதாக்குறைக்கு முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் வளங்களையும் வெலிஓயா பிரதேச செயலகமே அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் உறிஞ்சிக் கொள்கிறது.

போர்க்காலத்தில் தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் நோக்கிலும், வடக்கு கிழக்கிற்கிடையிலான புலிகளின் நகர்வுகளை துண்டிக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்ட வெலிஓயா சிங்களக் குடியேற்றங்கள் போருக்குப் பின்னரும் விரிவாக்கப்பட்டு வருகின்றன.

இது அடுத்த கட்ட பாதுகாப்புத் திட்டமாகும். அதாவது வடக்கில் இப்போது தமிழர்களே பெரும்பான்மையினர் என்ற நிலை காணப்படுகின்றது.

சிங்களக் குடியேற்றங்களின் ஊடாக வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைத்து படிப்படியாக தமிழரின் பெரும்பான்மையை இல்லாமல் செய்வதே இதன் அடிப்படைத் திட்டமாகும்.

வடக்குத் தமிழரின் வெளிநாட்டு மோகம் புலம்பெயர்வு பாதுகாப்பற்ற நிலை போன்ற காரணிகள் அரசாங்கத்தின் இந்தத் திட்டத்துக்கு மேலும் வலுவூட்டச் செய்கின்றன. இத்தகைய பின்புலத்தில் தான், வடக்கின் மீதான இராணுவக் கண்காணிப்பும் படைக்குவிப்பும் இடம்பெற்று வருகின்றன.

வடக்கில் படையினர் எல்லாவற்றையும் கண்காணித்து வருகின்றனர். எல்லாத் தகவல்களையும் சேகரித்துக் கொள்கின்றனர் என்று கூறியிருக்கிறார் கிளிநொச்சி படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க.

விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெற்று விடுவதை தடுப்பதற்காகவே இவ்வாறான பாதுகாப்பு முன்னேற்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் அரசுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறதா? என்று மட்டுமே படையினர் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தனிப்பட்ட பொது நிகழ்வுகள், கூட்டங்களில் இவ்வாறு மேற்கொள்ளப்படும் உளவு நடவடிக்கை பொதுமக்களைப் பாதிக்கவில்லை என்றும் அவர் நியாயப்படுத்தியிருக்கிறார். ஒரு இராணுவத் தளபதியின் நிலையில் இருந்து அவர் இதனைப் பார்க்கிறாரே தவிர சாதாரணப் பொதுமக்களின் நிலையில் இருந்து அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவரால் விளங்கிக் கொள்ள முடியாது.

எந்நேரமும் படையினர் தம்மைக் கண்காணிக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டே தமிழ் மக்கள் தமது அன்றாடப் பணிகளை ஆற்றுவதென்பது இயல்பானதொன்றாக இருக்க முடியாது.

அது ஏதோ ஒரு வகையில் வடக்கிலுள்ள மக்களின் இயல்பு வாழ்வைக் குழப்பிக் கொண்டேயிருக்கும். இதனை திறந்தவெளிச் சிறை என்று என்று ஒப்பிடுவதில் தவறில்லை.

விடுதலைப் புலிகளால் இனிமேல் மீண்டெழவே முடியாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், இராணுவத் தளபதிகளும் அடித்துக் கூறுகின்றனர்.

அவ்வாறிருந்தும், எதற்காக வடக்கை இந்தளவுக்கு இராணுவ நெருக்குவாரங்களுக்கு உட்படுத்த வேண்டும்? பத்து லட்சம் மக்கள் வாழும் வடக்கில், சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரமும் அமெரிக்க பிரதிநிதிகள் குழுவொன்றிடம் தெரிவித்திருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

அரசாங்கமோ இந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது. யாழ்ப்பாணத்தில் வெறும் 15 ஆயிரம் படையினர் கூட இல்லை என்றே சாதித்து வருகிறது.

யாழ். குடாநாட்டில் மாத்திரம் ஒரு படைத்தலைமையகத்தின் கீழ் 51, 52, 55 என மூன்று டிவிஷன் படையினர் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் தலா ஒவ்வொரு படைத் தலைமையகங்கள் இருக்கின்றன.

வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களில் மன்னார் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலுமே தனித்தனியான படைத் தலைமையகங்கள் உள்ளன.

ஆனால் வடக்கிற்கு வெளியே கிழக்கு மத்திய தெற்கு மேற்கு என்று மாகாணத்துக்கு ஒரு படைத் தலைமையகமே இருக்கின்றது.

சில மாகாணங்களில் ஒன்று கூட இல்லை.

இந்த நிலையிலும் கூட நாட்டின்  ஏனைய பகுதிகளைப் போலவே வடக்கிலும் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக நியாயம் கூறுகிறது அரசாங்கம். வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படையினரால் தான் அதிகளவு நிலங்களும் பறிக்கப்பட்டுள்ளன.

படையினரை வெளியேற்றினால் வடக்கில் நில ஆக்கிரமிப்பும் கணிசமாக முடிவுக்கு வரும் என்கிறது வடக்கு மாகாணசபை. அதற்காகவே வரும் டிசம்பருக்குள் தனியார் காணிகள், கட்டிடங்களில் இருந்து படையினர் வெளியேற வேண்டும் என்று வடக்கு மாகாணசபை கடந்த வாரம் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருக்கிறது.

இதற்கு அரசாங்கம் செவிசாய்க்கும் என்று கருதுவதற்கில்லை.

அதேவேளை, குறித்த காலக்கெடுவுக்குள் படையினர் வெளியேற மறுத்தால் வடக்கு மாகாணசபை அடுத்து என்ன மேல் நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவில்லை.

தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அப்பால் அதனால் வேறு எதையும் செய்ய முடியாது என்பதே உண்மை நிலை.

அதேவேளை, கிளிநொச்சிப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் வடக்கில் படையினர் நிலைகொள்ள வேண்டுமா?  என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், வடபகுதி தமிழர்கள் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பர் என்றும் கூறியிருக்கிறார்.

வடக்கு மாகாணசபையின் கடந்தவார அமர்வில் இதற்குப் பதில் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

படையினர் வடக்கில் இருக்க வேண்டும் என்று இங்குள்ள மக்கள் விரும்பவில்லை என்றும் படையினரை வெளியேற்றுவோம் என்ற வாக்குறுதியை முன்வைத்தே தமக்கு தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவே அதற்குச் சாட்சி என்றும் அவர் கூறியிருக்கிறார். வடக்கில் இராணுவம் பாதுகாப்புத் தேவை என்பதற்கு அப்பால், ஒரு அரசியல் தேவைக்காகவும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலிலோ, நாடாளுமன்றத் தேர்தலிலோ இந்த விவகாரத்தை வடக்கின் அரசியல் தலைமைகள், தீர்க்கமான தெளிவான முறையில் கையாள்வது அவசியம்.

ஏனென்றால், கொழும்பின் ஆட்சியைத் தீர்மானிப்பதில் வடக்கு மாகாண வாக்காளர்கள் கணிசமான பங்கை ஆற்றும் வாய்ப்புக் கிடைக்கக்கூடும். இத்தகைய கட்டத்தில் இராணுவ நெருக்குவாரங்களில் இருந்து வடக்கை விடுவிப்பதை பேரம் பேசும் முக்கிய விடயமாக தமிழ் அரசியல் தலைமைகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வாய்ப்பபைத் தவறவிட்டால், இன்னொரு சந்தர்ப்பம் கிட்டுவதற்கு நெடுங்காலம் காத்திருக்க வேண்டி வரலாம்.

சுபத்ரா

0 Responses to வடக்கில் முடிவுக்கு வருமா இராணுவ நெருக்குவாரங்கள்? - சுபத்ரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com