Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

''அம்மா, நல்லவங்க; சின்னம்மாதான் அவங்களைச் சிக்கவெச்சுட்டாங்க!'' - இதுபோன்ற அபத்தப் பேச்சுகள் அ.தி.மு.க-வினர் பலராலும் உச்சரிக்கப்படுகின்றன.

அப்பாவிகள் பலரும் அதற்குத் தலையாட்டுகிறார்கள். இன்று அ.தி.மு.க-வினர் சொல்வது புதிது அல்ல. அவர்கள் 'அம்மா’வே ஒரு காலத்தில் சொன்னதுதான் இது..

கட்சியா... சசிகலாவா... என்பதை நான் முடிவுசெய்ய வேண்டும் எனத் தொண்டர்கள் விரும்பினார்கள். கஷ்டமான காலகட்டங்களிலும் சோதனையான சூழ்நிலைகளிலும் உற்ற தோழியாக, உடன்பிறவா சகோதரியாக சசிகலா எனக்கு உறுதுணையாக இருந்தார் என்ற நன்றி உணர்வு எனக்கு இருந்தாலும், ஒரு சில தனிநபர்களைவிட கட்சியின் நலனும் எதிர்காலமும் மிக முக்கியம் என்றே நான் கருதுகிறேன்’ என அறிக்கைவிட்டு, தனக்கும் சசிகலாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என 1996-ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு திடீர் என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சசிகலாவை விலக்கிய ஜெயலலிதா, அடுத்த 10-வது மாதத்தில் மீண்டும் சேர்த்துக்கொண்டார். சசி மீது வைத்த குற்றச்சாட்டுகள் அப்படியே மறக்கப்பட்டன.

இன்னும் சில அ.தி.மு.க அப்பாவித் தொண்டர்கள், 'சின்னம்மா பாவம், அவரோட குடும்பத்து ஆட்கள் செய்த எதுவும் அவருக்குத் தெரியாது’ என இப்போது சொல்கிறார்கள். இதுவும் புதிது அல்ல. இது... சில மாதங்களுக்கு முன்பு சசிகலா சொன்னதுதான். சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை 2011-ம் ஆண்டு டிசம்பரில் அ.தி.மு.க-வில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.

அடுத்த நான்காவது மாதமே சசிகலாவை மட்டும் கார்டனுக்குள் அனுமதித்தார். அப்போது சசிகலா விட்ட அறிக்கையில், '

என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து என் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்குப் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளில் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டன என்பதையும், அக்காவுக்கு எதிரான சில சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது, நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன், மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவை எல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை’ என்று குறிப்பிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

தனது குடும்பத்தவர்கள், ஜெயலலிதாவுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள் என சசிகலாவே ஒப்புக்கொண்ட அதிர்ச்சி அறிக்கை அது. பெங்களூரு நீதிமன்ற விசாரணைக்காகச் சென்ற சசிகலா, இளவரசி போன்றோர் அங்குள்ள ஹோட்டலில் தங்கி இருந்த போது அவரது உறவினர்கள் சிலரைச் சந்தித்ததாகவும், அப்போது பேசப்பட்ட சில விஷயங்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்கு வராதவை என்றும், வழக்கின் தீர்ப்பு பாதகமாக வருமானால் நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாக தமிழக உளவுத் துறை ஜெயலலிதாவுக்கு நோட்ஸ் வைத்ததாக அப்போது தகவல் பரவியது.

அதற்கு அடுத்த சில நாட்களில்தான் 'கல்தா படலம்’ நடந்தது. கைதுப் படலமும் ஆரம்பம் ஆனது.

என்னதான் செல்வாக்கு, செல்வம் கிடைத்தாலும் மொத்தமாக நம் குடும்பத்தவர்கள் அவமானப்பட்டு சிறைக்குப் போனது ஜெயலலிதா ஆட்சியில்தான்'' என சசிகலா குடும்பத்தினர் பேச ஆரம்பித்தார்கள்.

நடராசன் பலதடவை கைது செய்யப்பட்டார். சுதாகரனை கஞ்சா வழக்கில் கைதுசெய்து 10 ஆண்டுகள் கோர்ட்டுக்கு இழுத்து அலையவைத்தனர். சுதாகரனின் அப்பாவும் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் கணவருமான விவேகானந்தனையே வயதான காலத்தில் கைது செய்தனர்.

சசிகலாவின் தம்பி திவாகரனை விரட்டிப்போய் கைதுசெய்தார்கள். அவரது மனைவியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து அவமானப்படுத்தினார்கள். சசிகலாவின் உறவினர் ராவணனைக் கைதுசெய்து சிறையில் வைத்தார்கள்.

சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரனையும் சிறைக்குள் அடைத்தார்கள். இந்த அவமானங்கள் எல்லாம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நடந்தவை அல்ல!'' என மன்னார்குடி சொந்தங்கள் பேச ஆரம்பித்தன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவருக்கு அரசியல் ஆசையை ஊட்டி, பிறகு பறித்துவிட்டார் ஜெயலலிதா. வளர்ப்பு மகன் எனப் பட்டம் சூட்டப்பட்டார் சுதாகரன். சில ஆண்டுகளிலேயே அதுபறிக்கப்பட்டு அநாதை ஆனார். டி.டி.வி.தினகரனுக்கு தேனி எம்.பி தொகுதி தரப்பட்டு, டெல்லி செல்வாக்கும் ஊட்டப்பட்டு, அதுவும் நிறுத்தப்பட்டது.

திடீரென டாக்டர் வெங்கடேஷ§க்கு முக்கியத்துவம் தரப்பட்டு, இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறைப் பதவி தரப்பட்டது. பிறகு அதுவும் பறிக்கப்பட்டது...'' இப்படித் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டவர்களின் பட்டியலையும் சசிகலா குடும்பத்தினர் பேச ஆரம்பித்தார்கள்.

ஜெயலலிதா மூலமாக சசிகலா உறவுகள் அடைந்த ஆனந்தம் அதிகமா, அவஸ்தை அதிகமா என பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்த போதுதான்... ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் ஒரே வழக்கில் நீதிமன்ற விசாரணையில் இருந்தார்கள்.

இந்த வழக்கில் அம்மா மட்டும் விடுதலை ஆகிவிடுவார்'' எனச் சிலரும், ''நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை எப்படியாவது விடுவித்துவிட வேண்டும்'' என வேறு சிலரும் தீர்ப்புக்கு முன்னே பேச ஆரம்பித்தது

அ.தி.மு.க முன்னணியினர் அனைவருக்கும் தெரியும். இரண்டு தரப்பினரின் ஆசையும் நிறைவேறவில்லை. நால்வருக்குமே நீதியின் பரிபாலனத்தில் ஒரே நிலை என நிர்ணயிக்கப்பட்டது.

இப்படி ஒரு தீர்ப்பு வரும் என ஜெயலலிதா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், அவருக்கு அப்படி ஒரு சூழ்நிலையும் ஏற்படலாம் என்பதை அவரது வக்கீல் டீம் சொல்லவில்லை.

அம்மாவின் காதுக்கு நெகட்டிவ் விஷயங்கள் எதையும் சொல்லிவிடக் கூடாது என நினைத்தார்களா அல்லது நிதர்சனத்தை மறைத்தார்களா என்ற சந்தேகம் பலருக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது. அதனால்தான் தீர்ப்பு வாசிக்கப்பட்டதுமே, சசிகலாவைப் பார்த்துதான் ஜெயலலிதா முறைத்துள்ளார்.

எல்லோரும் உங்கள் ஆலோசனைப்படி நியமிக்கப்பட்டவர்கள்தானே’ என்று ஜெயலலிதா சொன்னதாகவும் தகவல். ''இப்போது ராம் ஜெத்மலானியையும், ஹரீஷ் சால்வேயையும், கே.கே.வேணுகோபாலையும் கொண்டுவர முடிந்தவர்களால், ஏன் பெங்களூரு நீதிமன்றத்துக்குப் பெரிய வழக்கறிஞர்களை அழைத்து வர முடியவில்லை?

சுதாகரனுக்கும் இளவரசிக்கும் மும்பையில் இருந்து மூத்த வழக்கறிஞரைக் கொண்டு வந்தவர்கள் ஜெயலலிதாவுக்கு மட்டும் டெல்லி வழக்கறிஞரை ஏன் அழைத்து வரவில்லை?

ஜெயலலிதாவை எப்படியாவது விடுவிக்கத் தேவையான சட்ட முஸ்தீபுகளை சிலர் எடுக்காமல் போனதற்கு என்ன காரணம்?'' என்று அடுக்குபவர்கள்,

பொதுவாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் விடுமுறை தினங்களை பற்றிய கவனத்தில் இருப்பார்கள். செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு என்று இருந்ததை அப்படியே விட்டிருக்கலாம். செப்டம்பர் 27-ம் தேதி என்று ஸ்பெஷல் கோர்ட் மாற்றியபோதாவது கவனமாக இருந்திருக்க வேண்டும். அதன்பிறகு ஒருவார காலம் கர்நாடக நீதிமன்றங்கள் விடுமுறை. அதனை இந்த வழக்கறிஞர்கள் கவனிக்கவில்லை.

மேலும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யும் போது மற்ற மனுக்களை போட மாட்டார்கள்.வழக்கின் தீர்ப்புக்குள் போகாமல் உடல்நலத்தைக் காரணமாகக் காட்டி மட்டுமே ஜாமீன் கேட்பார்கள். ஆனால் தேவையில்லாமல், தீர்ப்பை விமர்சித்து பேசி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வலியப் போய் மாட்டிக்கொண்டார்கள்.

ஜாமீன் மனுவோடு சேர்த்து 24-க்கும் மேற்பட்ட மனுக்களைப் போட்டு வழக்கை சிக்கல் ஆக்கினார்கள். நான்கு பேர் சம்பந்தப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் வாங்கிவிட்டாலே அதனைக் காரணமாகக் காட்டி மற்றவர்களுக்கு வாங்க முடியும். ஜெயலலிதாவுக்கு மட்டும் முதலில் மனுப் போட்டு இருக்கலாம். அதனைவிட்டு நால்வருக்கும் சேர்த்து போட்டார்கள்.

இவை போதாது என்று, நீதிபதி குன்ஹாவை விமர்சித்து ஒரு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள். 'அதிகப்படியான அபராதம் போட்டு என் மீது வெறுப்பை காட்டிவிட்டார் குன்ஹா’ என்று அந்த மனுவில் உள்ளது. இப்படி இந்த வழக்கறிஞர்கள் நடந்துகொண்ட அபத்தங்கள்தான் ஜெயலலிதாவுக்கு சிக்கல் மேல் சிக்கலை உருவாக்கிவிட்டது'' என்று சொல்கிறார்கள்.

அரசு வழக்கறிஞராக வாதாடிய பவானி சிங் இதையே வெளிப்படையாக வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார்... ''என்னை இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமித்தபோது ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களிடம் நிறையக் கற்றுக்கொள்ளலாம் என நினைத்தேன்.

ஆனால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது'' எனச் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் எவ்வளவு அலட்சியமாக இந்த வழக்கை நடத்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

அக்காவுக்கு எதிரான சில சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் மிகவும் அதிர்ச்சியுற்றேன்’ என சசிகலா வெளியிட்ட அறிக்கையையும் இன்று வெளிவந்துள்ள தீர்ப்பையும் திரும்பத் திரும்ப வாசிக்கும்போது, அ.தி.மு.க தொண்டர்களுக்கு பல சந்தேகங்கள் கிளம்புகின்றன. அந்த சந்தேகம் ஜெயலலிதாவுக்கும் உண்டா?

0 Responses to சதிவலை? - ''அம்மா, நல்லவங்க; சின்னம்மாதான் அவங்களைச் சிக்கவெச்சுட்டாங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com