Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தனது பதவியை கடந்த 30–ந்தேதி ராஜினாமா செய்தார். தான் பதவி விலகியதற்கு மேலிடத்தின் செயல்பாடுகளே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவரை தொடர்ந்து வாசனின் தீவிர ஆதரவாளரான கோவை தங்கமும் பொருளாளர் பதவியில் இருந்து விலகினார்.

தமிழகம் முழுவதும் உள்ள வாசன் ஆதரவு நிர்வாகிகளும் கூண்டோடு பதவி விலக முடிவு செய்தனர். இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்சி மேலிடம் வாசனை அழைத்து சமரசப்படுத்தும். மாநில தலைவர் பதவியும் வழங்கப்படும் என்று வாசன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் டெல்லி மேலிடம் ஜி.கே.வாசனின் குற்றச்சாட்டுகளால் அதிருப்தி அடைந்தது. அதிரடியாக புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நியமித்தது.

இது வாசன் ஆதரவாளர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக ‘வாசன்தான் காங்கிரஸ்’, ‘காங்கிரஸ் வாசன்’, ‘வாசனை தவிர காங்கிரஸ் தலைவராக யாரையும் ஏற்க மாட்டோம்’ என்று பகிரங்கமாகவே தமிழகம் முழுவதும் பரபரப்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அந்த சுவரொட்டிகளில் மாநில பொருளாளராக இருந்த கோவை தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடியல் சேகர், ஞானசேகரன், முன்னாள் எம்.பி. சேலம் கந்தசாமி மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் படம் மற்றும் பெயர்களும் இடம் பெற்றன. எனவே வாசனின் முன் அனுமதியுடன் தான் ஒட்டப்படுவதாகவும், விரைவில் புதிய கட்சி தொடங்குவார் என்றும் பேசப்பட்டது.

அதன்படி காங்கிரசில் இருந்து விலகி புதுகட்சி தொடங்க வாசன் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் நேற்று தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார். இன்று அவினாசியில் கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

புதிய கட்சி தொடங்கும் முடிவை நாளை (3–ந்தேதி) காலையில் வாசன் அறிவிக்கிறார். இதற்கான கூட்டம் நியூஉட்லண்ட்ஸ் ஓட்டலில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் காங்கிரசில் இருந்து விலகும் முடிவை முறைப்படி அறிவித்து விட்டு புதிய கட்சி தொடங்கும் அறிவிப்பையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மாநிலம் முழுவதிலும் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வெளியூர் நிர்வாகிகள் இன்றே சென்னையில் குவிந்துள்ளனர்.

30 மாவட்ட தலைவர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காங்கிரசுக்கு 5 எம். எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் ஜான்ஜேக்கப், ரங்கராஜன், பிரின்ஸ் ஆகிய மூன்று பேரும் வாசனின் ஆதரவாளர்கள். அவர்களும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் என்றே பெயர் சூட்ட வேண்டும். அந்த பெயர்தான் பிரபலமானது. தொண்டர்கள் மனதில் பதிந்து போனது என்று பல நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காமராஜர், முப்பனார் பெயர் மற்றும் படங்களுடன் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை அமைய வேண்டும் என்று வாசன் விரும்புகிறார். எனவே கட்சியின் பெயர், கொடி சின்னம் பற்றி கட்சி நிர்வாகிகளிடம் வாசன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

0 Responses to ஜி.கே.வாசன் நாளை(3.11.2014) புதிய கட்சி தொடங்குகிறார்?: சென்னையில் ஆதரவாளர்கள் குவிகிறார்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com