Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உன் பெயர் தேவை...! - ஈழக்கிழவன்

பதிந்தவர்: தம்பியன் 26 November 2014

இன்று எமக்கு நெஞ்சுரம் பிறந்த நாள்
நேற்றைய வரலாற்றை மறைத்து
நெளிந்து வாழும் ஈனம் எதற்கு

எம் குலத்திமிரை கோடிக்குள்வைத்து விட்டு
கொடுக்கானுக்கும் கோடறிக்காம்புகளுக்கும்
வாழத்துப்பாடாவா இந்த வாய்
அது வேண்டா
மன்னவா!

பண்டாரவன்னியனுக்கு பின் வந்துதித்த வல்லவா!
வென்றே வாழ்ந்த வீர வரலாற்றை
மீண்டும் தமிழர்க்கு தந்தவா! தலைவா!
எங்கள் தலைநிமிர்வே!
இன்றென்ன இனி ஏழேழு பிறப்புக்கும்
தமிழர் தலைவன் நீதான்
வேலுப்பிள்ளை பார்வதிக்கு நன்றி
தொன்மைத்தமிழனுக்கு ஓர் வரலாற்று வாரிசை தந்தீர்
செல்வந்தனாய் செழித்தவனாய்
உல்லாசபுரிகளில் சல்லாபிப்பவனாய்
எல்லா இன்பமும் வாய்த்த வாழ்வு அழைத்தபோதும்
முள்ளில் நடக்கும் விடுதலைப்பயணம் ஏற்றவனை
மானுடம் எப்படி மறக்கும்
கால வயிற்றில் இருந்து இம்மண்ணில் நீ காலடிவைத்தாய்
கால மொழி படித்தாய்
கால வலி படித்தாய்
சங்கநிலம் சகதி ஆனதறிந்தாய்
மெல்ல மெல்ல உன் மூச்சில் நெருப்பு வளர்ந்தது.
அதுவரை நீ அகிம்சைதானே
தந்தை செல்வாவின் விசுவாசிதானே
அங்கேதானே தமிழர் அடிமையாவதன் கதை படித்தாய்
ஆயுதம் என்ன உன் அம்மாவின் வயிற்றில் இருந்தா வந்தது
இல்லையே!

அகிம்சையின் உச்சத்தை திலீபனைவிட
வேறு இந்த பூமியில் காட்டமுடியுமா
அவன் உன் தம்பி அல்லவா
நீ ஆயுதத்தை மட்டுமே அவனுக்கு குழைத்து ஊட்டியிருந்தால்
எப்படி அவனால்
ஊன்வற்றி உடல் மெலிந்து பன்னிருநாள்
பட்டிணி கிடந்து இனத்துக்காய் சாக முடியும்
நீதான் தமிழரின் உண்மைத் தலைவன்.
நீ இன்று பிறந்த நாள்
உனக்கு வாழ்த்துப்பாடுவதல்ல என் நோக்கும்
வரலாற்றின் உன்னை வைத்துப்பார்ப்பதே!

முள்ளிவாய்க்காலோடு உன் பெயருக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று
முற்றத்தில் சுருண்டுபடுத்து நாய் கனவில் சிரித்ததுபோல்
தம் உள்ளக்கிடக்கைகளை அவசரப்பட்டு அவிழ்த்தவர்கள் பலர்.
ஈழத்தமிழர்க்கு அடு;த்த தலைவனாய் ஆகலாமென
பூளை சாற கடவாயில் வீணி ஒட்டியிருக்க எழும்பி வந்தவர்களும் பலர்
மணலாற்றுக்காட்டின் நடுவில்
ஒரு நாள் தனியே இருக்கவிட்டாலே உயிர்கசிய ஒப்பாரிவைத்து
உடல்வெளிறும் கூட்டத்துக்கெல்லாம்
உன் அரியணை கேட்டதென்றால் வரலாற்றுச் சிரிப்பு
இதைவிட வேறன்ன இருக்கமுடியும்.
இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் உன் பெயர் தேவை

பிறக்கும் பிள்ளையின் மனதில் ஒரு உண்மைத் தலைவனை உறையவைக்க
இயற்கை என் நண்பன் என்பதை இன்னொருவன் உணர
இலட்சிய உறுதியை ஒழுக்கத்தை கட்டியெழுப்பும் சூத்திரத்தை கற்பிக்க
பொன்னியின் செல்வனை இன்னொருமுறை படிக்க
தமிழர் ராஜ வம்சம் என்ற ரகசியத்தை சொல்ல
வம்சத்தையே வாரிசுகளையே தன்
மண்ணுக்காய் தரும் பேரிதயத்தை பிறப்பிக்க
ஐவகை நிலத்தையும் அற்புதமாய் அரசோச்ச
எதிரிகளின் தலைவன் எவன் என்பதை தீர்மானிக்க
உதிரிகளை கூட ஒவ்வொரு அணிகளாய் ஆக்க
பெண்ணின் பெருமை பேச
அதிகம் பேசாத ஆற்றலை சொல்ல
சோம்பேறிகளின் முகத்தில் சுடறேற்ற
வல்வெட்டித்துறையை வரும் சந்ததிகள் வணங்க
புதிய புறனானூற்றின் முதல்வரியை தொடங்க
வளரும் காவாலிகளை கட்டுக்குள் கொண்டுவர உன் பெயர் தேவை.

நினைத்துப் பார்க்கின்றேன்.
நீ புரட்சிக்கு தயாரான ஒவ்வொரு நிமிடமும்
நீ புயலான ஒவ்வொரு கணமும் உன் மனநிலையை
நினைத்துப்பார்க்க முடியாத உயரத்தில் நீ இருக்கின்றாய்
அச்சம் இல்லா விட்டால் வீரனாகலாம் என்பது தவறு
வீரனாவதற்கான பரீட்சை வழிகாட்டி நீதான்
அச்சம் களைதல் ஒரு அம்சம் அவ்வளவுதான்
மிச்சமாய் இருக்கிற ஆயிராமாயிரம் தகுதிகளால்தான் நீ வீரன்
உன்னிடமிருந்த ஒவ்வொரு போராளிகளும் மாபெரும் தலைவர்கள்
அவர்களுக்கு நீ தலைவன்

உன் குண்டு கட்டிய வட்டப் பொறுப்பாளன் திண்ணையில் இருந்த
அண்ணை என்று சொல்லி நாட்டிய ஆயிரம் காரியங்களைதான்
இன்று
ஏசியில் குஸனில் இருந்துகொண்டு செய்யமுடியாமல்
பலர் தடுமாறுகிறார்கள்.
உலகம் உணர்ந்த வல்லமை உன்னுடையது.
உலகம் உன்னை ஒரு வல்லரசு படையின்
தலைவன் என்று சொல்லவில்லை.
அது தன்மானப்பிரச்சனையாக இருந்தது.
அதனால்தான் தமிழ் வல்லரசோடு திரை மறையில் நின்று மோதினார்கள்.
உனது காலத்தில் ஈழம் உலகத்தின்
வல்லரசாக இருந்தது என்று நாம் வரலாற்றில் எழுதி வைப்போம்
உண்மைகளை எழுதத்தவறுகிற ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் நம் சந்ததிகள் ஏமாற்றப்பட்டுவிடும்
சிங்களத்துக்கு இப்பொழுது உன் பெயர்
அவசரமாயும் அடர்த்தியாயும் தேவையாய் இருக்கிறது
ஏன் எதிர்காலங்களில் நீயும் தேவையாய் இருக்கும்
ஆசியாவுக்கும் அகிலத்துக்கும் கூட
அவ்வப்பொழுது நீயும் உன் பெயரும் தேவையாய் இருக்கும்
நீ இறந்து விட்டதாக சொல்லி எதிரிகள் மகிழ்வது
இத்தோடு ஏழோ எட்டாவது தடவையாக இருக்கலாம்
நீ இறந்து விடவேண்டுமென எதிரிகள் கனவு கண்டது
பலகோடி தடவையாக இருக்கலாம்
உன் ஜென்ம எதிரிகள் தனித்து உன்னோடு மோதவில்லையே
தறுதலைகள்
கட்டையன் நெட்டையன் சுருட்டையன்
குஞ்சம் வைத்தவன் பூஞ்சல் கண்ணன்  என்று
எல்லாத்தையும் கெஞ்சி வந்துதானே
கோதாவில் இறங்கினான்

வெட்கம் கெட்டவன்
முப்பது வருடத்தில் ஒரு தடவையேனும் சொந்த புத்தியில்
உன்னை சொறிந்து கூட பார்க்கவில்லை இனவாதிகள்.
காலிக்கடற்கரையில் காற்று வாங்கும் ஒருவன் உன் பெயரை சொன்னால்
காமைல் ஓடி எட்டிநின்று
தமிழனுக்கு ஏகப்பட்ட மரியாதைகள் செய்தான்
இப்பொழுது நீ இல்லையென்றெண்ணி
அம்பாம்தோட்டை பறட்டைகளும் குட்டைகளும் கூட
எங்கள் அடிவளவுக்குள் வந்து குரைக்கிறது
குட்டிபோடவும் பார்க்கிறது.
நீ என்ற பிரமாண்டம் எல்லையற்ற பிரவாகம்
எங்களின் மன எழுச்சியின் அடையாளம்
தூங்குமுன் புறப்படுமுன் உச்சரிக்கும் மந்திரம்போல நீ
தமிழர்களின் நிஜ நாயகன் நீ!
புயலும் புஜமும் நீ
புதுமையும் பூர்வீக அடையாளமும் நீ
எதிரிகள் உன்னை எப்படி எறிந்தாலும் நீ எங்களுக்குள்ளேயே விழுகின்றாய்
அதனால் நீ என்றைக்கும் தமிழர் தலைவன்!

ஈழக்கிழவன்

0 Responses to உன் பெயர் தேவை...! - ஈழக்கிழவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com