Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் இலங்கைக் கடற்படையினரின் இடையூறு ஆகியவற்றினால் வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் என்.இன்பநாயகம் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண மீனவர்களுடைய பிரச்சினையானது தொடர்ந்த வண்ணமே உள்ளது. யாழ் மாவட்டத்தில் குறிப்பாக காரைநகர், வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் இந்திய றோலர் படகுகள் வந்து செல்கின்ற நிலைமையானது தொடர்ந்து காணப்படுகின்றது. இதனால் இப்பகுதி மீனவர்கள் பாதிப்பை எதிர்நோக்குகின்றார்கள்.

இது தவிர, வலிகாமம் வடக்கு சேந்தான்குளம் பகுதியில் இலங்கை கடற்படையினர் மீனவர்களினுடைய நாளாந்த தொழிலைச் செய்யவிடாது அடாவடித்தனமான செயற்பாடுகளின் ஊடாக கட்டுப்படுத்தி வருகின்றனர். சேந்தான்குளத்தின் வறிய மீனவர்களினுடைய வலைகளை அறுத்து தொழில்களை செய்யவிடாது அச்சுறுத்தி அனுப்பியுள்ளனர். இது கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றது.

இது சம்பந்தமாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பாகத் தெரியப்படுத்தினோம். இதனடிப்படையில் கடற்படையினருடன் பேசி தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டபோதும் கூட மீண்டும் அவர்கள் அச்சுறுத்தி தொழில் செய்ய விடாது தடுத்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் இந்திய மீனவர்களின் றோலர் பிரச்சினையை காரணம் காட்டி வடமராட்சி பகுதியின் இன்னொரு சாரார் தாமும் அவ்வாறு தொழில் செய்யப் போவதாக கூறி வருகின்றனர்.

இந்திய றோலர் பிரச்சினை என்பது இந்திய, இலங்கை அரசுகளின் ஓர் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. அந்த வகையில் இந்தப் பிரச்சினையை தீர்ப்பது என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

மீனவர்களுடைய பிரச்சினையை அந்தந்த ஆளும் தரப்புக்கள் தமது சுயநலத்துக்காக பயன்படுத்துகின்றனர். ஆகவே இந்த இலங்கை அரசாங்கமாக இருந்தாலும் சரி, இந்திய மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி இப்பிரச்சினையை தீர்க்காமல் இருக்கப் பார்கிறார்கள்.

ஆகவே, மீனவர் சமூகம் தேர்தல் காலத்தில் அவர்கள் வழங்கும் வாக்குறுதிகளை எந்தளவுக்கு நம்பிக்கையுடன் பார்க்க முடியும்? இந்த மீனவர்கள் தங்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒற்றுமையாக செயலாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்: தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com