Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னார், வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து ஸ்னைபர் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதையே இந்தப் படுகொலை சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியான 40 வயதுடைய கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன், இலங்கை இராணுவத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலையில் தனது குடும்பத்துடன் இணைந்து சொந்த ஊரான மன்னார், வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வாழ்ந்துவந்த நிலையிலேயே நேற்றைய தினம் இரவு 8.30 அளவில் ஸ்னைபர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான நகுலேஸ்வரன் திடீரென படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காரணமாக தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஆயர், நாட்டில் நீதி தோற்றுப் போய்விட்டதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

நீதிக்குப் புறம்பான செயல்கள்தான் தற்போதைய ஆட்சியில் நடைபெறுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ள இராயப்பு ஆண்டகை, இந்நிலையில் ஆயுததாரிகளும் தமது அராஜகங்களை சுதந்திரமாக அரங்கேற்றி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சர்வதேச சமூகம உடனடியாக தலையிட்டு இலங்கையில் தொடரும் இந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழருக்கு நீதியையும், விடுதலையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் மன்னார் ஆயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Responses to முன்னாள் போராளியின் படுகொலை, வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த சூழ்ச்சி – மன்னார் ஆயர் கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com