Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள் சுவிசில் பேரெழுச்சியோடு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள் இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09.00 மணியளவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன.

தாயக விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10. 45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் உள்ள போறூம் மண்டபத்தில் 27.11.2014 பிற்பகல் 13.00 மணியளவில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கடந்த கால உரைகளிலிருந்து, காலத்தின் தேவையைச் சுட்டிநிற்கும் சிறுதொகுப்பு, அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தேசிய மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து தாயக நேரம் 18.05 மணியளவில் மணியோசை ஒலிக்க, பொதுச்சுடரேற்றப்பட்டு, அகவணக்கத்துடன் துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட்டு, நிகழ்வுகள் யாவும் வழமையான மரபு முறைப்படி உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.

சுவிஸ் தேசிய மாவீரர்நாள் நிகழ்வில், சுவிசின், அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் திருவுருவப் படங்களுக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் தேசிய உணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றது.

நிகழ்வில் தாயகம் சார்ந்த சிறப்பு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு 'தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ்“ இனால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டதுடன், மாவீரர் குடும்ப உறவுகளுக்கான மாவீரர் நினைவு சுமந்த நினைவுப் பேழைகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளரும், தமிழீழ விடுதலைக்கு ஆரம்பம் முதல் இன்றுவரை தொடர்ந்தும் பெரும் பங்காற்றி வருபவரும் திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவருமான திரு. கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சமகால நிகழ்வுகளைக் கருப்பொருளாகக் கொண்ட நாடகமானது மிகவும் உணர்வுபூர்வமாகவும், எழுச்சியாகவும் இருந்ததுடன் சுவிஸ் வாழ் கலைஞர்களின் உணர்வு மிக்க மாவீரர் காணிக்கை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இறுதி நிகழ்வாக 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் இனிதே நிறைவுபெற்றன.

0 Responses to சுவிஸில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com