Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாவல பகுதியில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து, அப்போதைய பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது. இந்தத் தேர்தலில் சிலவேளை நான் தோல்வியுற்றால் அவருக்கு நடந்தவற்றை விட பல மடங்கு அதிகமானவை எனக்கு நடக்கும்.

சரத் பொன்சேகாவின் உரிமைகள் மற்றும் சலுகைகளை இல்லாதொழிக்க, மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். நான் அதிகாரத்துக்கு வந்து சில மணி நேரங்களுக்குள் பொன்சேகாவின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பேன்.

அத்துடன், முன்னாள் இராணுவ தளபதியாக அவருக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள், ஜெனரல் பதவி மற்றும் பதக்கங்களைப் பெற்றுக்கொடுப்பதோடு, இராணுவ தளபதிகளின் பெயர்ப் பட்டியலில் அவருடைய பெயரையும் இணைப்பேன்.

இறுதி யுத்தத்தின் கடைசி இரண்டு வாரங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இருக்கவில்லை. அப்போது, பதில் பாதுகாப்பு அமைச்சராக நானே கடமையாற்றினேன். இதன்மூலம், நான் மூன்று முறை பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியுள்ளேன்” என்றுள்ளார்.

0 Responses to பொன்சேகாவை அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com