Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மலையக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் சந்தர்ப்பவாதங்கள் பற்றியும் பேசத்தான் வேண்டியுள்ளது.காரணம் தற்போதைய சூழலில் மலையக பிரதான கட்சிகளின் தலைவர்களின் போக்கு அப்படித்தான் அமைந்துள்ளது.

சமூகத்திற்காகவும் கட்சிக்காகவும் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதில் தவறில்லை ஆனால் எனக்கு மட்டுமே எல்லாம் வேண்டும் என்ற நிலையிலும் வாரிசு அரசியல் கலாசாரத்தை ஊக்குவிப்பதில் முன்னிற்கும் போது இவர்களை எந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது?

மலையகத்தைப் பொறுத்த வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் என்பன வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சிகளாக விளங்கி வருகின்றன.

ஆரம்ப காலத்தில் இந்த மூன்று கட்சிகளின் தலைமைத்துவத்தையும் ,அவர்களின் அர்ப்பணிப்பையும், இராஜதந்திர செயற்பாடுகளையும்,காய் நகர்த்தல்களையும் இப்போதுள்ள தலைமைகளிடம் அணுவளவேனும் காண முடியாதுள்ளது.

இதற்குக் காரணம் அரசியல் முதிர்ச்சியின்மை மற்றுமன்றி இவர்களுக்கு உரிய ஆலோசகர்கள் இன்மை, நெருக்கடியான நேரத்தில் முடிவெடுக்க முடியாமை போன்றவற்றைக் கூறலாம். இதற்கு அப்போதுள்ள தலைவர்களின் அனுபவங்களை பின்பற்றாமையும் ஒரு காரணம்.

அப்போது இ.தொ.கா

அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் பெரிய கல்வி அறிவு படைத்தவராக இல்லாவிட்டாலும் தொழிற்சங்க அறிவிலும் தொழிலாளர்களின் மனங்களை படிப்பதிலும் பேராசானாக திகழ்ந்தவர். பல்வேறு சந்தர்ப்பங்களில் மத்திய அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளைப்பேணி வந்த அவர் சமூகத்திற்காக அரசாங்கங்களிடம் பெற்றுத்தந்தவைகளை இலகுவில் பட்டியல் படுத்த முடியாது. அவர் கூடுதலாக உரிமைகளை பெற்றுத் தருவதிலும் அதற்காகப்போராடுவதிலும் முன்னணியில் இருந்தவர்.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆரிடம் நேரடியாக பேசி பெற்றுத்தந்ததிலும் பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் பெயரை மாற்ற முயற்சித்த போது அதற்கு தடை வந்த நேரம் பெயரை மாற்ற வேண்டும் இல்லாவிட்டால் பெருந்தோட்டப்பகுதி பிள்ளைகளில் 75 வீதமானோரை உள்ளீர்க்க வேண்டும் .என நெருக்கடி கொடுத்து கோரிக்கைகளை முன் வைத்து வெற்றி பெற்றதையும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். இது அவரது சாணக்கிய வௌிப்பாடுகளில் சில சம்பவங்கள் மட்டுமே. இவ்வாறான செயற்பாடுகள் அவரோடு முடிந்து விட்டது என்று துணிந்து கூறலாம்.

இப்போது இ.தொ.கா

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மகன் இராமநாதன் தொண்டமான் அவர்கள் மத்திய மாகாண சபையில் முதல் தமிழ் கல்வி அமைச்சராக விளங்கினார். அவரால் அரசியலில் பளிச்சிட முடியவில்லை. அதன் காரணமாக களமிறக்கப்பட்டவர் தான் அவரது மகன் இராமநாதன் ஆறுமுகன் தொண்டமான். இவரது பொறுப்பில் இ.தொ.கா முழுமையாக வந்தவுடன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானிடமிருந்து பணியாற்றிய பல அனுபவஸ்தர்கள் இங்கிருந்து வெளியேறியதே இடம்பெற்ற முக்கியமான மாற்றங்களாக கூறலாம்.

ஒரு கட்டத்தில் இ.தொ.காவை பிரதிநிதித்துவப்படுத்திய 12 பேர் வரை பாராளுமன்ற அங்கத்தவர்களாக இருந்ததை நாம் மறக்க முடியாது.

இக்கட்டுரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மையமாகக்கொண்டு எழுதப்படுவதால் பழைய பஞ்சாங்கங்கள் அவசியமில்லை என்று நினைக்கிறோம். ஜனாதிபதி தேர்தல் பற்றிய குழப்ப நிலைக்கு மத்தியிலும் முந்திக்கொண்டு நிபந்தனையற்ற ஆதரவு என அறிக்கை விடுத்தார் அமைச்சர் ஆறுமுகன். இந்த நிபந்தனையற்ற ஆதரவு என்ற வார்த்தைகளில் ஒழிந்திருக்கும் மலையக மக்களின் பல கோரிக்கைகள், உரிமைகள் மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டதுதான் மிச்சம்.

இப்போதும் பெருந்தோட்ட மக்களுக்கு கூரைத்தகடுகளோ, ஒலிபெருக்கி சாதனங்களோ, துடுப்பாட்ட மட்டைகளோ, கொங்ரீட் பாதைகளோ தான் தேவை என்று அமைச்சர் ஆறுமுகன் நினைத்துக்கொண்டிருந்தால் இதை விட அறியாமை வேறு என்ன உள்ளது?

இவராக கேட்டுப்பெற முடியாது என்று வைத்துக் கொள்வோம். ஜனாதிபதி தருகிறேன் என்று சொன்ன ஐம்பதினாயிரம் வீட்டுத்திட்டம் (வரவுசெலவு திட்டம்), தொழிலாளர்களுக்கு கௌரவமான வாழக்கை (மகிந்த சிந்தனை) ஆகியவற்றை கூட இந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது போனால் இத்தனை பிரதிநிதிகளை வைத்துக்கொண்டும் எங்கே போனது இ.தொ.காவின் பேரம் பேசும் அனுபவம்?

தற்போது மகிந்தவின் வெற்றியே மலையகத்தின் வெற்றி என கட்அவுட்டுகள், போஸ்டர்கள் மலையகமெங்கும் தெரிகின்றன. சமூக அபிவிருத்திக்காகவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கிறோம் என்கிறார் ஆறுமுகன். அது தொழிலாளர் சமூகமா கட்சி சமூகமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றை மட்டும் அமைச்சர் ஆறுமுகன் யோசிக்க வேண்டும், வட பகுதி வாழ் மக்களின் வாக்குகள் கிடைக்காது என்று தெரிந்தும் அப்பகுதிக்கு பாரிய திட்டங்கள் இன்னமும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன ஆனால் மலையக மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்று தெரிந்தும் இரண்டு பதவி காலத்திலும் தருகிறேன் என்று .சொன்னதும் கிடைக்கவில்லை இந்த அரசியல் சதுரங்கம் ஏன் என்று ஆறுமுகன் யோசிப்பாரா? யோசிக்கத் தேவையில்லை காரணம் தேர்தல் பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரை பக்கமே இருப்பதையே இ.தொ.கா கொள்கையாக கொண்டிருக்கும் போது யோசிப்பதற்கு என்ன உள்ளது?

அப்போது மலையக மக்கள் முன்னணி

இ.தொ.காவுக்கு மாற்று சக்தியாக மலையகத்தில் காலூன்றி தனித்து நின்று வெற்றியும் பெற்ற பெருமை அமரர் சந்திரசேகரனுக்கு உள்ளது. நெருக்கடி நேரத்தில் அரசாங்கம் அமைக்க உதவியதும் (சந்திரிகா அரசாங்கம்) அதற்குப்பிரதிபலனாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை உருவாக்கியதும் வீடமைப்பு பிரதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தொழிலாளர்களுக்கு 25 ஆயிரம் தனி வீட்டுத்திட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்ததையும் வரலாறு கூறும்.

மென்மை சுபாவம் கொண்ட அமரர் சந்திரசேகரன் மக்களுக்காக வேங்கையாக எழுந்த சந்தர்ப்பங்கள் அதிகம். இறுதி வரை மலையக மக்களுக்காக உழைத்து களைத்து எனது மக்களுக்கு இன்னும் பல உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் உயிர் நீத்தவர். தேர்தல் காலங்களில் பல கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல் முடிந்தவுடன் அது குறித்து பேச்சு நடத்தி பெற்றுக்கொடுக்க முன்னர் காலன் அவரை கவர்ந்து விட்டான். முக்கியமாக மலையகத்தில் தேசிய பாடசாலைகளை அமைக்க அவர் முன் வைத்த கோரிக்கைகளைக் கூறலாம்.

இப்போது ம.ம.மு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முதலில் ஒருவருக்கு என்றும் பின்னர் பரீசிலிப்பு என்றும் பின்னர் விஞ்ஞாபனம் பார்த்த பிறகு என்றும் குழப்பகரமான நிலையில் முடிவு எடுக்க முடியாத பரிதாபத்தில் சிக்கி தவித்து வருகிறார் முன்னணியின் அரசியல் துறை தலைவர் வே.இராதாகிருஷ்ணன்.இவ்வாறான தாமதம் கட்சியை மக்கள் மத்தியிலிருந்து வெகு தூரம் கொண்டு செல்லப்போகிறது என்பதே யதார்த்தம், காரணம் ஒரு கட்சியில் அங்கம் வகிப்போர் தமது தலைமைகளை சிறந்த தெளிவான முடிவை சமயோசிதமா எடுக்க வல்லவர்கள் என்று நினைப்பதில் தவறுகள் இருக்க முடியாது, அப்படி இல்லாது போனால்?ஆரம்பத்தில் நிபந்தனையற்ற கோரிக்கைகள் என்ற பெயரில் மலையக மக்களின் வீடு, காணி தேவைப்பாடுகள் பற்றி கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தது ம.மமு.

ஆனாலும் அப்போது ஜனாதிபதி தேர்தலுக்கு கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு குறைவான காலமே இருந்தது. 180 வருட காலமாக துன்பங்களை அனுபவித்து வரும் ஒரு மக்கள் கூட்டத்திற்கு இரண்டு மாதங்களில் தீர்வை பெற்றுக்கொடுக்க மந்திரவாதியால் கூட முடியாது என்பது பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கு தெரியாததல்ல. எனினும் மகிந்த சிந்தனையில் இந்த மக்கள் பற்றி சொல்லப்பட்டதை இவரும் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்ட மறந்து தானும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதை நிரூபித்தார்.

திடீரென பொது வேட்பாளர் தோன்றவும் பரிசீலிப்பு என்ற பெயரில் மீண்டும் வேதாளம் மரம் நோக்கிச்சென்றது. இப்போது தேர்தல் விஞ்ஞாபனத்தில் யார் மலையக மக்களுக்கு தீர்வை முன்வைக்கின்றார்களோ அவர்களுக்கே ஆதரவு என்ற நிலைப்பாட்டில் கட்சி உள்ளது. ஆக ஆரம்பத்திலேயே பொது வேட்பாளர் ஒருவர் (அது யாராக இருந்தாலும்) வருவார் என்பது தெரிந்திருந்தும் ஜனாதிபதி மகிந்தவுக்கு முண்டியடித்துக்கொண்டு போய் ஆதரவு என்று கூறியது அரசியல் முதிர்ச்சியா அல்லது பொது வேட்பாளர் யார் என்று தெரிந்த பிறகு தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி இப்போது சிந்திப்பது அரசியல் ஞானமா?

அப்போது தொழிலாளர் தேசிய சங்கம்

தொழிலாளர்கள் சார்பான அரசாங்கத்தையே ஆதரிக்க வேண்டும். தான் ஆதரித்த அரசாங்கம் தொழிலாளர்களுக்கு தீமையான காரியங்களில் ஈடுபடும் பட்சத்தில் அதை எதிர்த்துப்போராடுவதே தனது கொள்கையாக கடைபிடித்து வந்தார்

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகர் தொழிற்சங்க துறவி வீ.கே.வெள்ளையன். தொழிலாளர்கள் தொழிற்சட்டங்களையும், நாட்டு நடப்புகள் அரசியல் நடவடிக்கைகள் என்பவற்றை தெளிவாக தெரிந்திருக்க பத்திரிகை வாசிக்க வேண்டும் என ஊக்கப்படுத்தியவர்.

ஏனைய தொழிற்சங்கங்களைப்போல் கல்வி கற்றவர்களை ஒதுக்கி வைக்கும் செயற்பாடுகளை இவர் செய்யவில்லை ஏனெனில் இவர் சிறந்த கல்விமான். கண்டி திரித்துவ கல்லூரியில் கல்வி கற்றவர். ஆங்கில புலமையாளர். கற்றவருக்கு தானே கற்றவர் பெருமை விளங்கும்? தொழிற்சங்கமானது அரசாங்கத்தையோ அரசியல் கட்சியையோ சார்ந்திருக்கக்கூடாது என்ற கொள்கைப்பிடிப்போது வாழ்ந்தவர். எந்த வித உயர்பதவிகளையும் வகிக்காவிட்டாலும் தனது கொள்கையிலிருந்து சற்றும் பின்வாங்காத தொழிற்சங்கவாதி வீ.கே.வெ ள்ளையன் அவர்கள்.

இப்போது தொ.தே.சங்கம்

பிரதி அமைச்சு பதவி கிடைத்தவுடன் “மலையகத்தின் மாற்றம் திகா” என போஸ்டர்கள் மலையகமெங்கும் தென்பட்டன. ஆனால் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துப் பேசி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று அறிவித்த பிறகு தான் தெரிந்தது. மாற்றம் மலையகத்திற்கு அல்ல சங்கத்தின் தலைவர் பிரதி அமைச்சர் திகாம்பரத்திற்கு என்று. ஆரம்பத்தில் ஏழு பேர்ச் காணி வழங்குபவர்களைத்தான் மக்கள் ஆதரிப்பர் என சூசகமாக தெரிவித்தார் திகா. அதிலும் பாருங்கள் ஆதரிப்போம் என்று கூட சொல்லவில்லை மிகக் கவனமாக “ஆதரிப்பர்” என மக்களை மாட்டி விட்டார். பின்னர் ஜனாதிபதியை சந்தித்தப்பிறகு ஆதரவை வெளிப்படுத்தினார்.

பொது வேட்பாளர் யார் என்று அறிந்து பிறகு ஜனாதிபதி மகிந்தவை ஆதரிப்பதைத்தவிர வேறு வழியில்லை என அறிக்கை வந்தது. சில வேளைகளில் பிரதி அமைச்சுப்பதவி கிடைக்காமலிருந்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரி அமைந்திருக்கக்கூடும். தொழிலாளர் தேசிய சங்கம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதன் இலக்கு என்னவோ அதை நோக்கி கட்சி செல்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

காரணம் தொழிலாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது தான் தொழிலாளர் தேசிய சங்கம் . இப்போது சில நேரங்களில் வாகன அணிவகுப்பை பார்க்கும் போது இன்னுமொரு இ.தொ.கா என்றே கூற வேண்டியுள்ளது. எனினும் அமரர் வீ.கே.வெள்ளையனுக்குப் பிறகு சங்கத்தை கட்டி எழுப்பி அதை காத்து வருவதில் வெற்றி பெற்ற திகா தொழிலாளர்களை எப்போது கட்டி எழுப்பப்போகிறார்?

க.கிஷாந்தன்
gkkrishanthan@gmail.com

0 Responses to அப்போது அவா்களும்! இப்போது இவா்களும்! - க.கிஷாந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com