Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணத்தில் உள்ள கையெழுத்தை போலியெனக் கூறும் மைத்திரிபால சிறிசேன, ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்களை ஏன் மறுக்கவில்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ரணில் விக்ரமசிங்கவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் வெளியிட்டார். அவ்வாறு வெளியிடப்பட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் போலியானது ரணில் விக்ரமசிங்க பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கையொப்பம் போலியெனக் கூறும் அவர்கள் ஏன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களும் போலியானவை அவற்றை நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம் எனக் கூறவில்லை.

வடக்கிலுள்ள இராணுவத்தினர் குறைக்கப்படும் என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆவணம் பொய்யெனில் அதில் உள்ளவாறு இராணுவத்தினரைக் குறைக்க மாட்டேன் என மைத்திபால சிறிசேன கூறவேண்டும். அதேபோல 13வது திருத்தச்சட்டத்திற்கு அமைய காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன் எனக் கூறவேண்டும். அவ்வாறு எதனையும் கூறாமல் கையொப்பம் போலியானது எனக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்.

நல்லாட்சி என அடிக்கடி கதைத்துவரும் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது பற்றி ஒரு வசனத்தைக் கூடக் குறிப்பிடவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்புக் குறித்து எதுவும் அதில் உள்ளடக்கப்படவில்லை. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக வடக்கிலுள்ள இராணுவத்தினரைக் குறைப்பது விடயம் தொடர்பில் எதனையும் அவர் கூறவில்லை. இவ்வாறு ஒவ்வொரு தரப்பினரையும் ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுகொள்வதற்கே அவர் முயற்சிக்கிறார்” என்றுள்ளார்.

0 Responses to கையெழுத்தை போலியெனக் கூறும் மைத்திரி, ஒப்பந்தத்திலுள்ள விடயங்களை ஏன் மறுக்கவில்லை: விமல் வீரவங்ச

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com