Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று பாரதிய ஜனதாகட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டியில்,

ராஜிவ் காந்தியை கொன்ற விடுதலைப் புலிகளை நான் என்றைக்கும் ஏற்க மாட்டேன். அவர்களை ஆதரிப்பவர்களையும் ஏற்க மாட்டேன்.

இந்தியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாத அமைப்புகளை என்றைக்கும் ஏற்க முடியாது. தீவிரவாத அமைப்பு என தெரிந்தும் வைகோ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக பேசி வருவது தேசியத்தின் மீது அவர் வைத்திருக்கும் அவநம்பிக்கையின் வெளிப்பாடு என்பதை இந்த நாடே அறியும்.

மத்திய அரசு தன் விருப்பப்படி நடக்கவில்லை என்பதற்காக மோடியை வைகோ விமர்சிக்கிறார். அதனால்தான் வைகோவை கூட்டணியில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டேன்.

வைகோவுக்கு நாவடக்கம் தேவை என்று பாஜக செயலாளர்  ராஜா சொல்லியிருக்கிறார். அதில் என்ன தவறு என புரியவில்லை. இதற்காக அவரது வீட்டை ம.தி.மு.க.வினர் முற்றுகையிட முயன்றுள்ளனர்.

விடுதலைப் புலிகளை எதிர்ப்பதால் டபுள் ஏஜன்ட் என கூறியுள்ளார். நான் டபுள் ஏஜன்ட் யாருக்கு என அவர் சொல்லவில்லை. அவர் தான் விடுதலைப் புலிகள் ஏஜன்டாக செயல்படுகிறார். தொடர்ந்து அவர் இப்படியே செயற்பட்டால் மதிமுகவையும் தடை செய்யும் முயற்சியில் இறங்குவேன் என  சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

முடிந்தால் மதிமுகவை தடை செய்து பார்க்கட்டும்: சுப்பிரமணியன் சுவாமிக்கு வைகோ சவால்

மதிமுகவை தடை செய்வோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஏஜெண்ட் சுப்பிரமணியன் சுவாமி கூறுகிறார்... முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ சவால் விடுத்துள்ளார்.

கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,

பாரதிய ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா என்னை நாவடக்கமாக பேச வேண்டும். இல்லையெனில் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த பேச்சுக்கு எதிர் நடவடிக்கையில் ஈடுபடவும், எச்.ராஜாவின் உருவப்பொம்மையை எரிக்கவும் ம.தி.மு.க. தொண்டர்கள் தயாரானார்கள். அவர்களிடம் தகுதியில்லாத ஒரு நபருக்காக போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டேன்.

பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய தலைவராக இருப்பதாக கூறிக்கொள்ளும் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் வலைதள பக்கத்தில் ம.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இப்போது ம.தி.மு.க.வை தடை செய்வோம் என்று மிரட்டுகிறார்கள். முடிந்தால் அவர்கள் ம.தி.மு.க.வை தடை செய்து பார்க்கட்டும். நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற ஒரு கலவரத்தில் 62 பேர் பலியானார்கள்.

அப்போது பாஜகவினர் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அப்போது பேசியது நான்தான். விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்த காரணத்தால்தான் கடந்த 1998-ம் ஆண்டு பாஜக கூட்டணியில் வாஜ்பாயும், அத்வானியும் என்னை சேர்த்தார்கள்.

வாஜ்பாய் ஆட்சி கவிழ சுப்பிரமணியன் சுவாமி தான் காரணம். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ம.தி.மு.க.வினர் எப்போதும் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் என வைகோ தெரிவித்துள்ளார்.

0 Responses to விடுதலைப் புலிகளை ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன்: சுவாமி - முடிந்தால் செய்யட்டும் - வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com