Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையர்கள் என்கிற வகையில் சவால்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் பேதங்களைத் தவிர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தன் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை மதிப்பதாகவும், அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதாக தான் உறுதியளிப்பதாகவும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொது எதிரணிக் கட்சிகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு விகாரமாதேவி பூங்கா திறந்த வெளி அரங்கில் கைச்சாத்திடப்பட்டது. அங்கு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, குறித்த நிகழ்வில் பொது எதிரணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.

ரணில் விக்ரமசிங்க: அழிவடைந்து கொண்டிருக்கும் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வேண்டும். பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. திறைச்சேரி பணம் ராஜபக்ஷவின் குடும்பத்தினால் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ராஜபக்ஷ குடும்பத்தை தோற்கடிப்பதை எமது நோக்கமாக கொண்டு புதிரய அரசியல் முறைமையை ஏற்படுத்துவோம்.

சோபித தேரர்: ஜனாதிபதி தன்னிடம் ஃபைல்கள் உள்ளதாக சொல்கிறார். அந்த ஃபைல்கள் அவரிடம் பாதுகாப்பாக வைத்திருக்க கொடுக்கப்படவில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிடம் கொடுத்து விசாரணை செய்யவே கொடுக்கப்படுகின்றது. இன்று நீதித்துறை செயலிழந்துள்ளது. அதை ஜனாதிபதியே இயக்குகின்றார்.

சந்திரிக்கா குமாரதுங்க: நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளோம். நாட்டில் ஊழல், இலஞ்சம்,கொள்ளை, கொலை, வெள்ளை வேன் கடத்தல் என பல குற்றச் செயல்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எனவே இவற்றை இல்லாதொழித்து நாட்டை பரிசுத்தமாக்க வேண்டி நேரம் வந்துள்ளது. மக்களுக்காக செயற்பட வேண்டிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். இதேவேளை, சுதந்திரக் கட்சியில் இருந்து இன்னும் பலர் எம்மோடு வந்த இணைய உள்ளனர். இது சவாலான போராட்டம் என்றாலும் எமது உயிரை பணயம் வைத்து இந்நாட்டின் மக்களின் உயிரை காப்பாற்ற களமிறங்கியுள்ளோம்.

சரத் பொன்சேகா: மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியில் நாடு ஊழலின் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. இவ்வாறு இடம்பெற்று கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டில் 80 வீதமான மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. எமது நோக்கம், பயணம் மற்றும் இலக்கு என்பன ஒன்றாக உள்ளதால் நாம் இந்த தேர்தலில் வெற்றிபெறுவோம்.

மனோ கணேசன்: வரலாற்று முக்கியதுவமிக்க நாள் இது. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் முழுமையாக உள்வாங்காவிட்டாலும் சிங்கள சகோதர்களுடன் இணைந்து எமது பயணத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அசாத் சாலி: பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்நாட்டு முஸ்லிம் மக்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவர். எனவே இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவது நிச்சயம்.

0 Responses to ஜனநாயகத்துக்கு எதிரான சவால்களை எதிர்கொள்வோம்; பொது எதிரணியின் தலைவர்கள் அறைகூவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com