Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கோப்பியை வழங்கிவிட்டு பேசினாலே போதும், அவரையும் அரசாங்கத்தோடு இணைக்க முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, “அரசியலமைப்பை மாற்றுவது பற்றியே இப்போது எங்கும் பேசப்படுகிறது. என்னால் மட்டுமே அதைச் செய்ய முடியும். ஆனால், அதை சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே செய்வேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது பிரச்சாரக் கூட்டம் அனுராதபுரத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒவ்வொரு நாளும் காலையில் விடிந்ததும் அவர் போகிறார் இவர் வருகிறார் என்று மக்களைக் குழப்பும் செயற்பாடே நடக்கிறது. மக்கள் அதை நம்பி குழம்பத் தேவையில்லை.

இந்த மோசமான வெய்யிலிலும் மழையிலும் நெரிசல்பட்டுக்கொண்டு மக்கள் இலட்சக்கணக்கில் திரண்டிருப்பது எமது வெற்றியை உறுதிப்படுத்துகிறது. இங்கு மக்கள் எமது கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். எதிரணிக்கு நமது எதிர்ப்பை இதன் மூலம் வெளிப்படுத்துகின்றோம்.

கண்டியில் நடைபெற்ற எதிரணியின் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு நான் இங்கு பதில் சொல்லப் போவதில்லை. அதற்குப் பதில் சொல்லியாயிற்று. மீண்டும் பதில் சொல்லத் தேவையில்லை. பிறரை இகழ்ச்சி செய்து சேறுபூசி களங்கம் ஏற்படுத்தி அரசியல் செய்ய முடியாது.

ஜனாதிபதித் தேர்தல் என்பது மக்கள் கருத்துக்கணிப்பு அல்ல. இன்று சிலர் அரசியலமைப்பை மாற்றுவது பற்றியே பேசுகின்றனர். என்னால் அரசியலமைப்பை மாற்ற முடியும், எனினும் மக்கள் விருப்பத்திற்கேற்ப அதை செய்ய முடியும்.

இது இந்த நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாகும். இது மிக முக்கியமானது. சொல்வதற்கு எதுவும் இல்லாதவர்களே எதை எதையோ பிதற்றுகின்றனர்.

நாடு அபிவிருத்தியடையவில்லை என்று எவராலும் சொல்ல முடியாது. மக்களுக்கு மின்சாரம் வழங்கவில்லை. வீதிகள் அமைக்கப்படவில்லை என எவருக்கும் கூற முடியாது. யுத்தத்தைத் தோற்கடிக்கவில்லையென்று எவராலும் கூற முடியாது. புலிகள் இன்னமும் உள்ளனர் அவர்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு ஒளிந்து வாழ்கின்றனர். காலத்துக்கு காலம் வெளியே வந்து எமக்கு எதிராக செயற்படுகின்றனர். இப்போது எம்மை சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் ஏற்றப்போவதாகக் கூறுகின்றனர்.

நேற்று மனித உரிமைகள், ஆணைக்குழு இவ்வாறு கூறியுள்ளது. எமது இராணுவத்தினர் பற்றியும். யார் இராணுவத்தளபதி என்றும் எவ்வாறான கட்டளைகளை அவர் பிறப்பிக்கின்றார் என்றும் கேட்கின்றனர். படைத்தளபதி யார் என இனிகேட்போர், எமது படையினர் ஒருபோதும் சிவில் மக்களைப் படுகொலை செய்யவில்லை என்பதை நான் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். அதனால் எமது எந்த படையினரையும் யுத்த நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை.

நாம் இம்முறை வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒன்றரை இலட்சம் இளைஞர்களுக்கு தொழில் வழங்க தீர்மானித்துள்ளோம். அடுத்த வருடத்தில் அதனை வழங்குவோம். டொலர் கணக்கில் செலவழிக்கின்றனர். எனினும் நாம் இதே எம்மோடுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எச்செலவும் கொடுக்க வில்லை. ஒரு கோப்பி கோப்பையைக் கொடுத்து பேசினோம் அது மட்டுமே. கோப்பியை வழங்கியதும் ரணில் விக்ரமசிங்கவையும் எடுக்க முடியும். அது எம்மால் முடியும். எமது கையில் ஊத்தையோ இரத்தமோ படியவில்லை. அப்படியிருந்தால் நாம் அதனை வெட்டி காட்டில் வீசி எறிவோம்” என்றுள்ளார்.

0 Responses to ஒரு கோப்பியை வழங்கி ரணில் விக்ரமசிங்கவையும் அரசோடு இணைக்க முடியும்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com