Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நடைபெற்றாலும் 2016 நவம்பர் மாதம் வரையும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்தரின் ஆட்சிக் காலம் உள்ளது.

ஆனால் இலங்கையின் அரசியல் யாப்பின் படி ஒரு ஜனாதிபதியின் ஆட்சி 4 வருடங்கள் முடிந்த பின்பு அந்த ஜனாதிபதி விரும்பினால் புதிய ஜனாதிபதித் தேர்தலை நடத்தலாம். அந்த வகையில்தான் 2 வருடங்கள் உள்ள நிலையில்தான் புதிய தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் தோற்றாலும் வென்றாலும் மஹிந்தர்தான் ஜனாதிபதி என்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் உச்சக்கட்ட முறைகேடான வாக்களிப்புக்கள் நாடு முழுவதிலும் நடைபெறவுள்ளது. கள்ள வாக்களிப்புக்கள், வாக்களிப்பு நிலையங்களை முற்றுகையிட்டு பலாத்கார வாக்களிப்புக்கள் வெளிநாடு சென்றுள்ளவர்களின் வாக்களிப்பு மற்றும் ஏனைய எல்லா வகையான முறைகேடுகளையும் பயன்படுத்தவுள்ளார்கள். என்ன விலை கொடுத்தும் தனது அதிகாரத்தை மஹிந்தர் விடுவதாகவில்லை.

மஹிந்தர் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வார்

இப்படியான முறைகேடான வாக்களிப்புக்களையும் தாண்டி மைத்திரி வெற்றியடைந்தால் மஹிந்தருக்கு இரண்டு வழிமுறைகள் உள்ளது, அந்த வழிகளில் தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதாவது தனக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளது, அதனால் 2016 நவம்பர் மாதம் தான் புதிய ஜனாதிபதி மைத்திரியிடம் ஆட்சியை ஒப்படைப்பேன் என்று அடம் பிடிக்கலாம். சொல்லலாம். அல்லது இராணுவ ஆட்சியை நாட்டில் ஏற்படுத்தலாம்.

இந்த இராணுவ ஆட்சி பற்றி நாங்கள் ஏற்கனவே கடந்த ஒக்டோபர் மாதம் இந்த பகுதியில் எழுதியிருந்தோம் என்பதை மீண்டும் ஞாபகமூட்டுகின்றோம்.

இலங்கையில் ஒரு இராணுவ ஆட்சி ஏற்படலாம் என்பதை சில மேற்குலக நாடுகளும் கடந்த வாரங்களாக எச்சரிக்கை செய்து வருகின்றது என்பதையும் அறிவோம்.

மஹிந்தரைப் பொறுத்தமட்டில் தான் வெற்றியடைந்தால் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்புதான் புதிய ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாக மிகவும் பிரமாண்டமான முறையில் வெளிநாட்டுத் தலைவர்களை அழைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார்.

மைத்திரி வெற்றியடைந்தால் எஞ்சியுள்ள 2 வருடங்களுக்கும் தானே ஜனாதிபதி என்று மஹிந்தர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருப்பார். அதன் பின்பு 2016 நவம்பர் முதல் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த இராணுவ ஆட்சி என்பது மஹிந்தர் விரும்பா விட்டாலும் தற்போதைய பாதுகாப்புச் செயலரே மியன்மாரில் போன்று பாகிஸ்தானில் முஸ்ஸரப் போன்று ஒரு இராணுவ ஆட்சியைக் கொண்டு வரலாம். எந்தவொரு நிலையிலும் மஹிந்தர் ஆட்சியை விட்டு;க் கொடுக்கும் நிலையில் இல்லை.

இந்த அடிப்படையில்தான் தான் தோற்றாலும் தானேதான் ஜனாதிபதி என்று மஹிந்தர் தெரிவித்துள்ளார். இந்த இராணுவ ஆட்சியை மஹிந்தர் விரும்பா விட்டாலும் அவரது சகோதரர் கோத்தபாய விடுவாரா என்பது பலத்த கேள்வியாகவே உள்ளது.

சர்வாதிகாரிகள் தோற்கும் நிலையிலும் எப்போதும் வெற்றியின் மிதப்பில்தான் மூழ்கிக் கொண்டிருப்பார்கள். என்பது வரலாறு. இந்த வாக்கியங்கள் இலங்கைக்கு மிகவும் பொருத்தமானது.

மஹிந்தர் தோற்றால் உடனடியாக பதவி இழக்கின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தர் தோல்வியடைந்தால். அவர் தொடர்ந்து பதவிவகிக்க முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதே போன்றுதான் கடந்த மாதங்களாக மஹிந்தர் மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று பகிரங்கமாக இந்த முன்னாள் பிரதம நீதியரசர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து வந்தார். இப்போதும் அது போன்றே மஹிந்தர் எஞ்சியுள்ள 2 வருடங்களுக்கும் ஜனாதிபதியாக இருக்க முடியாது என்கின்றார்.

தனது பதவிக் காலங்கள் இரண்டு வருடங்கள் எஞ்சியுள்ள நிலையில் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு. அழைப்பு விடுக்கப்பட்ட ஜனாதிபதி தோல்வியடைந்தால் அந்த ஜனாதிபதி எஞ்சியிருக்கும் பதவிக் காலம் முடியும் வரையில் ஆட்சி செய்ய முடியாது என்பது தேர்தல் சட்டம்.

அரசியல் அமைப்பின் 31.அ என்னும் சரத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் பற்றித் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளளதாகவும் சரத் என் டி சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் இவரது கருத்தை யார் கேட்கின்றார்கள். இவரது கருத்தை தற்போதைய பிரதம நீதியரசர் கேட்டால்தானே.

பதவிக்காலம் எஞ்சியிருக்கும் போது ஜனாதிபதி தேர்தலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டு, அழைப்பு விடுத்த ஜனாதிபதி தோல்வியடைந்தால் குறித்த ஜனாதிபதி எஞ்சியிருக்கும் பதவிக் காலம் முடியும் வரையும் ஆட்சி செய்ய முடியாது.

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் போது பதவி வகிக்கும் ஜனாதிபதி தவிர்ந்த ஏனைய ஒருவர் தேர்தலில் வெற்றியீட்டினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னைய ஜனாதிபதி பதவி இழக்கின்றார்.

அதன்படி புதிய ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் வெற்றியீட்டிய தினத்தில் இருந்து ஆரம்பமாகின்றது என்பது யாப்பு. மற்றும் நடைமுறையாகும். அதனால் மஹிந்தர் பதவி விலகமாட்டேன் என்று அடம்பிடிக்கலாம்.

அதனால் இந்த விடயம் நீதிமன்றம் செல்ல அதிக வாய்ப்புள்ளது. நீதி மன்றத்திலும் சிக்கல் உள்ளது.தற்போதைய பிரதம நீதியரசர் நீதியை நிலை நாட்டுவாரா என்பது பலத்த கேள்வியாகும். அதனால் மைத்திரி வெற்றியடைந்தால் பிரதம நீதியரசர் மைத்திரியை சத்தியப் பிரமாணம் செய்து வைப்பாரா என்பது பலமான கேள்விதான்.

அதனால் பிரதம நீதியரசர் விடயத்தில் மைத்திரி உடனடியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நிமனம் செய்யலாம். அல்லது அவரிடம் மைத்திரி பதவிப் பிரமாணம் செய்யலாம். ஆனால் சத்தியப் பிரமாணம் செய்யாத ஒருவரது நியமனம் செல்லாது என்ற வாதமும் மைத்திரியின் பதவிப் பிரமாணம் செல்லாது என்ற தர்க்கமும் அங்கு முதல் இடத்தைப் பிடிக்கலாம்.

அதனால் மைத்திரியின் வெற்றியை அவ்வளவு சுலபமாகப் பெற முடியுமா என்ற கடினமான கேள்வி ஒன்று உள்ளது. அப்போது கலகம் வெடிக்கலாம். ஏன் உள்நாட்டு கலகம் வெடிக்கலாம். போர் வெடிக்கலாம். இதுவொரு பாரிய சிக்கலாக உருவெடுக்கும்.

இராணுவக் குவிப்பு

கொழும்பு முகத்துவாரம் ரொக் ஹவுஸ் இராணுவ முகாமில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரமாக அரசுக்கு விசுவாசமான இராணுவத்தினர் அங்கு பெருமளவு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. அத்துடன் இராணுவத்தினரின் விடுமுறைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு;ள்ளது.

முகத்துவாரம் முகாம் என்பது ஆர்மட் படைப் பிரிவுக்குச் சொந்தமானது. அங்கு இராணுவ தாங்கிகள் அடங்கிய படைப்பிரிவாகும். முகத்துவாரம் முகாமுக்கு மேலதிகமாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வரும் நிலையில். வெளிப் பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினர் எக்காரணம் கொண்டும் தமது பகுதிகளில் இருந்து வெளியேறக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற அன்றைய தினம் இரவு பொது வேட்பாளர் சரத் பொன்சேகா ,ஐ.தே.க. தலைவர் ரணில் ஆகியோர்கள் தங்கியிருந்த ஹோட்டலைச் சுற்றி இராணுவ நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டது என்பதையும் ஞாபகமூட்டுகின்றோம்.

முன்னாள் இராணுவ அதிகாரிகள் எதிர்கட்சி பிரதம கொறடாவுடன் சந்திப்பு

அரசு இராணுவத்தை இப்படிக் குவித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க எம்.பியை கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்ததியுள்ளதாக அறியவருகின்றது.

ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் ஐ.தே.க.யின் ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.

ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ மிக உயர்ந்த நிலையில் உள்ள ஜெனரல்கள், பிரிகேடியர்கள் மற்றும் தளபதிகளே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். தேர்தல் தினத்தில் உச்சக்கட்ட தேர்தல் வன்முறைகள் நடைபெறலாம் என்று எதிர்க்கட்சியினர் எதிர்பார்ப்பதாகவும் அறிய வருகின்றது.

இந்த ஜோன் அமரதுங்க எம்.பி. கடந்த ஐ.தே.க.யின் ஒரு வருடகால ஆட்சியில் பொலிஸ் திணைக்களத்திற்குப் பொறுப்பான உள்துறை அமைச்சராக கடமையாற்றியவர். அதனால் இவருக்கு பாதுகாப்பு சம்மந்தமான அனுபவம் உள்ளதனால் அவரிடம் ஐ.தே.க. ஆதரவாளர்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஆலோசனை வழங்கி வருகின்றாராம்.

இதேவேளை இந்த ஜோன் அமரதுங்க மஹிந்தருக்கு ஆதரவு வழங்கவிருந்தார் என்ற செய்திகள் கடந்த வாரங்களாக அடிபட்டது. ஆனால் அந்தச் செய்தியை அமரதுங்க மறுத்துள்ளார். திருடன் கையில் திறப்புக் கொடுத்த கதையாக மாறினால் ஐ.தே,க. பாவம்தான்.

பிந்திய நிலையில் தேர்தல் மதிப்பீடுகள்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த மட்டில் நாட்டிலுள்ள கிராம மட்டங்களில் மஹிந்தவின் செல்வாக்குக் குறையாமல்தான் உள்ளது. கிராம மட்டங்களில் மைத்திரியின் செல்வாக்கு என்பது மிகவும் குறைந்த நிலையில்தான் உள்ளது.

கிராம மட்டங்களில் மஹிந்தவின் செல்வாக்கின் அளவுக்கு 80 வீதத்தையும் தாண்டியுள்ளது. கிராம மட்டங்களில் மைத்திரியின் ஆதரவு என்பது மிக மிக அரிதாகவுள்ளது. நகர மட்டங்களில் மைத்திரியின் ஆதரவு மிக மிக உயர்ந்த நிலையில் உள்ளது.

கிராம மட்டங்களில் மைத்திரி அணியினர் தங்களுக்கான ஆதரவைப் பெருக்கும் நடவடிக்கைளில் அல்லது தேர்தல் பிரச்சாரங்களில் இன்னும் ஈடுபடவில்லை. உதாரணமாக அநுராதபுர மாவட்டத்தில் மஹிந்தவுக்கான ஆதரவும் செல்வாக்கும் மிகவும் உயர்ந்த நிலையில்தான் உள்ளது.

அதனால் சிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாது தனிச் சிங்கள மக்களின் வாக்குகள் மூலமாக வெற்றியடையலாம் என்பதுதான் மஹிந்தவின் மந்திரம். வெற்றியின் தந்திரம். அங்கு மைத்திரியின் ஆதரவு மிகவும் அரிதாகவுள்ளது.

எஞ்சியுள்ள மிகவும் குறைந்த கால இந்த இடைவெளிக்குள் கிராம மட்டங்களில் மைத்திரிக்கான ஆதரவைப் பெருக்க முடியாது. அந்தளவுக்கு வாக்களிப்புக்கான கால அவகாசம் சுருங்கி விட்டது.

மைத்திரி அணியினர் கிராம மட்டங்களில் உள்ள மக்களைக் கவர்வதற்கான ஆக்கபூர்வமான பணிகளில் அல்லது தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடவில்லை என்பது உண்மை. ஆனால் நகரங்களில் மைத்திரியின் ஆதரவு மஹிந்தரை விட அதிகமாகவே உள்ளது.

அரசு தோல்வி பயத்தில் உள்ளது.

அரசுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது.அதனால்தான் தேர்தலில் நிச்சயம் தான் வெற்றியீட்டுவேன் என்று தெரிவித்து வந்த மஹிந்தர் தற்போது தோற்றாலும் தாமே ஜனாதிபதி என்ற புதிய தர்க்கத்தை ஆரம்பித்துள்ளார். தேர்தலில் தோற்றாலும் எஞ்சியுள்ள 2 வருடங்களும் தாமே ஜனாதிபதி என்று கூறும் அளவுக்கு மஹிந்தர் பயந்து விட்டார்.

தேர்தலில் தோற்றாலும் 2 ஆண்டுகள் தான் தொடர்ந்து ஆட்சி செய்யலாம் என்று புதிய வியாக்கியானம் ஒன்றை மஹிந்தர் அறிமுகம் செய்துள்ளார். ஆனால் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியானதும் புதிய ஜனாதிபதி பிரதம நீதியரசர் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்து தனது கடமைகளை பொறுப்பேற்க வேண்டும்.

இந்த சத்தியப் பிரமாணம் என்பது புதிய ஜனாதிபதியின் விருப்பத்தின் பேரில் 2-3 தினங்களில் அல்லது. தேர்தல் முடிவுகள் வெளியான மறுதினம் அல்லது உடனடியாகவும் நடைபெறலாம். இந்த விடயத்தில் பிரதம நீதியரசர் தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கு சகல தகுதிகளும் உள்ளது.

அதாவது தேர்தல் செயலகம் உத்தியோகபூர்வமாக தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்பு சடட்டப்படி புதிய ஜனாதிபதி தன்னை சத்தியப் பிரமாணம் செய்து வைக்குமாறு பிரதம நீதியரசரிடம் கோருகின்ற போது மைத்திரி வெற்றியடைந்து அவர் இப்படியாக பிரதம நீதியரசரிடம் கோருகின்ற போது அரசு அதற்கு வழி விடுமா என்ற கேள்வி பலமாகவே உள்ளது.

அப்படி பிரதம நீதியரசர் மைத்திரியை பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுக்கலாம் அப்போது மைத்திரி தன்னிச்சையாக தன்னை ஜனாதிபதியாக அறிவிக்கலாம். அப்போது இராணுவத்தின் நிலையில்தான் இந்தப் பதவி தொக்கி நிற்கின்றது.

அதனால்தான் கோத்தபாய தனக்கு விசுவாசமான இராணுவத்தினரை கொழும்பு மட்டக்குளியில் குவித்து வருகின்றார். அதனால்தான் சொல்கின்றோம், ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் நாட்டில் பாரிய கொந்தளிப்பு ஒன்று நடக்கலாம்.

ஆனால் இது பாரிய சட்டச் சிக்கல் நிறைந்த ஒரு பிரச்சினையாகும். இப்படியான சிக்கல் ஒன்று இலங்கை அரசியலில் இதுவொரு புதிய பிரச்சினை என்பதால் இந்த விடயம் நீதிமன்றம் வரையும் செல்லும். ஆனால் அரசின் நேரடி நியமனத்திலுள்ள பிரதம நீதியரசரின் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது முடிவுகளின் பின்புதான் அறிய முடியும்.

ஆனால் அரசியல் யாப்பின்படி தேர்தலில் மஹிந்தர் தோல்வியுற்றால் அலரி மாளிகையை விட்டு வெளியெற வேண்டும். இல்லாது போனால் ஜனாதிபதியை வெளியேற்றுவதற்கு ஜே.வி.பி சகல வழிகளிலும் போராட்டங்கள் செய்யும் என்று ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயகா தெரிவித்துள்ளார்.

ஆனால் மஹிந்தர் தோல்வியடைந்து ஆட்சியை கொடுக்க மறுத்தால் நாட்டில் ஒரு ராணுவ ஆட்சியும் பாரிய இரத்தக் களரியும் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.

அரசு ஆட்சியை வெற்றிடைந்தவரிடம் கொடுக்காது அரசு பலாத்காரமாக அட்சியைத் தொடருமானால் நாட்டில் அன்னிய நாடுகளின் தலையீடுகளும் நாட்டில் ஒரு பாரிய மோதலும் தவிர்க்க முடியாத ஒன்றுதான் என்பதைச் சொல்வோம்.

மைத்திரி வெற்றியடைந்தால் சும்மா பார்த்துக் கொண்டிரப்பாரா என்ற கேள்வியும் பலமாகத்தான் உள்ளது.

புலிகளை விற்றுப் பிழைக்கும் அரசு

சிங்கள மக்களின் வாக்குளைப் பெறவும் அவர்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலும் விடுதலைப் புலிகளை ஏலம் போடவும் அரசியல் வர்த்தகம் செய்யவும் அரசுக்கு புலிகள் தேவைப்படுகின்றது. தேர்தல் பிரச்சாரங்களுக்கும் தேர்தல் மேடைகளுக்கும் புலிகளை முக்கியமான கருவியாக முக்கியமான ஆயுதமாக அரசு பயன்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் தான் கடந்த வாரம் ஜனாதிபதி முக்கியமான செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.அதாவது பொது வேட்பாளர் மைத்திரியும் தமிழ் கூட்டமைப்பும் இணைந்து இரகசிய உடன்படிக்கையொன்றைச் செய்துள்ளார்களாம். மற்றும் பொது வேட்பாளர் மைத்திரியும் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளும் சிங்கப்பூரில் சந்தித்துள்ளார்களாம் என்று அமைச்சர் நிமல் டி சிறிபால தெரிவித்துள்ளார்.

எனவே பொது வேட்பாளர் அணி நாட்டை பிளவுபடுத்தப் பார்க்கின்றார்கள் என்று சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பரப்புரையை எடுத்து விடுகின்றார்கள். இப்படி இல்லாத ஒன்றை கட்டுக் கதையாக நாட்டில் அரசு பரப்பி வருகின்றது. இப்படியான பரப்புரைகளை நாட்டில் பரப்பினால் சிங்கள மக்களின் வாக்குகள் மஹிந்தருக்கு அதிகரிக்கலாம் என்ற கணக்கில்தான் அரசு உள்ளது.

கிழக்கில் மஹிந்தர்

மஹிந்தர் கடந்த வாரம் கிழக்கில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வென்றிருந்தார். திருகோணமலை. மட்டக்களப்பு. அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை செய்து வருகின்றார். கிண்ணியா, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய இடங்களில் மஹிந்தரின் பரப்புரைக் கூட்டங்களில் பெருமளவு மக்கள் கலந்து கொள்ளவில்லை.

அதனால் மஹிந்தர் பெரும் கவலையுடன் பரப்புரை மேடையை விட்டுவெளியேறி வருகின்றார். கிழக்கில் பல இடங்களில் மஹிந்தரின் பரப்புரைக் கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பதைக காணக் கூடியதாகவுள்ளது.

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா அமெரிக்கா

இலங்கைத் தேர்தலை மிகவும் உன்னிப்பாக இந்தியாவும் அமெரிக்காவும் அவதானித்துக் கொண்டிருக்கின்றன. தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துமாறு இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அறிய வருகின்றது.

சுதந்திரம் மற்றும் நீதியான சூழலை இல்லாமல் செய்யாது அதனைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மற்றும் இந்தியாவுக்கான தூதுவர்கள் ஆகியோர்கள் இந்த இராஜதந்திர வேண்டுகோளை விடுத்துள்ளதாக ஒரு இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புது டெல்லியில் இருந்து கிடைத்த செய்தியை இந்திய உயர்ஸ்தானிகர். யஸ்வந்த் சிங்கா ஜனாதிபதியின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக அறிய வருகின்றது. அதே போன்று அமெரிக்கத் தூதுவரும் அரசிடம் இப்படியான கோரிக்கையொன்றை கொடுத்துள்ளாராம்.

குறிப்பாக வடக்கு மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு அரிசிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நட்பு ரீதியான இராஜதந்திர செய்தியாக இந்த நாடுகள் தமது இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

ஆனாலும் முன்னாள் ஜனாதிபதியும் பொது எதிரணியின் பிரதானியுமான சந்திரிகா கடந்த மாதங்களாக இலங்கையிலுள்ள இராஜதந்திரிகளைச் சந்தித்து வந்தார். குறிப்பாக அமெரிக்கா. பிரித்தானியா. இந்தியா மற்றும் பல மேற்குலக நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து வந்தார்.

தேர்தலில் முறைகேடுகள் அதிகளவு நடைபெறும் என்றும் அவைகளைத் தடுக்க உதவ வேண்டும் என்ற கோணத்தில்தான் சந்திரிகா வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து வந்தார் என்ற தகவல்கள் உள்ளது.

இதே நேரம் பொலன்னறுவை மாவட்டத்திற்கு 9 இராணுவ அணிகள் கடந்த அவாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. பொலன்னறுவை மாவட்டத்தில் மைத்திரிக்கான வாக்களிப்பைத் தடுப்பது மற்றும் கள்ள வாக்களிப்பில் ஈடுபடுவது மற்றும் முறகேடான வாக்களிப்பில் இராணுவத்தை அரசு பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனாலும் நாட்டில் ஒரு இராணுவ ஆட்சி கொண்டு வரப்படுவதற்கான மிக அதிக வாய்ப்புகள் நெருங்கியுள்ளது என்பதை மட்டும் அழுத்திச் சொல்கின்றோம்.

எம்.எம்.நிலாம்டீன்.
mmnilamuk@gmail.com

0 Responses to அமையப்போவது மைத்திரி ஆட்சியா இராணுவ ஆட்சியா? - எம்.எம்.நிலாம்டீன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com