Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மார்டின் வீதியிலுள்ள லின்டன்ட் கஃபே கட்டடத்துக்கு மேலே உள்ள விடுதியில் இன்று திங்கள் காலை 9.30 மணி முதல் 20 பொது மக்களை இனம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார்.

அவுஸ்திரேலிய நேரப்படி செவ்வாய்க் கிழமை அதிகாலையில் போலிசார் குறித்த கட்டடத்துக்குள் அதிரடியாக நுழைந்து பிணைக் கைதிகளை விடுவித்ததாகவும் தற்போது இந்த அபாயம் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அவுஸ்திரேலியாவின் ABC ஊடகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியப் போலிசாரின் இந்த அதிரடி நடவடிக்கையில் இருவர் பலியானதாகவும் 3 பேர் படுகாயம் அடைந்து மோசமான நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கையின் போது குறித்த கஃபே கட்டடத்தில் இருந்து 7 பேர் ஸ்ட்ரெச்செர் மூலம் வெளியேற்றப் பட்டதுடன் இதில் 5 பேருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை அமெரிக்க அரச தரப்பில் தெரிவிக்கப் பட்ட செய்தியின் அடிப்படையில் பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி மான் ஹரொன் மொனிஸ் என அடையாளப் படுத்தப் பட்டுள்ள போதும் அவுஸ்திரேலியப் போலிசின் அதிரடி நடவடிக்கையில் இவருக்கு என்ன ஆனது என்றோ அல்லது எத்தனை போலிசார் இந்த ஆப்பரேஷனில் காயம் அடைந்தனர் என்றோ ஊடகங்களுக்கு இதுவரை செய்திகள் வெளியிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த கட்டடப் பகுதியைச் சுற்றி ஸ்னைப்பர் போன்ற துப்பாக்கிகளுடன் நூற்றுக் கணக்கான போலிஸ் அதிகாரிகள் சிட்னியின் மத்திய வணிக மாவட்டத்தில் அமைந்திருந்த இந்த லின்ட் சாக்லெட் கஃபே சுற்றி வளைத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப் பட்ட மக்கள் கஃபேயின் யன்னல் கண்ணாடிகளில் கையை அழுத்தி வைத்திருந்தததுடன், 'உலகில் கடவுள் மற்றும் அவரின் தூதரான மொஹம்மெட் தவிர வேறு கடவுள் கிடையாது!' என்ற அரபு மொழியிலான வாசகம் அடங்கிய கறுப்புக் கொடியும் அவர்களது கையில் திணிக்கப் பட்டிருந்தது. இதேவேளை போலிசார் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கு முன் 5 பிணைக் கைதிகள் தாமாகவே தப்பித்து வெளியே வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிதாரியான மொனிஸ் இன் நோக்கம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை என்ற போதும் தனியாளாகவே இவனால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டிருந்தது என அமெரிக்க சட்ட மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்திருந்தன. மேலும் இரவான பின்னர் கஃபேயின் மின் விளக்குகள் அணைக்கப் பட்டு ஃபிளாஷ் பேங் கிரைனேட்டுக்கள் உள்ளே எறியப் பட்டு மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டிருந்தது. இந்த நடவடிக்கையின் போது உள்ளே எத்தனை அப்பாவி மக்கள் இருந்தனர் என்ற தகவலும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப் படவில்லை. பொது மக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்த இந்த திடீர் சம்பவத்தால் அவுஸ்திரேலிய மக்கள் தமது பாதுகாப்புக் குறித்து மனக் கலக்கம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிட்னி கஃபே பிணைக் கைதிகள் அனைவரும் போலிசாரால் விடுவிப்பு: இருவர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com