Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் இனப் படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்சே டிசம்பர் 9 ஆம் தேதி திருப்பதிக்கு வந்து, 10 ஆம் தேதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறானாம்.

பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, வான்வெளிக் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட குண்டுகளையும் வீசியும், நவீன ஆயுதங்களாலும் கொடூரத் தாக்குதல் நடத்தியும், கோரப் படுகொலைகளைச் செய்த மாபாவியுடன் நரேந்திர மோடி அவர்களின் இந்திய அரசு கொஞ்சிக் குலாவுகிறது. மத்திய அரசு கொடுக்கின்ற ஊக்கத்தினால்தான் இப்போது திருப்பதிக்கு வரப் போகிறான்.

மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு ராஜபக்சே வந்தபோது, தமிழகத்தில் இருந்து 1200 பேருடன் சென்று பட்சி சோலையில் பகலிலும் இரவிலும் நெடுஞ்சாலையில் அறப்போர் நடத்திக் கைதானோம். அதன்பின்னர் புது தில்லியில் பிரதமரைச் சந்திக்க வரப்போவதை அறிந்த 48 மணி நேரத்திற்குள் டெல்லிக்குச் சென்று பிரதமர் வீட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். எனவே தில்லிக்கு வராமல் பீகாரில் இருந்தே திரும்பிப் போனான்.

முன்பு திருப்பதிக்கு வந்தபோது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் காவல்துறையின் கெடுபிடிகள் தடைகளைக் கடந்து மகிந்தனுக்குக் கருப்புக்கொடி காட்டினார்கள்.

1750 இந்துக் கோவில்களை இலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் உடைத்து நொறுக்கிய காட்டுமிராண்டி வேலை செய்த கூட்டத்தின் தலைவன்தான் மகிந்த ராஜபக்சே. தமிழ் இனத்தின் அடையாளமே அந்தத் தீவில் இல்லாமல் செய்துவிட அனைத்து அக்கிரமங்களையும் செய்கின்ற இராஜபக்சே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்று சில சோதிடர்கள் கூறிய யோசனையின் பேரில் இங்கு வருகிறான். ஏழுமலையானை வழிபடும் இந்துக்களையும் தமிழர்களையும் அங்கே அழிக்கிறான். இங்கே வெங்கடாசலபதி தரிசனத்திற்கும் வருகிறான்.

இராஜபக்சே வருகையை மத்திய அரசு ரகசியமாக வைத்து இருக்கின்றது.

இந்தியாவிற்குள் இராஜபக்சே என்றைக்கு வந்தாலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அவனது வருகையை எதிர்த்து அறப்போர் நடத்தும் என அறிவித்து இருக்கிறோம். எனவே, 9 ஆம் தேதி அன்று திருப்பதிக்கு வரும் இராஜபக்சேயை எதிர்த்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி அவர்கள் தலைமையில், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் முன்னிலையில் கருப்புக்கொடி அறப்போர் நடைபெறும்.

கழகத் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்!

0 Responses to கொலைகாரன் ராஜபக்சே திருப்பதி வருகிறான் ம.தி.மு.க. கருப்புக்கொடி அறப்போருக்கு அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com