Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாக வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதி மோதல்களின் போது ஏராளமான தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்கள். அச்சமயத்தில் சிலர் அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, “இனப்படுகொலை என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பது வடக்கு மாகாண முதலமைச்சரும், உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு நன்றாகவே தெரியும். கடந்த முறை இதே தீர்மானம் மாகாண சபையில் வந்தபோது அதை ஏற்றுக்கொள்ளாத அவர், இப்போது எப்படி அதை ஏற்றார்? இறுதி மோதல்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க, சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய, ஏற்புடைய வகையில் உள்நாட்டிலேயே விசாரணையொன்றை அரசு நடத்தவுள்ளது. விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் பொதுமக்களை போரின் போது மனிதக் கேடையங்களாகப் பயன்படுத்தியதுதான், இறுதி மோதல்களின் போது ஏற்பட்ட பெருமளவு உயிரிழப்புகளுக்கு காரணம்.” என்று பதிலளித்துள்ளார்.

இறுதி மோதல்களின் போது இடம்பெற்றது இனப்படுகொலைகளே என்று வலியுறுத்தும் தீர்மானமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to இனப்படுகொலை இடம்பெறவில்லை; வடக்கு மாகாண சபைத் தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com