Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருக்காவிட்டால், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இராஜினாமாச் செய்யவைத்து அதனூடாக பாராளுமன்றம் வந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்தார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளதாவது, “தேர்தல் காலத்தில் ரி56 துப்பாக்கி கலாசாரத்தை கடைப்பிடித்தவர்கள் தற்பொழுது தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் குறித்து பேசுவது நகைப்புக்கிடமானது. தேர்தல் காலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு நீலப்படையணிக்குத் தலைமை தாங்கியவரே பொறுப்புக்கூற வேண்டும்.

குறிப்பாக அம்பாந்தோட்டையில் தேர்தலுக்குப் பின்னரான வன்முறை இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறிய கருத்து முழுப் பொய்யானது. அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு நீல படையணிக்குத் தலைமைதாங்கியவரே காரணம். அம்பாந்தோட்டையில் எமக்கு கூட்டமொன்றை நடத்த முடியாது. கூட்டம் நடத்தும் இடத்துக்கு வந்து வாகனத்தைநோக்கி வெடிவைத்து அச்சுறுத்திச் சென்றனர்.

ஆனால் தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் அம்பாந்தோட்டை வீடு, நீலப்படை யணியின் அலுவலகம், சபா நாயகரின் அலுவலகம், மஹிந்த அமர வீரவின் வீடு உள்ளிட்ட அனைத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பை வழங்கினோம். ஆனால் தேர்தல் காலத்தில் எனது வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரியபோதும் முன்னாள் ஆட்சியாளர் கள் அதனை வழங்கவில்லை. இதுவே நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மாற்றமாகும்.

அம்பாந்தோட்டையின் பெலியத்தை உள்ளிட்ட இடங்களில் இன்னும் உத்தியோகபூர்வமற்ற ஆயுத களஞ்சியங்கள் உண்டு. இவற்றில் ரி56 துப்பாக்கிகள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” என்றுள்ளார்.

0 Responses to எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்தார்: சஜித் பிரேமதாஸ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com