Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாங்கள் தற்போது அனுபவிப்பது தோல்வியல்ல. இது தாய்நாட்டுக்கு செய்யப்பட்டு வருகின்ற சூழ்ச்சிகளின் பிரதிபலிப்பாகும். நாங்கள் எந்த நேரத்திலும் எதனையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவிக்கக் கோரும் கூட்டமொன்று நுகேகொடவில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. குறித்த கூட்டத்துக்கு அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில், "நாங்கள் தற்போது அனுபவிப்பது தோல்வியல்ல. இது தாய்நாட்டுக்கு செய்யப்பட்டு வருகின்ற சூழ்ச்சிகளின் பிரதிபலிப்பாகும். நாங்கள் எந்த நேரத்திலும் எதனையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். அரசியலில் அவமானம் என்பது பழக்கமானது. நான் சிறையில் கூட இருந்தவன். நேர்மையான தலைவருக்கு மாத்திரமே கெளரவமான வெற்றி கிடைக்கும். நான் இந்த வெற்றியை அனுபவித்தவன்.

இந்நாட்டை 30 வருட கொடிய யுத்தத்திலிருந்து மீட்டெடுத்தவன். இந்த நன்றியுணர்வு மக்கள் மத்தியின் இன்னும் இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அவ்வாறான சிறந்த நோக்கங்களுடன் செயற்படுகின்றது. இதனால் எமக்கு சிறந்த வெற்றிகளைப் பெறமுடியும். இது எதிர்காலத்திலும் தொடரும். நுகேகொடையில் கூடியுள்ள மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களது கைகளைப் பற்றிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டம் 'வெற்றி கொண்ட நாடு அபாய கட்டத்தில்' என்ற தொனிப் பொருளில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் 'தாய் நாட்டைப் பாதுகாக்கும் கலைஞர்கள் சங்கம்' உள்ளிட்ட பல அமைப்புகளின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான சீ.பி. ரத்னாயக்க, குமார வெல்கம, டி.பி. ஏக்கநாயக்க, மஹிந்த யாப்பா, மணுஷ நாணயகார, டிலும் அமுனுகம மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக கீதான்ஜன குணவர்தன, ஜயந்த கெடகொட, சாலிந்த திஸாநாயக்க, வை.ஜீ.பந்மசிறி, மேல்மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு உரையாற்றிய விமல் வீரவங்ச, "ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியே தற்போது நிலவுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொம்மை போலவே செயற்படுகின்றார். அரச உயர் பதவிகளுக்கும் ஐ.தே.கவின் ஆதரவாளர்களையே நியமித்துள்ளனர். இவர்களின் ஆட்சி தொடருமானால் நிச்சயம் மீண்டும் நாட்டில் விடுதலைப் புலி இயக்கம் தோற்றம் பெறும். அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான ரணில் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்தையும் செய்து கொடுப்பார்.

அண்மையில் வடக்கு மாகாண சபையில் சர்வதேச விசாரணை அவசியம் என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. இவர்களுக்கு இவ்வளவு அதிகாரத்தை ரணிலே வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாது வடக்கில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கு மீண்டும் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்நிலை தொடர விடக்கூடாது. அவ்வாறு தொடருமாயின் வடக்கு, கிழக்குக்கு சுயாட்சி வழங்கப்பட்டு விடும். இவற்றைப் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கமைய எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை களமிறக்கி பிரதமராக்குவதன் மூலம் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து வலுவான ஆட்சியை முன்னெடுக்க முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to நாம் அனுபவிப்பது தோல்வியல்ல; தாய்நாட்டுக்கு செய்யப்படுகின்ற சூழ்ச்சிகளின் பிரதிபலிப்பு: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com