Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குடிநீருக்கான உரிமையைப் பாதுகாக்கக் கோரி கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

சமூக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்பு நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இன்று காலை 09.00 மணிக்கு ஆரம்பித்து 11.00 மணியளவில் நிறைவடைந்தது.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலந்துள்ளதால் அந்தப் பகுதி மக்கள் எதிர்கொண்டிருக்கின்ற குடிநீர்ப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் மற்றும் நீர் மாசடைதலுக்கான காரணங்கள் உடனடியாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தியே இந்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுமார் 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

கவனயீர்ப்பு நிகழ்வில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

1.யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகளின் கலப்பினால் பாதிக்கப்பட்ட கிணறுகளின் எண்ணிக்கை, பாதிப்பின் அளவு, பாதிப்பின் தன்மை போன்றவை தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்த வேண்டும். (இது தொடர்பாக இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் முடிவுகளை, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் உடனடியாகப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும்.)

2.பாதிப்பின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

3.நீர் மாசடைவுக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தாமதிக்காமல், மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.

4.நீர்த்தாங்கிகளில் குடிநீர் விநியோகிப்பது சரியான உடனடித் தீர்வல்ல. மாறாக, கிணற்றை நம்பி வாழும் மக்கள் அன்றாடத் தேவைகளுக்கும் விவசாயத்துக்கும் அதே கிணற்று நீரைப் பயன்படுத்தும் வண்ணம், சுத்திகரிப்புக் கருவிகளை அரசு மக்களுக்கு வழங்க வேண்டும். (கருவிகளை இயக்குவதற்கான எரிபொருளையும் மின்சாரத்தையும் மானியமாக வழங்க வேண்டும். இவற்றுக்கான செலவினை, நீரை மாசுபடுத்தியவர்களிடம் இருந்து அறவிடவேண்டும்.)

5.நீர் மாசினால் ஏற்படக்கூடிய தீங்குகள் தொடர்பில் மக்களுக்குப் போதிய தகவல்களை வழங்கி தொடர்ந்தும் அறிவூட்ட வேண்டும்.

6.உள்நாட்டு- வெளிநாட்டு நிபுணர்களின் உதவியினை உடனடியாகப்பெற்று மாசடைந்த நீரை நீண்டகாலப் பயன்பாட்டுக்குத் தூய்மைப்படுதுவதற்கான செயற்பாடுகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

7.பிராந்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் நீர்மாசடைவு தொடர்பான ஆய்வுகளுக்கும் தீர்வுகளுக்கும் தங்களாலான பங்களிப்புக்களைச் செய்ய உடனடியாக முன்வர வேண்டும்.

8.மத்திய அரசாங்கமும், வடக்கு மாகாண சபையும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் எந்தவித தொய்வுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

9.யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் அடிப்படை உரிமையை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

0 Responses to குடிநீருக்கான உரிமையை வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்பு நிகழ்வு; பெருமளவான மக்கள் பங்கேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com